ஓம் சிவமயம்

எங்கள் குருநாதன்


என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்

இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்

அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்

அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்

முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்

மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்

நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன்

நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன்    1



தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்

சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன்

மோகத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்

முத்திக்கு வித்தென்றா னெங்கள்குரு நாதன்

வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்

விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்

தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்

சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன்    2



வாசியோகந் தேரென்றா னெங்கள்குரு நாதன்

வகாரநிலை அறியென்றா னெங்கள்குரு நாதன்

காசிதேசம் போவென்றா னெங்கள்குரு நாதன்

கங்குல்பக லில்லையென்றா னெங்கள்குரு நாதன்

நாசிநுனி நோக்கென்றா னெங்கள்குரு நாதன்

நடனந்தெ ரியுமென்றா னெங்கள்குரு நாதன்

மாசிலோசை கேட்குமென்றா னெங்கள்குரு நாதன்

மற்றுப்பற்றை நீக்கென்றா னெங்கள்குரு நாதன்    3



இருவழியை அடையென்றா னெங்கள்குரு நாதன்

எல்லாம் விளங்குமென்றா னெங்கள்குரு நாதன்

கருவழியைக் கடவென்றா னெங்கள்குரு நாதன்

கட்டுப்படும் மனமென்றா னெங்கள்குரு நாதன்

ஒருவரும றியாரென்றா னெங்கள்குரு நாதன்

ஓங்கார வழியென்றா னெங்கள்குரு நாதன்

நிருமலனா யிருவென்றா னெங்கள்குரு நாதன்

நீயேநா னென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்    4



திக்குத் திகாந்தமெல்லா மெங்கள்குரு நாதன்

சித்தத்துள் நிற்கவைத்தா னெங்கள்குரு நாதன்

பக்குவமாய்ப் பேணென்றா னெங்கள்குரு நாதன்

பார்ப்பதெல்லாம் நீயென்றா னெங்கள்குரு நாதன்

அக்குமணி யணியென்றா னெங்கள்குரு நாதன்

அஞ்செழுத்தை ஓதென்றா னெங்கள்குரு நாதன்

நெக்குநெக் குருகென்றா னெங்கள்குரு நாதன்

நித்தியன்நீ யென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்    5



தேடாமல் தேடென்றா னெங்கள்குரு நாதன்

சீவன் சிவனென்றா னெங்கள்குரு நாதன்

நாடாமல் நாடென்றா னெங்கள்குரு நாதன்

நல்லவழி தோன்றுமென்றா னெங்கள்குரு நாதன்

பாடாமற் பாடென்றா னெங்கள்குரு நாதன்

பத்தரினஞ் சேரென்றா னெங்கள்குரு நாதன்

வாடாமல் வழிபடென்றா னெங்கள்குரு நாதன்

வையகத்தில் வாழென்றா னெங்கள்குரு நாதன்    6



தித்திக்கு மொருமொழியா லெங்கள்குரு நாதன்

சின்மயத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன்

எத்திக்கு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்

எல்லாம்நீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்

வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குரு நாதன்

விண்ணவரு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்

தத்துவா தீதனானா னெங்கள்குரு நாதன்

சகலசம் பத்துந்தந்தா னெங்கள்குரு நாதன்    7



ஆதியந்த மில்லையென்றா னெங்கள்குரு நாதன்

அதுவேநீ யென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்

சோதிமய மென்றுசொன்னா னெங்கள்குரு நாதன்

சிட்டிறந்து நில்லென்றா னெங்கள்குரு நாதன்

சாதி சமயமில்லா னெங்கள்குரு நாதன்

தானாய் விளங்குமென்றா னெங்கள்குரு நாதன்

வாதியருங் காணவொண்ணா னெங்கள்குரு நாதன்

வாக்கிறந்த இன்பந்தந்தா னெங்கள்குரு நாதன்    8



முச்சந்திக் குப்பையிலே எங்கள்குரு நாதன்

முடக்கிக் கிடந்திடென்றா னெங்கள்குரு நாதன்

அச்சமொடு கோபமில்லா னெங்கள்குரு நாதன்

ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்

பச்சைப் புரவியிலே எங்கள்குரு நாதன்

பாங்காக ஏறென்றா னெங்கள்குரு நாதன்

தச்சன்கட்டா வீட்டிலே எங்கள்குரு நாதன்

தாவுபரி கட்டென்றா னெங்கள்குரு நாதன் 9



நாமேநா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்

நமக்குக்குறை வில்லையென்றா னெங்கள்குரு நாதன்

போமேபோம் வினையென்றா னெங்கள்குரு நாதன்

போக்குவர வில்லையென்றா னெங்கள்குரு நாதன்

தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குரு நாதன்

சங்கற்ப மில்லையென்றா னெங்கள்குரு நாதன்

ஓமென் றுறுதிதந்தா னெங்கள்குரு நாதன்

ஊமையெழுத் தறியென்றா னெங்கள்குரு நாதன்    10

 

கேட்க: என்னையெனக்கறிவித்தான் எங்கள் குருநாதன் பாடியவர்: பொன். கணேசலிங்கம்

Yogaswami's Main Page Next thought

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top