Sir Mutthu Coomaraswamy (1834 - 1879)

சைவ சித்தாந்தம் பரப்பிய முன்னோடியான

சேர் முத்து குமாரசுவாமி
 

சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர், இலங்கையின் தவப் புதல்வரான முத்துக் குமாரசுவாமி ஆவர். 1857 ஆம் ஆண்டு மாட்சிமை பொருந்திய ஆசியச்சங்கத்தின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளையில் "சைவசித்தாந்தச் சுருக்கம்" எனும் ஒரு கட்டுரையினை வாசித்து விளக்கியுள்ளார்.

இக்கட்டுரை அச்சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞரான முத்துக் குமாரசுவாமி தமது 24 வது வயதில் இக்கட்டுரையை எழுதி அச்சபையில் விளக்கியுள்ளார். 1860 ஆம் ஆண்டு "இந்து சமயம்" என்ற கட்டுரை அதே சபையில் வாசிக்கப்பட்டு சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தாம் ஒரு இங்கிலாந்து வழக்கறிஞர் (Barrister) ஆவதற்கு இங்கிலாந்து சென்ற போதும் தமது சமயத்திலும் தத்துவத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு குறையவில்லை எனலாம். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனை மாட்சிமை தங்கிய விக்ரோறியா மகாராணியாருக்கு அர்ப்பணித்தார். பின்னர் அக்கதையை ஆங்கிலத்தில் நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். விக்ரோறியா மாகாராணியாரின் பாராட்டு முத்துவுக்குக் கிடைத்தது. அரசியாரால் "சேர்" எனும் பட்டம் முத்துக் குமாரசுவாமிக்குச் சூட்டப்பட்டது. ஆங்கில மொழிப் பேச்சுத் திறனுக்கும் நடிப்புக் கலைக்குமாக இக்கௌரவம் கொடுக்கப்பட்டதாக இலண்டனில் வெளிவந்த Illustrated London News பத்திரிகை மூலம் அறிகிறோம். இலங்கையில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே முதன் முதல் "சேர்" பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் முத்துக்குமாரசுவாமி!

'அரிச்சந்திரன்' நாடகமாக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அதன் அநுபந்தமாக 'சைவசித்தாந்தச் சுருக்கம்' என்ற கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. இதனைப் பல மேனாட்டவர்களும் வாசித்து எமது தத்துவத்தினை அறிய நேர்ந்தது.

சேர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் இலண்டனில் உள்ள கலைக் கூடங்களில் (Arts Councils) தொடர்ச்சியாகச் 'சைவ சித்தாந்தம்' பற்றியும் 'இந்தியத் தத்துவம்' பற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றியபோது அங்குள்ள அரசியல் அறிஞர்களும் கல்விமான்களும் அவரின் உரையினை செவிமடுப்பதற்குச் சென்றார்கள். இங்கிலாந்தின் பிரதமர்களான Lord Palmerston, Benjamin Disraeli, மற்றும் கவிஞர் Alfred Tennyson, கவிஞர் Matthew Arnold ஆகியோர் உட்படப் பலர் சென்று கேட்டார்கள்.

சேர் முத்துவின் ஆங்கிலச் சொல்லாட்சியினை மெச்சி அவர்கள் அவரை "கிழக்கின் மிகச் சிறந்த நாவன்மை படைத்தவர்" (The Silver tongued Orator of the East) என்று அழைத்தனர்.

சுவாமி விவேகாநந்தர் 1863 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பினார். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சேர் முத்துக் குமாரசுவாமி எமது சமயத்தத்துவத்தினைப் பரப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதன்றோ!

சேர் முத்துக் குமாரசுவாமி இலங்கைச் சட்ட நிரூபண சபையில் (Legislative Council) தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்து 17 ஆண்டுகள் சேவை புரிந்தவர். இவரின் தந்தையாரான குமாரசுவாமி முதலியாரே முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். சேர் முத்துக் குமாரசுவாமியின் அருமை மைந்தனே கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி (Ananda Coomaraswamy) ஆவர்! சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 04-05-1879 ஆம் திகதி அமரத்துவம் அடைந்தார்.

நன்றி : இந்து ஒளி (Quarterly of All Ceylon Hindu Congress)
 

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top