ஓம் சிவமயம்
அத்துவிதப் பொருள் காப்பாம்
- யோக சுவாமிகள் அருளியது -
அத்துவி தப்பொருள் காப்பாம் - எனக்
கடியார்க ளென்றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் - என்றன்
சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம். (அத்து) 1
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக்
கானந்த மான பராபரன் காப்பாம்
எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக்
கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம். (அத்து) 2
பிராண னபானனுங் காப்பாம் -என்னைப்
பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம்
அராவணி வேணியன் காப்பாம் - எனக்
கருளை யளிக்குங் குருபரன் காப்பாம். (அத்து) 3
பஞ்சாப் புலன்களுங் காப்பாம் - என்னைப்
பரவு மடியவ ரனுதினங் காப்பாம்
குங்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம். (அத்து) 4
சந்திர சூரியர் காப்பாம் - எங்குந்
தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம்
மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு
மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம். (அத்து) 5
கேட்க: அத்துவிதப்பொருள் காப்பாம்
பாடியோர்: சிட்னி சிவதொண்டன் நிலையத்தைச் சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி சோமசுந்தரம், திருமதி புவனம் அருணாசலம், திருமதி பிரேமளா கணேசன்ராஜு, திருமதி அனுஷா தர்மராஜா, திருமதி கேதீஸ்வரி பகீரதன் ஆகியோர்.