சஞ்சலம் வந்தால் வரட்டும்
சஞ்சலம் வராமல் இவ்வுலகில் வாழவும் முடியுமோ? இவ்வுலகிற் பிறப்பதையே பிணியாகச் சொல்லப்பட்டிருக்கிற பொழுது சஞ்சலத்தைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சஞ்சலம் வந்துகொண்டேயிருக்கும். ஆனால், அதனால் பாதிக்கப்பாடாமலிருக்கவும் வழி காட்டப்பட்டிருக்கின்றது. சற்குருவின் கடாட்சத்தாலும் மெய்யறிவைப் பெறுவதாலும் அவ்வழி எதுவெனவறிந்து, அதைக் கடைப்பிடித்தொழுகுவோமாகில், சஞ்சலம் நம்மை அலைக்கவும் முடியாது. அசைக்கவும் முடியாது.
இவ்வுலகதிலோ யாவும் அநித்தியம். இத்தேகம் அநித்தியம். பஞ்சபூதங்கள் அநித்தியம். ஐம்பொறி; ஐம்புலன்கள் அநித்தியம். பெண்டிர்பிள்ளை அநித்தியம். பொருள்பண்டம் அநித்தியம்; சீர்சிறப்பு அநித்தியம். பேர் புகழ் அநித்தியம். அதிகாரமும் செல்வாக்கும் அநித்தியம். எல்லாம் அநித்தியம். ஆகையால், இவைகளில் மயங்கிப் பற்று வைப்பது சஞ்சலத்துக்கிடமாகும். இவை நாமல்ல. இவை நமக்கந்நியமானவை. கருமம் புரிவதற்கு இவைகள் உபயோகப்படுவன. அவைகளை அந்த உபயோகத்துக்குதவக்கூடிய நிலையில் வைத்துப் பேணவேண்டியது முறை. ஆனால் அவை நமக் கென்றும் வேண்டியவையுமல்ல. நம்மைவிட்டுப் பிரியாது என்றும் இருப்பவையுமல்ல. ஆகையால், மனத்தை விடயங்களில் அதிகஞ் செல்லவிடுவதால் சஞ்சலத்தை வரவழைப்பதல்லாமல் வேறொரு பிரயோசனமும் பெறமுடியாது.
யாக்கையே நிலையற்றபொழுது யாக்கை சம்பந்தமாக அநுபவிக்கும் சுகங்கள் நிலைத்தாலென்ன, நிலையா விட்டாற்றானென்ன? ஈற்றில் எல்ல்லாம் அநித்தியமாகவே முடிகின்றது. ஆகையால் அநித்திய வஸ்துக்களில் பற்று வைப்பதில் ஒரு சுகமுமில்லை. கடைசியில் எல்லாம் சஞ்சலத்தையே வருவிக்கின்றன. ஒன்றும் பூரணவின்பத்தைக் கொடுப்பதாயில்லை. அவற்றின் சுகம் சிற்றின்பமாகவே முடிகின்றது. சிற்றின்பம் நிலையாத இன்பம். அதன் விளைவு துன்பம். அது நம்மைப் பந்தப்படுத்தும் இன்பம். உலக வாழ்வின் சஞ்சலங்களையெல்லம் கண்ட விவேகி அச் சஞ்சலங்களுக்குக் காரணமாயிருப்பனவற்றை ஒரு பொழுதும் நாடமாட்டான்.
நித்தியா நித்திய விவேகம் ஒன்றுமே மனிதனைச் சஞ்சலத்திலிருந்து மீட்கக்கூடும். நித்தியானந்த நித்திய வஸ்துவாகிய இறை எம்முடன் என்றும் உள்ளது. அது நம்மை விட்டு ஒரு காலத்திலும் பிரியாதது. அதை உணர்வதே வீடு. அதைப் புசிப்பதே பேரின்பம். அதில் சொக்குவதே இறவா இன்பம். அது குணங்குறியற்றது. அது ஒரு மாதிரியிலுமில்லை. அது ஆச்சிரமங்களில் தங்கியிருக்கவில்லை. சாதி, சமயம், தொழில் முதலிவைகளாலுண்டாகும் பேதங்களில் அது தங்கியிருக்கவில்லை. எல்லோருக்குஞ் சமபாகமாயுள்ளது. எவரொருவருக்குஞ் சொந்தமானதன்று. எல்லாவற்றையும் மறந்து அதன் நினைவு ஒன்றேயிருந்தால் போதும். ஒரு துகாமும், ஒரு சஞ்சலமும் நம்மைப் பாதிக்கமுடியாது.
கடவுள் ஒருவரே நித்திய வஸ்து. நாம் வேறு, கடவுள் வேறு எனுமெண்ணம் நமக்கொரு காலத்திலும் இருக்கப்படாது. நம்முடையதென்று ஒன்றையும் வைத்திருக்கப்படாது. நமது உடல், பொருள், ஆவி மூன்றையும் அவரிடத்தே ஒப்படைத்துப் போடவேண்டும். நான் என்ற நினைவேயிருக்கப்பாடாது. எல்லாம் அவருடையதாய் விட்டு விட வேண்டியது. தனம், தானியம், பூமி முதலிய சகல சம்பத்தும் அவரால் நமக்களிக்கப்பட்டன. எல்லாம் அவருடையது. நமக்கென்று எதுவிருக்கின்றது? நம்முடன் கூட வந்ததெது? நம்முடன் கூடப்போவதெது? ஒன்றுமேயில்லை. எல்லாம் வந்தவாறு ஏதோ மாயமாய்ப் போய் விடும். ஆகையால் நிலையற்ற பொருட்களில் மனத்தைச் செல்லவிடுவது சஞ்சலத்துக்கிடமாகும். அவற்றில் பற்று வைப்பது தவறு. ஏதுமொரு காலத்தில் அவைகள் நம்மை விட்டுப்பிரியவேண்டி வரும். அப்பொழுது சஞ்சலத்துக்கிடமாகும். பரம் ஒன்றே எக்காலத்தும் நம்மைவிட்டுப் பிரியாமலிருக்கின்றது. அது நித்தியமான பொருள். பண்டும், இன்றும், என்றும் அது நம் உயிருக்குயிராய் நம்மறிவினுக்கறிவாய், நம்மை விட்டுப் பிரியாதிருக்கின்றது. வாழ்விலும் தாழ்விலும் இன்பிலும், துன்பிலும், இறப்பிலும், பிறப்பிலும் நம்முடன் எக்காலத்துங் கூடவேயிருக்கின்றது. நமக்கு என்றும் வழிகாட்டுவதும் அதுவே. அதன் சந்நிதானத்தை விட்டு ஒரு காலமும் விலகமுடியாது. அஃது அப்படியேயுள்ள காரியம். எப்பவோ முடிந்த காரியம்.
எல்லாம் சிவன் செயல். உலகமெல்லாம் இறைவன் சந்நிதானம் - இறைவனுடைய சந்நிதானத்தில் ஒரு பிழையுமுண்டாகாது. எங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப்பட வேண்டியதில்லை. எதைக் கடவுள் நமக்குக் கொடுக்கிறாரோ அதை நாம் சந்தோஷமாக ஏற்க வேண்டியது. கடவுளுடைய ஆசீர்வாதம் நமக்கெப்பொழுதும் உண்டு. அதைப்பற்றி நமக்குச் சற்றேனும் ஐயமிருக்கப்படாது. சில காரியங்கள் நமக்கு விளங்காமலிருக்கலாம். அதையிட்டு நாமேன் கவலைப்படவேண்டும்? எல்லாம் கடவுளுடைய சித்தத்தின்ப்டி நடந்துகொண்டு போகின்றன. நாமுன்றுமறியோம். எல்லாம் அவர் அறிவார். எமது கடன் பணி செய்து கிடப்பதே. இறைவன் சந்நிதானத்தில்நாம் என்றுமிருப்பதால் நமக்கொரு குறையுமில்லை. நமது செயல் ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல் எனும் உணர்ச்சி நாளாந்தம் வளர்ந்துகொண்டு போக 'ஒரு பொல்லாப்பும் இல்லை' எனும் மகா வாக்கியத்தின் உண்மையை நாம் உணரக்கூடியதாய் வரும். திடபக்தி வேண்டும். கடவுளிலே பூரண விசுவாசமிருக்க வேண்டும். அதவிடச் சிறந்த கவசம் வேறொன்றுமில்லை. என்ன வந்தாலும் அசையாமலிருக்கப் பழகவேண்டு.
"சஞ்சலம் வந்தாலும் வரட்டும் - வேல் வேல்
சற்றும் அலையாமல் சாந்தத்தில் கட்டு - ஒரு பொல்லாப்புமில்லை"
(இக்கட்டுரை சிவயோக சுவாமிகளின் ஆணைக்கு அமைய 'சிவதொண்டன்' இதழில் வெளிவந்தது)