நாவலரும் ஈழத்தமிழ் இலக்கியமும்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்தமிழரின் சமய கலாசார தனித்துவத்தைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடுபட்ட ஆறுமுகநாவலர் ஈழத்து இலக்கியப் பற்றுக் கொண்டிருந்தவர். 1856-ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட 'நல்லறுவுச் சுடர் கொழுத்தல்' என்ற பிரசுரத்தில் இதனை அவதானிக்கலாம். சி.வை.தாமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராசாமி முதலியார் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே 'நல்லறிவுச் சுடர் கொழுத்தலில்' ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.
நன்றி: eelanatham.yarl.net