ஆறுமுகநாவலர் பற்றி பெரியார்கள்
அமரர் கல்கி
ஈழ நாட்டில் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறினார்கள். தமிழகத்தோடு எப்போதும் தொடர்பு கொண்டிருந்தார்கள். தமிழையும் தமிழர் நாகரிகத்தையும் சமயத்தையும் வளர்த்தார்கள்.
சில காலமாகத் தமிழ் மறுமலர்ச்சி என்பது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம். தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் என்று பலருடைய பெயர்களும் சொல்லப்படுகின்றன. ஆனால் உண்மையில் தமிழ் மறுமலர்ச்சிக்கு ஆதிகாரண புருஷர் யார் என்று ஆராய்ந்து பார்த்தோமானால் அவர் ஈழ நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ ஆறுமுக நாவலர் என்பது தெரியவரும்.
பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையைவிட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி கண்ட பெரியார் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்.
ஆதாரம்: அமரர் கல்கி, யார் இந்த மனிதர்கள்? (கட்டுரைத் தொகுதி), வானதி பதிப்பகம், அக்டோபர் 1998
எஸ். சோமசுந்தர பாரதியார் (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்)
யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் ஒரு அவதார புருஷர். இடையிருட் கடைக்காலத்தில் விடியுமுன் விசும்பில் விளங்கும் வெள்ளிபோலத் தமிழகத்தில் தளரும் சைவமுந் தமிழுந் தழைய அவ்விரண்டிற்கும் புத்துயிர் வழங்கப் பிறந்த வள்ளலாவார். முன்னே பல காலங்களிலும் தமிழகத்திலிருந்து தான் பெற்ற சில சில சிறு நன்மைகளை வட்டியுடன் பெருக்கி, ஒரு காலத்து ஒருமுகமாகப் பழங்கடனைத் தீர்த்து, என்றுந் தீர்க்கொணாவாறு தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி நாவலரென்றால் மிகையாகாது'"
மீனாட்சிசுந்தரம் பிள்ளை (திருவாவடுதுறையாதீன மகாவித்துவான்)
கந்தவே டவத்திற் கருதரன் பான்முன்
வந்தவே ளென்ன வந்தவ தரித்தோ னீற்றொடு கண்மணி நிறையப் பூண்பார்ப் போற்றோடு பொலியும் புண்ணிய புருட னவநெறி யாய வலைத்துங் களைந்து சிவநெறி வளர்க்குந் திப்பிய குணத்த னெழுத்து முதலாக வியம்பிலக் கணமும் வழுத்திலக் கியமும் வரம்புகள் டெழுந்தோன் சமயம் விசேடந் தகுநிரு வாணமென் றமையுத் தீக்கையு மடைவுறப் பெற்றோர் சுமங்கல விசேடச் சுருதியா மூலா கமங்களின் முப்பொருள் கருதுபே ரருளான் யுத்தியி னமைத்துணர்ந் தோங்க னுபூதி சித்தியுற் றமைந்த சிவசிந் தாமணி கற்றுணர் புலவருட் களிக்கு முற்றுண ராறு முகநா வலனே.