நாவலரும் கீரிமலைச் சிவன் கோயிலும்
ஈழத்துச் சிவாலயங்களின் பண்டைய வரலாற்றை நாவலர் நன்கு அறிந்திருந்தார். மாதோட்டம், கீரிமலை போன்ற இடங்களில் முன்பு இருந்த சிவன் கோவில்கள் அழிவுற்ற வரலாற்றை அவர் அறிந்திருந்தார். முன்னர் சிவாலயங்கள் இருந்த இடங்களில் புதிதாகக் கோவில் கட்ட விழைந்தார். திருக்கேதீச்சரம் பற்றி யாழ்ப்பாணச் சமயநிலை (1872) என்ற வெளியீடு மூலம் சைவ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கீரிமலைச் சிவன் கோவிலை மீண்டும் கட்டுவதர்குரிய காலமும் இடமும் பற்றிச் சோதிட வல்லுநர் இரகுநாதையருடனும் அராலிச் சிற்பாசாரியார் அ. சுவாமிநாதருடனும் நாவலர் கலந்தாலோசித்தார். அவ்வுத்தமோத்தம சிவதருமத்தின் பொருட்டு பொது மக்களின் பொருளுதவியை நாவலர் நாடினார். 1878 வைகாசித் திங்கள் 24 ஆம் நாள் கீரிமலைச் சிவன் கோவில் என்னும் தலைப்பில் துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டார். (இத்துண்டுப் பிரசுரம் நாவலர் சிவபதமடைந்தபின் 1880 ஐப்பசி 25 ஆம் திகதிய உதயபானு பத்திரிகையில் மறுபிரசுரஞ் செய்யப்பட்டது).
நாவலர் கீரிமலையில் சிவாலயம் அமைக்க எடுத்த முயற்சி நிறைவேறுமுன் அவர் சிவபதமடைந்து விட்டார். அவர் சிவபதமடைந்த சில ஆண்டுகளின்பின் சைவ உதயபானு, இலங்கைநேசன் முதலிய செய்தித்தாள்கள் அவர் வழியில் சென்று விடுத்த விளம்பரங்களினால் சைவமக்கள் விழிப்புற்று இவ்வாலயப் பணியை நிறைவேற்றினர்.
பதிவு: 6 பெப்ரவரி 2006