நாவலரும் சைவாலயங்களும்
நாவலர் சைவாகமங்களை எழுத்தெண்ணிப் படித்திருந்தார். ஆலயப் பிரதிட்டை, விக்கிரகந் தாபித்தல், பூசை, திருவிழா முதலியனவற்றை ஆகமவிதிகளுக்குப் புறம்பாக நடத்தினோரை வன்மையாகக் கண்டித்தார். பெரியபுராணம் மீதும், அதிற் போற்றப்பட்டுள்ள அடியார்கள் மீதும் பெருமதிப்புக் கொண்டவர். வேறெவரையும் அவ்வடியார்களுடன் ஒப்பிடுவதைச் சகிக்காதவர். சிவாகம நிந்தையைக் கண்டித்து சைவத்துறை விளங்கச் செய்தவர். இவை காரணமாகவே நல்லூர்க் கந்தசுவாமி கோவில் நிருவாகி, சிதம்பர தீட்சிதர்கள், இராமலிங்க சுவாமிகள் போன்றவர்கலின் செயற்பாடுகளிக் கண்டித்தவர். கண்ணகி வழிபாட்டை நிராகரித்தவர்.
நக்கீரக் கொள்கை படைத்த நாவலர், தமக்கு எவ்வளவு வேண்டியவர்களாக இருந்தாலும் குற்றம் எனக் கண்டபோது கண்டிக்கப் பின்நிற்கவில்லை. இந்தியாவிலும் இலங்கையிலும் நாவலரை ஆதரித்துப் போற்றி வந்தவர்களில் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் முக்கிய இடம்பெறுகின்றனர். அவர்கள் வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலுக்குத் தெற்குப் பக்கமாக கதிரேசன் கோவிலொன்றைக் கட்டினர். இதனைக் கண்டித்து, உற்றது கூறுவோன் என்ற புனைப்பெயரில் வண்ணார்பண்ணைக் கதிரேசன் கோவில் என்ற தலைப்பில் 1879 ஆடி மூன்றாம் நாள் இலங்கை நேசன் செய்தித்தாளில் கண்டனம் வெளிப்படுத்தினார்.
குமாரதந்திரம் முதலிய நூல்களிலிருந்து பிரமாணங்கள் காட்டுவதற்கு நாவலருக்கு நிகர் நாவலரே. இதனால் கோவில் கட்டுவிப்போர், கோவில் அறங்காவலர்கள், புசகர், பூசை-திருவிழா ஆகியன நடத்துவிப்போர், சிற்பாசாரியர் முதலிய பல திறத்தினரும் நாவலரின் சவநூற் பிரமாணங் காட்டும் புலமைக்கும் நாவன்மைக்கும் எழுத்துவன்மைக்கும் அஞ்சினர். சிலர் அவர் சினத்திற்கு ஆளாகாமல் தத்தஞ் சமயப்பணிகளை நிறைவேற்ற முயன்றனர்.
இவ்வாறு ஏறுபோற் பீடுநடை போட்ட நாவலர் உதவியைக் கோவில் கட்டுவிப்போர், விக்கிரகம் செய்விப்போர் பலரும் நாடினர். இதுபற்றிய தகவல்கள் அவ்வப்போது செய்தித்தாள்களில் வெளிவந்தன. 1879 ஆம் ஆண்டிலே அரியாலையைச் சேர்ந்த விசுவநாதர் சின்னத்தம்பி என்பவர் தாம் அரியாலை விநாயகர் கோவிலில் பிரதிட்டை பண்ணுவதற்காக அராலி மேற்கு அ. சுவாமிநாதர் என்ற ஆசாரியாரால் செய்யப்பட்ட சபாநாயகர் விக்கிரகம் பின்னமுள்ளதா எனக் கண்டறிய நாவலரின் உதவியை நாடினார். இலங்கைநேசன் பத்திரிகையில் இவ்விவகாரம் பற்றிக் கடிதங்களும் விளம்பரங்களும் எழுதி நாவலர் முதலியோரது தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாகப் பகிரங்கப்படுத்தினார். இவை பற்றிய விபரங்களை 1879 புரட்டாதிக்கும் மார்கழிக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான இலங்கைநேசன் பத்திரிகைகளில் காணலாம். இவ்விவகாரம் பற்றி முடிவெடுக்க அரியாலை விநாயகராலயத்தில் கார்த்திகை முதலாம் திகதி கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. பின்னர் மழை, வெள்ளம் காரணமாக கூட்டம் கர்த்திகை ஆறாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாவலர் கார்த்திகை ஐந்தாம் திகதி சிவபதம் அடைந்தார். ஆகையால் கார்த்திகை ஆறாம் திகதியும் கூட்டம் நடைபெறவில்லை.
பதிவு: 16 பெப்ரவரி 2006