ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்

11 - பொய்

பொய்யாவது உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் சொல்லல். பொய் மிக இழிவுள்ளது. ஒரு பொய் சொன்னவன், அதைப் தாபிக்கப்புகின், ஒன்பது பொய் சொல்லல் வேண்டும். 'நான் சொன்ன பொய்யைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்' என்பானாயின், ஒன்றுடனொழியும். பொய் சொல்லத் துணிகின்றவன் களவு முதலிய தீமைகளைச் செய்தற்கு அஞ்சான். பொய் சொல்லலாகிய பாவமொன்றை ஒழிப்பின், அதுவே வழியாக மற்றைப் பாவங்களெல்லாம் தாமே ஒழிந்துவிடும். பொய்யன் மெய்யைச் சொல்லுகிற பொழுதும் பிறர் அதனை நம்பார். ஆதலால், விளையாட்டுக்காயினும் பொய் சொல்லலாகாது.

மெய் சொல்லுகிறவனுக்கு அதனால் ஒரு கேடு வந்ததாயினும், அவனுள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாகும். அவன் பகைவர்களும் அவனை நன்கு மதிப்பர்கள். பிறராலே நன்கு மதிக்கப்படவும் தன்காரியம் சித்திபெறவும் விரும்புகின்றவன் எப்பொழுதும் தன்மானத்தோடு பொருந்த மெய்யே பேசல் வேண்டும். ஒருவன் தன் மனம் அறிந்ததொன்றைப் பிறர் அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்கக்கடவன். பொய் சொன்னானாயின், அவன் மனமே அப்பாவத்துக்குச் சாக்ஷியாய் நின்று அவனைச் சுடும்.

உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளையும் மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவன். சத்தியமே, மேலாகிய தானமும் தவமும் தருமமுமாம். எவனுடைய புத்தி சத்தியத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத் தன்மையை அடைவன். சத்தியத்தின் மிக்க தருமமும் அசத்தியத்தின் மிக்க பாவமும் இல்லை.

பொய்ச்சான்று சொன்னவரும், பொய்வழக்குப் பேசின வரும், வழக்கிலே நடுவுநிலைமையின் வழுவித் தீர்ப்புச் செய்தவரும், ஏழுபிறப்பில் ஈட்டிய எல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவராவர். பிரமவதையும் சிசுவதையும் தந்தைவதையும் செய்தவராவர். மிகக் கொடிய ரெளரவம் முதலிய நரகங்களை அடைவர். அவரை இயமதூதர்கள் வாயிலே அடித்து, அவருடைய நாக்கையும் அறுத்து, பல துக்கங்களையும் உறுவிப்பார்கள். பின்னும் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக்கை, புழு என்னும் பிறப்புக்களிற் பிறந்து, பின்பு மனிதப் பிறப்பிலே பிறவிக்குருடரும், செவிடரும், குட்டநோயினரும், வாய்ப்புண்ணினரும், ஊமைகளுமாய்ப் பிறப்பர். மிக்க பசிதாகமுடையவராகித் தம் பகைவர் வீட்டிலே தம் மனைவியரோடும் பிச்சையிரந்து உழல்வர்.
 

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(2) அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்க - அறியவில்லையே என்று கருதிப் பொய் சொல்லுதலைச் செய்யாதிருக்க; 'என்று' என்ற வினையெச்சம் 'சொல்லாதிருக்க' என்னும் எதிர்மறை வினையுட் சொல்லுதல் என்னும் பகுதியோடு முடிந்தது. சுடும் - வருந்தும்.

(3) இகத்திலே - இவ்வுலகத்திலே.

(4) பொய்ச்சான்று - பொய்ச்சாட்சி; வழுவி - தவறி; பிரமவதை - பிராமணரைக் கொல்லுங் கொலை; சிசுவதை - குழந்தையைக் கொல்லுதல். (வதை - கொலை).

பதிவு: 1 ஏப்ரல் 2006

Back to Contents

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top