உ
ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
12 - அழுக்காறு
அழுக்காறாவது பிறருடைய கல்வி செல்வம்
முதலியவற்றைக் கண்டு பொறாமையடைதல். பொறாமை யுடையவன் தன்னுடைய துன்பத்துக்குத் தானே
காரணனாகின்றான். அக்கினியினாலே பதர் எரிவதுபோலப் பொறாமையினாலே மனம் எரிகின்றது.
ஆதலினாலே பொறாமையுடையவனுக்குக் கேடு விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டாம். அப்பொறாமை
ஒன்றே போதும்.
பொறாமையுடையவனுடைய மனசிலே ஒருபோதும் இன்பமும்
அமைவும் உண்டாகா. பொறாமையாகிய துர்க்குணம் மனிதனுக்கு இயல்பாகும். அது தோன்றும்
பொழுதே அறிவாகிய கருவியினால் அதைக் களைந்துவிடல் வேண்டும்; களைந்துவிட்டால், அவன்
மனசிலே துன்பம் நீங்க இன்பம் விளையும். பொறாமையுடையவனிடத்தே சீதேவி நீங்க, மூதேவி
குடிபுகுவள். பொறாமையானது தன்னையுடையவனுக்கு இம்மையிலே செல்வத்தையும் புகழையும்
கெடுத்து, எல்லாப் பாவங்களையும் விளைவித்து, அவனை மறுமையிலே நரகத்திற்
செலுத்திவிடும்.
குறிப்புரை: [இங்கு வரும் எண்கள்
பாடப்பந்தி(paragraph) எண்கள்]
அழுக்காறு: 'அழுக்கறு' என்னும் பகுதியடியாகப் பிறந்த சொல்;
அழுக்கறு - பொறாமைப்படு.
(1) பதர் - அரிசியாகிய உள்ளீடு அற்ற நெல்; சப்பட்டை
எனவும் வழங்கும்.
(2) அமைவு - நிறைவு, திருப்தி, அமைதி, மன ஆறுதல்; துர்க்குணம் -
தீயகுணம்; கருவி - ஆயுதம்; சீதேவி - இலக்குமி. செல்வம் என்பது தாற்பரியப் பொருள்.
பதிவு: 9 ஏப்ரல் 2006