ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்

13 - கோபம்

கோபத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவனிடத்து உண்டாயினும், அதனைச் செய்யலாகாது. கோபந்தோன்றுமாயின், மனக்கலக்கம் உண்டாகும். அது உண்டாகவே அறிவு கெடும். அது கெடவே, உயிர்கள்மேல் அருள் இல்லையாகும். அது இல்லையாகவே, அவைகளுக்குத் துன்பஞ் செய்தல் நேரிடும். ஆகையால், கோபத்தை எந்நாளும் அடக்கல் வேண்டும்.

யாவனொருவன் தம்மை இழிவாகச் சொல்லிய பொழுது தம்மிடத்து அவ்விழிவு உள்ளதாயின், " இது நமக்கு உள்ளதே" என்று தம்மைத் தாமே நொந்து திருத்தமடைதல் வேண்டும். அப்படிச் செய்யாது கோபித்தாராயின், தமது கோபம் அநீதி என்பது தமக்கே தெரியுமாதலால், தம் மனமே தம்மைக் கண்டிக்கும். தம்மிடத்து அவ்விழிவு இல்லையாயின், 'இவன் சொல்லியது பொய்; பொய்யோ நிலைபெறாது' என்று அதனைப் பொறுத்தல் வேண்டும். நாயானது தன்வாயினாற் கடித்த பொழுது மீட்டுத் தம் வாயினால் அதனைக் கடிப்பவர் இல்லை. கீழ்மக்கள் தம் வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் அவரை வைவரோ? வையார். தமக்குப் பிறர் தீங்கு செய்தபொழுது தாம் அதனைப் பொறுப்பதேயன்றி 'இவர் நமக்குச் செய்த தீங்கினாலே எரிவாய் நரகத்தில் வீழ்வாரே' என்று இரங்குவதும் அறிவுடையவருக்குக் கடன். தன்னை வெட்டிய குடாரத்துக்கும் தனது நறுமணத்தையே கொடுக்குஞ் சந்தனமரம் போலத் தமக்குத் தீமை செய்தவருக்கும் நன்மையே செய்வது அறிவுடையோருக்கு அழகு.

வலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்யாமையால், அதனைத் தடுத்தவிடத்துந் தருமமில்லை. மெலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்தலால், அதனைத் தடுப்பதே தருமம். வலியார்மேற் செய்யுங்கோபம் இம்மையில் அவராலே துன்பமொன்றையே அடைவித்தலாலும், மெலியோர்மேற் செய்யுங்கோபம் இம்மையிலே பழியையும் மறுமையிலே பாவத்தையும் அடைவித்தலாலும், இதுவே மிகக் கொடியதாகும். ஆகவே, கோபம் ஓரிடத்தும் ஆகாதென்பதே துணிவு.

ஒருவனுக்கு அருளினால் உண்டாகும் முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் கொன்று கொண்டெழுகின்ற கோபத்தின் மேற்பட்ட பகை வேறில்லை. ஆதலினாலே, தன்னைத்தான் துன்பமடையாமற் காக்க நினைத்தானாயின், தான் மனத்திலே கோபம் வாராமற் காக்கக்கடவன். காவானாயின், அக்கோபம் அவனையே இருமையினும் கடுந்துன்பங்களை அடைவிக்கும்.


குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(2) யாவனொருவன் - எவனாவது ஒருவன். 'அதனைக் கடிப்பவர் இல்லை' என்பதன்பின் 'அது போல' என்று உவமானபதம் வருவித்துரைக்க; குடாரம் - கோடரி (கோடாலி).

(4) இருமை - இருபிறவி; என்றது இப்பிறவியும் மறு பிறவியுமாகிய இரண்டினை.

பதிவு: 16 ஏப்ரல் 2006

Back to Contents

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top