உ
ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
4 - ஈசுரத்துரோகம்
கடவுளை நிந்தித்தலும், கடவுளை வழிபடும் முறைமையைப் போதிக்குங் குருவை
நிந்தித்தலும், கடவுளுடைய மெய்யடியாரை நிந்தித்தலும், கடவுள் அருளிச் செய்த
வேதாகமங்களை நிந்தித்தலும், இந்நிந்தைகளைக் கேட்டுக் கொண்டிருத்தலும்,
தேவாலயத்துக்கும் மடாலயத்துக்கும் உரிய திரவியங்களை அபகரித்தலும், தேவாலயம், திருமடம், திருக்குளம், திருநந்தனவனம் முதலியவைகளுக்கு அழிவு செய்தலும்,
ஈசுரத்துரோகங்களாகிய அதி பாதகங்களாம். மடாலயமாவது கடவுளை வழிபடுதற்கும், வேதாகமம்
முதலிய நூல்களை ஓதியுணர்தற்கும், கடவுளுடைய
அன்பர்களுக்கு அன்னங் கொடுத்தற்கும் உரிய தானமாம்.
ஸ்நான முதலிய நியமங்களில்லாமல் திருக்கோயிலினுள்ளே புகுதலும், திருக்கோயிலிலும் திருக்குளத்திலும் திருநந்தவனத்திலும் திருக்கோயில் வீதியிலும் மலசலங் கழித்தலும், எச்சிலுமிழ்தலும், திருக்குளத்திலே செளசஞ் செய்தலும், தந்தசுத்தி செய்தலும், அசுசியடு ஸ்நானஞ் செய்தலும் ஈசுரத்துரோகங்களாம்.
குடிகளுக்குச் செய்யும் தீமையிலும் மகாராசாவுக்குச் செய்யுந் தீமை மிகக் கொடியது; அதுபோலவே ஆன்மாக்களுக்குச் செய்யுந் துரோகத்தினும் கடவுளுக்குச் செய்யுந் துரோகம் மிகக் கொடியது. குடிகளுக்குச் செய்த தீமை இராசாவினாலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும். இராசாவுக்குச் செய்த தீமையோ பொறுக்கப்படமாட்டாது. அதுபோலவே ஆன்மாக்களுக்குச் செய்த துரோகம் கடவுளாலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும். கடவுளுக்குச் செய்த துரோகமோ பொறுக்கப் படமாட்டாது. எங்கும் வியாபகமாய் இருந்து எல்லாமறியும் இயற்கை இல்லாதவனாதலால், இராசாவுடைய தண்டத்துக்குத் தப்பினும் தப்பலாம்; எங்கும் வியாபகமாய் இருந்து எல்லாமறியும் இயற்கையை உடையவராதலால், கடவுளுடைய தண்டத்துக்கோ தப்ப முடியாது. ஈசுரத்துரோகம் எவ்வகைப்பட்ட பிராயச்சித்தத்தாலுந் தீராது.
ஈசுரத் துரோகிகளுக்கு, நரகத்திலே இயம தூதர்கள் இரத்தவெள்ளஞ் சிந்தும்படி இருப்புமுளைகளை நெருப்பிலே காய்ச்சி, தலையிலும், கண்களிலும், செவிகளிலும், நாசிகளிலும், வாயிலும், மார்பிலும் அறைந்து, உடம்பு முழுதும் தாமிர முதலிய உலோகங்களை உருக்கிய நீரைச் சொரிவார்கள். மயிர்க்காறோறும் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை அழுத்துவார்கள். அவயவங்கடோறும் இருப்பாப்புக்களை மாட்டுவார்கள். பின்பு நெய் நிறைந்த செப்புக் கடாரத்திலே விழுத்திக் காய்ச்சுவார்கள். ஈசுரத்துரோகிகள் அந்தச் செப்புக் கடார நெய்யிலே சந்திரசூரியர் உள்ளவரையும் குப்புறக் கிடந்து வருந்துவார்கள்.
இப்படி நரகத்துன்பத்தை அனுபவித்தபின், பூமியிலே மலத்திற்கிருமி முதலியவைகளாய்ப் பிறந்திறந்து உழன்று, பின்பு மனிதப்பிறப்பை எடுத்து, வலி, குட்டம், கபம், நீரிழிவு, பெருவியாதி, மூலவியாதி முதலிய மிகக் கொடிய நோய்களினாலும், பசியினாலும் வருந்துவார்கள்.
பதிவு: 27 பெப்ரவரி 2006