உ
ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
7 - புலாலுண்ணல்
புலாலுண்ணலாவது உயிரின் நீங்கிய ஊனைப் புசித்தல், புலால் கொலையினாலே கிடைத்தலால்,
புலாலுண்ணல் கொலைப் பாவத்தின் காரியமாகும். புலாலுண்டவன் பின்னும் கொலை வாயிலாகப்
புலாலை விரும்புதலால், புலாலுண்ணல் கொலைப் பாவத்துக்குக் காரணமுமாகும். இப்படியே
எல்லா விதத்தாலும் புலாலுண்ணல் கொலையோடு தொடர்புடையதாதலால், புலாலுண்பவர்
உயிர்களிடத்து அருளில்லாதவரே. ஆதலால் புலாலைப் புசித்துக்கொண்டு உயிர்களிடத்து
அருளுடையோம் என்பது நடிப்பு மாத்திரமாமன்றி உண்மையாகாது. உலகத்திலே புலாலுண்பவர்
இல்லையாயின், புலாலை விற்றற்பொருட்டு உயிர்க்கொலை செய்பவரும் இல்லை. ஆதலாற் கொலைப்
பாவத்தைப் பார்க்கிலும் புலாலுண்ணலே பெருங்கொடும் பாவம்.
தம்மிலும் உயர்ந்த சாதியார் தாழ்ந்த சாதியாரிடத்தே சலபானம் பண்ணினும், அவரும் தாழ்ந்த சாதியார் என்று அவர் வீட்டிலே சலபானமும் பண்ணாத மனிதர்கள், புலையர்களுடைய மலத்தையும் புசிக்கின்ற பன்றி கோழி முதலியவைகளைப் புசிக்கின்றார்களே! அவர்கள் புலையரினும் தாழ்வாகிய புலையராவர்களன்றி உயர்ந்த சாதியாராகார்கள். அயல் வீட்டிலே பிணங்கிடந்தாலும் போசனஞ் செய்தற்குமனம் பொருந்தாத மனிதர்கள் மிருகம் பக்ஷி முதலியவைகளுடைய பிணத்தைக் கலத்திலே படைத்துக்கொண்டு புசிக்கின்றார்களே! அன்னம் பானீயம் முதலியவைகளிலே மயிர், ஈ, எறும்பு முதலியவைகளுள் ஒன்று விழுந்திருக்கக் கண்டாலும், மிக அருவருத்து உண்ட சோற்றையும் கக்கும் மனிதர்கள் மற்ற மாசிசங்களைப் புசிக்கின்றார்களே! ஊறுகாய் முதலியவைகளிலே ஒரு புழுவைக்கண்டால் அருவருத்துச் சரீரங் குலைந்து அவைகளை எடுத்தெறிந்துவிடும் மனிதர்கள் புழுத்த மாமிசங்களை விரும்பிப் புசிக்கின்றார்களே! தங்களெதிரே ஆடுகள் சிந்தத்தெறித்த கோழை தங்களுடம்பிலே படுதலும், பொறாது மனங் குலையும் மனிதர்கள் அவ்வாடுகளின் மாமிசங்களை விரும்பிப் புசிக்கின்றார்களே! தங்களெதிரே ஆடுகள் சிந்தத்தெறிந்த கோழை தங்களுடம்பிலே படுதலும், பொறாது மனங் குலையும் மனிதர்கள் அவ்வாடுகளின் மாமிசத்தை மூளையோடு மனமகிழ்ந்து புசிக்கின்றார்களே! பூமியில் உள்ள சுடுகாடுகள் மனிதர்களுடைய பிணத்துக்குச் சுடுகாடுகளாயிருக்கும்; மிருகங்களுக்கும் பசுகளுக்கும் மற்சங்களுக்கும் சுடுகாடுகள் சீவகருணையில்லாத மனிதர்களுடைய வயிறுகளேயாம்.
கொலை செய்தவரும், புலாலை விற்றவரும், புலாலை விலைக்கு வாங்கினவரும், புலாலைப் புசித்தவரும், புலால் புசியாதவரைப் புசிப்பித்தவரும், சிலர் சொல்லுக்கு அஞ்சிப் புலாலைப் புசித்தவருமாகிய எல்லாரும் பாவிகளேயாவர். அப்பாவிகளை நரகத்திலே இயமதூதர்கள் அக்கினி சுவாலிக்கும் முள்ளிலமரத்திலே குப்புறப்போட்டு, இருப்பு முளைகளை நெருங்கக் கடாவிய தண்டத்தினாலே முதுகில் அடிப்பார்கள். அதுவன்றிக் குடாரியினாலே கொத்தி, ஈர்வானினால் அறுப்பார்கள்; இரும்பு முதலிய உலோகங்களை உருக்கி, அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். புலாலுண்ணாமையினாலே தங்கள் உடம்பு மெலிகின்றது என்று உண்ணப்புகும் மனிதர்கள், புலாலுண்டு தங்கள் உடம்பைப் பருக்கச்செய்து நரகத்திலே நெடுங்காலம் துன்பம் அநுபவித்தல் நல்லதோ, புலாலுண்ணாமல் தங்களுடம்பை வாட்டி நித்தியமாகிய முத்தியின்பத்தைப் பெற்று வாழுதல் நல்லதோ இதனைச் சிந்திக்கக்கடவர்கள்.
மேற்கூறிய பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பன்றி முதலிய இழிந்த பிறப்புக்களாய்ப் பிறந்திறந்து உழன்று, மனிதப் பிறப்பை எடுத்து, பெருவியாதி, கருங்குட்டம், வெண்குட்டம், நீரிழிவு, கண்டமாலை முதலிய வியாதிகளினாலே வருந்துவார்கள்.
கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களெல்லாவற்றினும் Sநானஞ் செய்தானாயினும், கடவுளைப் பூசித்தானாயினும், எண்ணில்கோடி தானஞ்செய்தானாயினும், ஞான சாத்திரங்களை ஓதி உணர்ந்தானாயினும், புலாலைத் தள்ளாது புசித்தவன் நரகத்தை அடைவன்.
அசரமாகிய மரமுதலியவைகளைக் கொன்று புசித்தல் பாவமாயினும், அவைகள் எழுவகைத் தோற்றத்துள்ளும் தாழ்ந்த பருவத்தை உடையவையாதலால் அக்கொலை யாலாகும் பாவம் சிறிதாகும். அசரபதார்த்தங்களை நாடோறும் கடவுள் அக்கினி குரு அதிதிகள் என்னும் நால்வகையோருக்கும் முன்னூட்டிப் பின்னுண்பானாயின் அவ்வசரக் கொலையால் வரும் பாவமும், உழுதல், அலகிடல், மெழுகுதல், நெருப்பு மூட்டல், தண்ணீர், சுவர்தல், நெற்குத்துதல் முதலிய தொழில்களால் வரும் பாவமும் அவ்வக் காலத்திலே நீங்கிவிடும்.
குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]
1. வாயிலாக - வழியாக. தொடர்பு - சம்பந்தம். நடிப்பு - வெளிப்பகட்டுச் செயல்.
2. பானீயம் - பருகத்தக்க நீர் முதலியன. கோழை - சளி.
3. குடாரி - கோடரி (கோடாலி).
4. கண்டமாலை - கழுத்தைச் சூழ மாலை வடிவாக இரணமுணாகும் ஒருவகை நோய்.
6. அதிதிகள் - விருந்தினர்; அஃதாவது வேற்றூரினின்றும் வழிப்போக்கராய் அன்னம் முதலிய உதவி பெறும் பொருட்டு வருபவர். அலகிடல் - துடைப்பத்தாற் பெருக்குதல்.
பதிவு: 10 மார்ச் 2006