நாவலர் தாள் இறைஞ்சுதும்
- பண்டிதர் கா.பொ.இரத்தினம் -
பூமணக்கும் பொழில்மணக்கும்
புனிதநல்லூர் தான்மணக்கப்
பாமணக்க உரைமணக்கப் பகர்சைவ நெறிமணக்கத்
தேமணக்குந் தமிழணங்கு செய்தபெருந் தவப்பயனால்
நாமணக்க அவதரித்த நாவலர்தாள் இறைஞ்சுதுமே.
தொல்லறங்கள் சிறத்தோக்கத்
தூயதொண்டு செய்யவெண்ணி
இல்லறத்தை விரும்பாமல் இடர்மிக்க துறவென்னும்
வல்லறத்தை மேற்கொண்டு வாழ்வினையேஉவந்தளித்துப்
பல்லறங்கள் பொலிவித்த பண்பினனைப் போற்றுதுமே.
பன்னெறிகள் வளர்கின்ற பாருலகில் தமிழர்தம்
தொன்னெறியாய் மிளிர்ந்தசைவம்
தோற்றமிழந்து இங்கு வந்த
பின்னெறிகள் சிலவற்றாற் பீடழிய மீண்டுமதை
முன்னெறியாய் நிலைநிறுத்த முயன்றோனை வாழ்த்துதுமே.
தமிழ்க்கடலின் நிலைகண்டு தன்னொப்பா ரின்றியுயர்ந்து
அமிழ்தனைய இரைநடையை அருமையுற வளப்படுத்தி
இமிழ்கடலும் கறையானும் ஏக்கமுறத் தமிழ்நூல்பொற்
சிமிழ்நிகர்க்கப் பதிப்பித்த திறலோனைப் பரவுதுமே.
பூச்சிந்தும் நறுந்தேன்போற் பொருளோடுசொல்லணிசேர்
பாச்சிந்தும் புலவர்கள் பாடுஞ்சீர் படைத்தோங்கிக்
காஞ்சிந்தும் மலர்போலக் கற்றோரும் மற்றோரும்
நாச்சிந்தும் இசைகொண்ட நாவலரை வணங்குதுமே.
மூலம்: இமயத்து உச்சியில் - கா.பொ.இரத்தினம் முதற் பதிப்பு (1987)