தமிழறிஞர் சபாபதி நாவலர்

SABAPATHY NAVALAR

(1846 - 1903)


19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாண தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள வட கோவை என்னும் ஊரில் சுயம்புநாதம் பிள்ளைக்கும் தெய்வானை அம்மையாருக்கும் 1846 ஆம் ஆண்டு பிறந்தார். சைவ வேளாள மரபில் தோன்றிய இவர் நீர்வேலி சிவசங்கர பண்டிதரிடத்தில் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவரை ஆறுமுக நாவலர் தாம் சிதம்பரத்தில் தொடங்கிய சைவப் பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்குமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே சிதம்பரத்திற்குச் சென்று, தலமை ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார்.

பின்னர் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் பெருமையக் கேள்வியுற்று அவரிடம் சென்றார். அங்கு 12 ஆண்டுகள் தங்கியிருந்து அறிவு நூல்களைக் கற்றுப் புலமையாள்ரானார். இவர் சொல்வன்மை மிக்கவராகவும் விளங்கினார். இதனால் அவர் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இதனை அறிந்த சுப்பிரமணிய தேசிகர் இவரை அழைத்துச் சொற்பொழிவொன்று நிகழ்த்துமாறு வேண்டிக் கொண்டார். இவரும் அதற்கிசைந்து அவர் முன்னிலையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த சுப்பிரமணிய தேசிகர் இவருக்கு 'நாவலர்' பட்டம் அளித்துச் சிறப்பித்தார்.

இவர் சைவ சமய வளர்ச்சியினை முன்னிட்டும், தமிழ்மொழி வளர்ச்சியினை முன்னிட்டும் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

சிறப்பாகச் சைவ சமய வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். இதனை நன்குணர்ந்த மதுரை ஆதீனத் தலைவர் திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர், ராமநாதபுரம் சேதுபதி மன்னன், அம்பலவாண தேசிகர் முதலியோர் இவரைப் பாராட்டியுள்ளனர்.

இவர் 168 செய்யுட்களைக் கொண்ட "ஏசுமத நராகரணம்" என்னும் நூலினை இயற்றிக் கிறிஸ்துவ மதக் கொள்கைகளை மறுத்தார். மேலும் இவர் திருவிடை மருதூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, திருச்சிற்றம்பல யமக வந்தாதி, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், திராவிடப் பிரகாசிகை முதலிய நூல்களை இயற்றியுள்ளார். சிதம்பர சபாநாத புராணம் என்னும் நூல் இவர் எழுதியதாகும். அது 893 செய்யுள்களைக் கொண்டது. 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்பய்ய தீட்சிதர் என்பவர் வட மொழியில் இயற்றிய சிவகர்ணாமிர்தம், பாரத தார்ப்பரிய சங்கிரகம் ஆகிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

சபாபதி நாவலர் சென்னையில் அச்சகம் ஒன்று அமைத்து அதன் மூலம் 'ஞானாமிர்தம்' என்னும் இதழினை வெளியிட்டார். அவ்விதழ் மக்களிடத்தில் பெரும் செல்வாக்கினைப் பெற்றது.

கலையுலகில் பல படைப்புக்களையும் வழங்கி, இலக்கியத்துறையில் சிறப்பாக செய்யுள்களை ஆக்கியதோடு, அன்னார் சமயத்துக்கும் தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றியுள்ளார். இவர் 1903 ஆம் ஆண்டு காலமானார்.

சைவப்புலவர் அ. பரசுராமன்

நன்றி: வீரகேசரி 24 Jan 2003


சபாபதி நாவலர் பார்வையில் திருக்குறள்:

"திருக்குறள் பொருளின்பம் அகப்படக்கொண்டு அறங்

கூறி வீட்டியல்பு நன்று நிலை நாட்டிய தத்துவ ஞான

நூலாம் உத்தரவேதமென்பது தெற்றென உணர்க"


என சபாபதி நாவலரவர்கள் தமது 'திராவிடப் பிரகாசிகை' நூலிலே குறிப்பிட்டுள்ளார்.
 


Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page Help Page

Return to Top