ஓம் சிவமயம்

சைவ சமயம்

-ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்-


பிறப்பும் இறப்பும் உடையவர்கள் பசுக்கள். பசுக்கள் எண்ணில்லாதவர்கள். பசுக்களாவார் தேவர்கள் முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள சீவர்கள்.

பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி ஒருவரே! அந்தப் பதி சிவபெருமான். சிவபெருமானுக்குப் பசுக்களெல்லாம் என்றும் அடிமைகள். சிவபெருமான் அந்தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்களை யெல்லாம் ஆளுந் தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி. (பசுக்களுக்குப்பதி - பசுபதி, பசு - ஆன்மா, பதி - தலைவன்).

இந்த உண்மையை விசுவசித்துச் சிவபெருமானை வழிபடுகிற மார்க்கஞ் சைவ சமயம். பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டு என்றாவது கொள்வது சிவத் துரோகம்.

சிவபெருமனின் வேறாகாத திருவருளே சிவசக்தி. இந்தச் சிவசக்தியே பார்வதி தேவியார் என்று சொல்லப்படும். சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கொண்டருளிய மூர்த்தங்கள்:-


ஆகியோராவர். இவர்களுக்குச் செய்யும் வணக்கம், சிவபெருமான் ஒருவரைக் குறித்த வணக்கமேயாம். சக்தி - வல்லமை.

முப்பத்து முக்கோடி தேவர்களைப் பரம் என்றுகொண்டு வணங்குகிற மார்க்கஞ் சைவ சமயம் என்று மூடர்கள் பலர் சொல்லுகிறார்கள். மனிதர்களைப் போல்வே பிறந்தும், இறந்தும் உழலுகிற தேவர்களைப் பரம் என்று கொள்வது சைவ சமயத்துக்கு முற்றும் விரோதம்.

சைவசமயிகள் அஞ்ஞானிகள் (Heathens) என்று கிறிஸ்தவர்கள் வழங்குகிறார்கள். அஞ்ஞானிகள் என்ற சொல்லுக்குப் பொருள் மெய்க் கடவுளை அறிகிற அறிவு இல்லாதவன். கிறிஸ்தவர்கள் தங்கள் கருத்தின்படி தாங்கள் சைவ சமயிகளை அஞ்ஞானிகளென்று வழங்கலாமென்றால், சைவசமயிகளுந் தாங்கள் கிறிஸ்தவர்களை அஞ்ஞானிகள் என்று வழங்கலாமே! சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், சுடலைமாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன்,பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறார்கள். இந்தியாவில் அநேக மூடர்கள் முகமதியருடைய பள்ளிவாசலைச் சேவிக்கிறார்க்ள். இலங்கையில் அநேக மூடர்கள் ரோமன் கத்தோலிக்கருடைய மரியை கோயிலுக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள்.

சைவசமயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோவிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில்லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று; ஒரு மொழியின் பெயர். பெறுவதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றும், மிக மேலாகிய சைவசமய மரபிலே பிறந்தும், சைவசமயம் இப்படிப்பட்டது, அந்தச் சமயக் கடவுள் இப்படிப்பட்டவர், அவரை வழிபடுகிற முறைமை இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து அறிந்து கொண்டு, சைவசமயத்தை அநுட்டியாது, நேர்ந்தபடி நடப்பது, ஐயையோ! நரகத் துன்பத்துக்குக் காரணம்.

சைவசமயிகள் சைவசமயத்தை அறியாது கெடுவதற்குக் காரணம், சைவசமயத்தைச் சைவசமய குருமார்கள் பிரசங்கஞ் செய்யாது விடுதலே. யாதாயினும் ஒரு சமயத்தை அறிந்து பிரசங்கஞ் செய்யாதவர்கள், அந்தச் சமயத்துக்குத் தாங்கள் குருமார்கள் என்று சொல்லிக் கொண்டு திரிவதும், அந்தக் குருத்துவத்துக்கு உரிய பொருளையும் மரியாதையையும் தாங்கள் பெற விரும்புவதும் என்னை! வெட்கம்! வெட்கம்!

நன்றி: கலசம் (சித்திரை-ஆனி 1999)
 

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top