நற்சிந்தனை
கலாநிதி ந செல்லப்பா
தமிழ் மரபின்படி நமது நற்சிந்தனைப் பணியை இறை வழிபாட்டுடன் ஆரம்பிப்போம். வேண்டுதல்
வேண்டாமை - அதாவது எவ்விதமான விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனைப் போற்றிப் புகழ்வதை
விட நாம் அவன் அருளிய வழியில் நடத்தலே சிறந்ததாகும். அவன் அருளிய வழி யாது ?
என்பதை நாம் தெளிந்து கொண்டாற்றான் நற்சிந்தனை செய்தல் சுலபமாகும். இன்றேல் எண்ணாத
எண்ணம் எல்லாம் எண்ணி நெஞ்சம் புண்ணாக நேரிடும். அவன் காட்டிய வழியில் நிற்க
விரும்புவோர் முதலாவதாகத் தமது சிந்தனை,சொல் , செயல் மூன்றிலும் தூய்மை
உடையவர்களயிருத்தல் அவசியமாகும். தூய்மையான சிந்தனையே நாம் இங்கு நற்சிந்த்னை
என்பதை வலியுறுத்துகிறோம். நல்ல சிந்தனைகள் யாவும் தூய்மையானவை. எனக் கருதுதல்
பேதமையாகும். சிந்தனைகள் பொதுவாக மனவிருத்தியினால் நிகழ்வனயாகும். அவை உலோக
நாணயங்கள் போல இருபக்கங்கள் உடையனவாகும்.
இருமை வகை உடைய மனம்
மாயையின் நுண் சக்தியே மனமாக விளங்குகிறது. அதன் நுண்ணிய நிலை அணுவாகும். அது
தன்னகத்தே ஆகுமின்னையும் ஏகுமின்னனையும் கொண்டதாகும். அதே போல் மனித மனமும்
தன்னுள்ளேஆக்கசிந்தனைகளையும் அழிவு சிந்தனைகளையும் கொண்டதாகும். ஆக்க சிந்தனைகள்
நற்சிந்தனையாகும். அழிவு சிந்தனைகள் தீயனவாகும். அவற்றை இணைபிரித்தல் இயலாத
காரியமாகும். மன இயக்கம் உள்ளவரைக்கும் நன்மையும் தீமையும் இருந்தே தீரும். நன்மை
மேலோங்கும் போது தீமை மறைந்து விடுகிறதே அன்றி அழிந்துவிடுவதில்லை. நாணயத்தை
சுழற்றி நாம் பூவா? தலையா? போடும்போது அதன் ஒரு பக்கம் மட்டுமே மேலே புலப்படுகிறது
மறு பக்கம் கீழே மறைந்து விடுகிறது. இறைவன் காட்டிய வழி அறமேயாகும். உண்மையான அற
நெறி இது எனவழுவறத் தெழிதல் வேண்டும். ஆயின் மனஇயக்கத்தின் இருமை வகை தெரிதல்
அவசியமாகும். இதை வலியுறுத்தும் பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவப்பெருமான் அருளிய
ஒரு திருக்குறட் பாடல் இதோ :
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
இக்குரட்பாவில் கூறப்பட்ட " இருமை வகை " தெரிதல் என்னும் சொற்தொடர்
மனவிருத்தியினால் ஏற்படும் நன்மை தீமை ஆகியவற்றின் இயல்பைச் சரிவர உணருதல் வேண்டும்
என்பதைக் குறிப்புடுகிறது. அறநெறி நிற்பதன் மறை பொருள் நன்மை தீமை இரண்டையும்
ஒருங்கே விடுதல் வேண்டும் என்பதாகும். அவ்வாறு நிற்கும் புனிதமான பணிபுரிவதில்
ஈடுபாடு உடையவர் மனச்சார்பு நீங்கி நடு நிலைமயில் நிற்றல் வேண்டும்.அதை இன்னொரு
விதமாகச் சொல்வதாயின் மன விருத்தி இல்லாது மனம் சாந்தி அடைதல் எனலாம்.
ஊசல் ஆடும் மனம்
மனதை மறைஞானிகள் அங்கும் இங்கும் ஊசலாடும் ஊஞ்சலுக்கு ஒப்பிடுதல் உண்டாகும் ,ஊஞ்சல்
கயிற்றிலே தொங்குவதாகும் அவ்வாறு சிந்தனைகளும் மனமாகிய கயிற்றிலே தொங்குவதாகும்.
அவ்வாறு சிந்தனைகளும் மனமாகிய கய்ற்றில் தொங்கி நின்று நன்மைக்கும் தீமைக்கும்
இடையே ஊசலாடுவனவாகும். ஊஞ்சல் ஆடுபவர்கள் அதில் இன்பம் அனுபவிப்பார்களே அன்றி அது
அறுந்து வீழ்வதை விரும்பமாட்டர்கள். ஊஞ்சல் கயிறு அறுந்து வீழ்தல் ஆபத்து என
அஞ்சுவார்கள். அவ்வாறே மன ஊஞ்சல் ஆடுபவர்களும் அதன் கயிறு அறுந்து வீழ்வதை அஞ்சி
நடுங்வார்கள். நடுவு நிலையில் நின்று இறைவன் அருளைப் பெறும் சிவயோகிகள் அறுகயிறு
ஊஞ்சலை அச்சமின்றி வரவேற்பார்கள். சாதாரண ஊஞ்சல் அறுந்து வீழ்பவர்களைப் பூமியே
ஏற்றுக் கொள்கிறது.
திருவருளே தாரகமாகும்
மன ஊஞ்சல் அறுந்து வீழ்பவர்களை இறைவனுடைய திருவருளே தாரகமாகநின்று
ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறு திருவருள் தாரகமாகும்போது ஒரு அற்புதம் நிகழ்கிறது..
அதாவது மனத்தின் மூன்று
பரிமாணங்களாகிய விழிப்பு , கனவு, உறக்கம் எனும் Three Dimension களும் நீங்கி
நான்காவது பரிணாமத்தை Fourth Dimension அடைகிறது. அதுவே திருவருட் பரிமாணமாகும்,
அதை அடைதல் வேண்டின் நாம் மன அமைதி அடைதல் அவசியமாகும். மன அமைதியை சாந்தி நிலை
என்றும்,சமாதி நிலை என்றும் சும்மா இருத்தல் என்றும் கூறுதல் சைவமாகும். சும்மா
இருக்கும் நிலை பற்றித் திருமுருகன் தந்தையாகிய சிவனுக்கு " வெறுப்பானைப் பெற்ற
வெறும்தனி" நிலையென அருணகிரிநாதர் உரைக்கிறார் சும்மா இருத்தலின் மறை பொருள்
கல்லுப்போலக் கிடத்தல் அன்று. அதன் மெய்ப்பொருள் மனமானது சும்மா இருக்க அதிற்
திருவருட் சக்தி பொலிவுற்றுச் சுறுசுறுப்பாகச் செயல்படுதலாகும். அவ்வாறு
செயற்படுதலையே இறைபணி நிற்றல் எனச்சிவஞானபோதம் விளக்குகிறது.
பசு புண்ணியமும் சிவ புண்ணியமும்
பசு புண்ணியம் எனபடுகிறது நற்சிந்தனைகளுடன் ஆற்றப்படும் பலன் கருதும்
புண்ணியமாகும். அது உலகில் நன்மை கருதிச் செய்யப்படுவதாகும். அதனால் ஆன்மாவுக்கு
இருவினை நீக்கமும் பந்த பாச விடுதலையும் பேரானந்தமும் கிடைக்கமாட்டாது. ஆன்மா
மோட்சமாகிய பந்த பாச விடுதலை பெறுதல் வேண்டுமாயின் அது பலன் கருதாத சிவபுண்ணியம்
செய்தல் மிகவும் அவசியமாகும். எனவே நாம் நற்சிந்தனையின் மறை பொருளைப் பிழையறத்
தெளிந்து மணிவாசகப்பெருமான் கோயிற் திருப்பதிகத்தில் அருளியவாறு:-
இன்று எனக்கு அருளி இருள்கடல் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறு போன்று
நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்
என்பதுபோல் நாமும் நினைப்பு அறுந்து போகும்படி சிவ செப தியானம் செய்தல் வேண்டும்.
அதுவே நமது நற்சிந்தனையாகட்டும். அதன் பொருட்டு நாம் இப்பொழுது செய்ய வேண்டிய சாதனை
சரணாகதியும் இருவினை ஒப்பும் சிவோகம்பாவனையுமாகும். அத்துடன் நமச்சிவாய வாழ்க
நாதன்தாள் வாழ்க எனப் போற்றிப் பிரார்த்தனை செய்தாற் போதும். நாம் விடுதலை பெறுதல்
நிச்சயமாகும்.
சாந்தி ----- சுபம் ------ வணக்கம்