பெற்றோர் ஆவல்
ராகம்: தேஷ்
இயற்றியவர்: பாரதிதாசன்
படம்: ஓர் இரவு (1951)
பாடியோர்: M.S. ராஜேஸ்வரி, V.J.வர்மா
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
[துன்பம்]
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக்காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக்காட்ட மாட்டாயா?
[துன்பம்]
அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அருகி லாத போது - யாம்
அருகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? [துன்பம்]
புறமி தென்றும்நல் லகமி தென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டிஉனை ஈன்றஎம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா? - தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா? [துன்பம்]