நூலின் பெயர்: பஞ்சவன்னத் தூது (Panchavanna Thuuthu)


இயற்றியவர்: இணுவை சின்னத்தம்பிப் புலவர் (Inuvil Sinnathamby Pulavar)


பதிப்பாசிரியர்: தமிழ்வேள் க.இ.க.கந்தசுவாமி


நூல்முகம்: முனைவர் ச.சாம்பசிவனார்
 

The Special Features of Ilanthari Worship

Pandit M. Kandiah



அணிந்துரை: கலாநிதி இ.பாலசுந்தரம்


வெளியீடு: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
154, டி.டி.கே. சாலை
சென்னை - 18, தமிழ்நாடு


பக்கங்கள்: 218

விலை: ரூபா 70.00
(இலங்கையில் ரூ.180,00)
 

ழத் தமிழகத்தில் யாழ் மாவட்டத்தின் மத்தியில் இணுவில் என்றொரு பேரூர் இருக்கின்றது. இக்கிராமம் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களின் வரலாற்றுடன் இணைவு பெற்றது. தமிழையும் சைவத்தையும் வளர்க்கவென்று தரணிக்குப் பல தமிழறிஞர்களைப் பெற்றுத் தந்து பெருமை பெற்றது. இத்தகைய அறிவும் அருளும் கொண்ட, இறைவழிபாட்டில் இதயபூர்வமாக ஈடுபட்ட பேரறிஞர்களில் இணுவை சின்னத்தம்பிப் புலவரும் ஒருவர்.

சின்னத்தம்பிப் புலவருடைய கவியாற்றலுக்கும் தெய்வ நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக இவர் வாழ்வில் நிகழ்ந்த பல அற்புதங்கள் இந்நூலில் கூறப்பட்டிருந்த போதிலும் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம். ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர் இவர். இலங்கையில் நிலங்களைப் பதிவு செய்யும் முறைகளை ஒல்லாந்து ஆட்சியாளரே தொடக்கி வைத்தனர் என்பர். ஒல்லாந்த அரசிடம் நிலங்களைப் பதிவு செய்யும் கோயிற் சட்டம்பியாகப் பணியாற்றினார் புலவர். ஒருமுறை தவறுதலாக இவர்மீது குற்றஞ்சாட்டிச் சிறையில் இட்டனர் அரசினர். புலவர் மனம் நொந்து தம் குல தெய்வமாகிய சிவகாமியம்மையை நினைத்து 'எந்தையே எந்நாளும் இறைஞ்சு' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார் என்றும் அதில் வரும் 'துப்பூட்டும்' என்னும் பாடலைப் பாடியபோது சிறைக் கதவு திறந்தது என்றும் நூலில் கூறப்பட்டிருக்கிறது.

சின்னத்தம்பிப் புலவர் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்று இயல்பாகவேபாடல்களை இயற்றும் பெரும் பேறு பெற்றிருந்தார். இவர் வணங்கும் இவருடைய குல தெய்வமான சிவகாமி அம்மையின் அருளினாலேயே இவருக்கு இந்த ஆற்றல் கிட்டியது என்பர். இவர் இயற்றிய நூல்கள் 'சிவகாமியம்மை பதிகம்', 'சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்', 'நொண்டி நாடகம்', 'கோவலன் நாடகம்', அனிருத்த நாடகம்' - என்பவற்றோடு இப்பொழுது வெளியாகியிருக்கும் இந்த 'பஞ்சவன்னத்தூது' என்ற நூலுமாம்.

'பஞ்சவன்னத் தூது' என்பதன் பொருள் 'ஐந்து வகையான பொருள்களைத் தூதாகக் கொண்ட நூல்' என்பதாம். இந்நூலில் வரும் ஐந்து தூதுப் பொருள்கள் "நிலா, தென்றல், கிளி, அன்னம், தோழி" என்பனவாம். கடவுள் துதி, காப்பு, கட்டியக்காரன் வருகை, கட்டியங் கூறுகை, கைலாயநாதன் உலா வருகை, சந்திர மோகினி வருகை, சந்திர மோகினி காமவேளுக்கு முறையிடல், நிலா - தென்றல் - கிளி - அன்னம் ஆகியவற்றைத் தூதாக வேண்டுதல், தோழி உற்றது வினாவுதல், சந்திர மோகினி உற்றதுரைத்தல், தோழி கைலாயநாதனிடம் முறையிடுதல், அவன் இணங்கியதைத் தோழி சந்திர மோகினிக்குத் தெரிவித்தல், அகவல், இளந்தாரி துதி ஆகிய பகுதிகளைக் கொண்டது இந்நூல்.

இந்நூலை 'கைலாயநாதன் பஞ்சவன்னத்தூது நூல்' என்றும் அழைப்பர். 'கைலாயநாதன்' என்பது இந்நூலின் பாட்டுடைத் தலைவனின் பெயர். "பாட்டுடைத் தலைவனாகிய கைலாயநாதன் வாழ்ந்தது யாழ்ப்பாண அரசுக்காலம். இந்நூலாசிரியராகிய சின்னத்தம்பிப் புலவர் வாழ்ந்தது ஒல்லாந்தர் ஆட்சிக் காலம். தூது - உலா முதலிய நூல்கள் மக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளல் அம்மக்கள் வாழும் காலத்திலே ஆகும். உலகு நீத்தவர்களை இந்நூல்கள் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளல் இல்லை. கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எக்காலத்திலும் இந்நூல்களை ஆக்கலாம். இது தமிழ் நூல் மரபு. பஞ்சவன்னத் தூது என்னும் இந்நூலின் பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன் காலத்துக்கும், நூலாசிரியர் சின்னத்தம்பிப் புலவரின் காலத்திற்கும் மூன்று நூற்றாண்டு இடைவெளி உண்டு. ஆகவே, புலவர் கைலாயநாதனை மக்களில் ஒருவராகக் கொள்ளாமல் தெய்வமாகக் கொண்டே இந்நூலை இயற்றினார் என்பது தெளிவு" என்னும் பதிப்பாசிரியரின் கூற்றுக் கவனிக்கத்தக்கது.

யாழ்ப்பாண அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் மகனே இந்நூலின் பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன் ஆவான். இவனுக்கு 'இளந்தாரி' என்றொரு பெயரும் உண்டு. உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். காலிங்கராயனுக்குப் பின் கைலாயநாதன் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கினான். இவனது வீரம், கொடை, விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் இத்தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது.

இளந்தாரி, தாம் உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும், ஒருநாள் ஒரு புளியமரத்தின் வழியே உருக்கரந்து விண்ணுலகு சென்றார் எனவும் கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் மேலும் கூறப்படுகிறது. அப்பொழுது அந்தப் புளியமரத்தடியில் ஆரம்பித்த 'நடுகல் வழிபாடு', இன்றைக்கு இணுவில் மக்களின் இதயம் நிறைந்த வழிபட்டுத் தலமாக "இளந்தாரி கோவில்" என்ற பெயருடன் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. இளந்தாரியர் புளியமரத்தின் வழியாக விண்ணுலகு சென்ற செய்தியைக் கூறவந்த பதிப்பாசிரியர், கண்ணகி சேர நாட்டில் வேங்கைமரத்தின் வழி விண் சென்றதையும், இராமலிங்க அடிகள் சித்திவளாகக் குகையில் சென்று மறைந்ததையும் நினைவூட்டுகிறார்.


இந்த இளந்தாரியர் கோயிலில் இன்றுவரை ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டுவரும் 'இளந்தாரியர் வருட மடை' பற்றியும், 'வழுந்து கட்டுதல்', 'பஞ்சவன்னத்தூது நூல் படித்தல்' ஆகிய வழக்கங்கள் பற்றியும், ஆண்கள் பொங்கலையும் பெண்கள் கறி உணவுகள் பலகாரங்களையும் ஆக்கிப் படைத்து நள்ளிரவு வரை வழிபாடு நடாத்துவார்கள் என்பது பற்றியும் விரிவாகக் கூறப்படுகிறது. கறி உணவுகளில் மீன் உணவும் இடம்பெறும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தூது நூலில் வரும் பல பாடல்கள் இராகம், தாளம் அமைத்துப் பாடத்தக்கவை. உதாரணமாக, 'இளந்தாரி திருவீதி உலாவருதல்' என்னும் பகுதியின் சில தொடக்க அடிகள் வருமாறு:

தரு:

இராகம் - தோடி
தாளம் - திருபுடை

பல்லவி - (எடுப்பு)

மணிவீதி வந்தார் இளந்தாரி மணிவீதி வந்தார்
(மணிவீதி வந்தார் )

அனுபல்லவி - பின் எடுப்பு

பணிமேல் நிதந்துயில் மாதவன்றனை நிகர்த்திடுங்
கயிலாய நாதனிந் திரகுமார சுந்தரன்
(மணிவீதி வந்தார் )

சரணம் - நடப்பு

தந்திவத னத்தொரு தந்திக் கடவுள்
பெருச்சாளிப் பிடர்வரக் கூளித்திரள் களிகூர்
அயில்வேற் கந்தக் குருபரன் மயில்வர
கந்தத் தொடையணி அளகபந்திக் கௌரி
சிவகாம சௌந்தரி பொற்றேரி லெழுந்தருள
(மணிவீதி வந்தார் )


{இவ்வாறு பாடல் தொடர்கிறது .....}

பதிப்பாசிரியர் இந்தத் தூது நூலை மூன்று பாகங்கள் ஆக்கியிருக்கிறார். முதலாவது பாகத்தில் நூலாசிரியரகிய இணுவை சின்னத்தம்பிப் புலவரின் வரலாறு, தூது இலக்கியப் பண்பும் பயனும், தூது நூல்களின் அமைப்பும் வகைகளும், பஞ்சவன்னத் தூது அமைப்பு, இந்நூல் காட்டும் நாடு, நகரம், பாட்டுடைத் தலைவன், கடவுள் வழிபாடு, இளந்தாரி வழிபாடு என்பவற்றோடு இந்நூலின் சிறப்பும் பயனும் ஆகியனபற்றி பல உப தலைப்புகளின் கீழ் பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி அருமையான விளக்கம் தருகிறார். இரண்டாவது பாகத்தில் ஏட்டில் இருந்த தூது நூல் அப்படியே தரப்பட்டுள்ளது. மூன்றாவது பாகத்தில் பாடலுக்குத் தந்துள்ள உரைவிளக்கத்தைப் படிக்கும்போது, பதிப்பாசிரியர் எத்துணை நுட்பமாக ஆய்ந்தறிந்து இத்துணை விளக்கமாகப் பதவுரை, பொழிப்புரை, விசேடவுரை, இலக்கணக் குறிப்புகளைத் தந்திருக்கிறார் என்று வியக்க வைக்கின்றது.

இந்நூலின் பதிப்பாசிரியரான தமிழ்வேள் கந்தசுவாமி அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய சேவைகள் புரிந்த தமிழறிஞர். இல்லற வாழ்வில் ஈடுபடாமல் தமது வாழ்நாளை ஆத்மீக வழியில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அர்ப்பணம் செய்த தமிழ்த்துறவி. கொழும்பு றோயல் கல்லூரித் தமிழாசிரியராகவும் பின்னர் இலங்கை அரசின் கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடத் திட்டம் - நூலாக்கம் ஆகிய துறைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். 'தமிழ்வேள்' என்னும் புனைபெயரில் பல படைப்புகளைத் தந்த எழுத்தாளர்; நூலாசிரியர்.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் தேசிய அளவிலும் சர்வ தேசிய அளவிலும் உயர்வு பெற முப்பது ஆண்டு காலம் தமது முழுநேர உழைப்பைச் சங்கத்திற்கு நல்கியவர். இவர் 1975ல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றதன் பின்னர் சங்கத்துக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் நிறையக் கிடைத்தன; சங்கப் பணிமனை நான்கு மாடிக் கட்டிடமாக உயர்ந்தது; சங்க நூலகத்தில் ஆயிரக் கணக்கான நூல்கள் சேர்ந்தன.

அந்த நாட்களில் தந்தை செல்வநாயகம் அவர்களைத் தமது அரசியற் குருவாகக் கொண்டவர். ஒரு காலத்தில் அந்தப் பெரியவரின் ஓர் அமைச்சரைப்போலவே விளங்கித் தமிழ்ப்பணி செய்தவர். ஈழத்தில் தமிழ், தமிழ் இன உயர்வுக்காக இளமை முதல் பல துறைகளில் சிறந்த பங்களிப்புகள் செய்துவந்தவர்.

இவர் இணுவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு பராயத்திலிருந்தே இணுவிலில் உள்ள ஆலயங்களில் ஈடுபாடுமிக்க இயல்பினர். இளந்தாரியர் கோயிலின் ஆண்டுப் பெருவிழாவில் இந்தப் பஞ்சவன்னத் தூது ஏட்டிலிருந்து படிக்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் ஏடு பார்த்துப் படிப்பவர் அருகிவிட்டதால் பிரதி எடுப்பதற்காகத் தம்மிடம் வந்ததாகவும் 'பதிப்பாசிரியர் உரை'யில் கூறுகின்றார். அப்படியானால் இந்த அரிய நூலை ஏன் இத்தனை ஆண்டுகளாக வெளியிடாமல் வைத்திருந்தார்? என்று கேட்கத் தோன்றுகிறது. அந்த வினாவுக்கு நூலில் அவரே பதிலும் எழுதியிருக்கின்றார். "பஞ்சவன்னத் தூது கோயிலிற் படித்தற்கு உரியது; வீடுகளில் படித்தற்கு உரியதன்று" எனக் கூறப்பட்டது. "கோயில்களில் படிக்கும் நூல்களை வீடுகளில் படித்தல் ஆகாது" என்ற மரபுமுறையும் இருந்தது. வேதங்கள் திருமுறைகள் முதலியன நூல்களாகப் பதிப்பித்து வெளியிடத்தக்கன அல்ல என்ற மரபுமுறையும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. ஆனால் அவை இன்று வெளிவந்திருக்கின்றன. அப்படியே இந்தத் தூது நூலும் இன்று வெளிவரத் திருவருள் கூடியிருக்கின்றது.

இணுவை சிவகாமியம்மையின் பேரருளும் இணுவை இளந்தாரியரின் நல்லாசியும் கிடைக்கப்பெற்ற 'தமிழ்வேள்' கந்தசுவாமி அவர்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழ் மக்களுக்கு மென்மேலும்பணிபுரிய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.



ணுவை சிவகாமியம்மன், இணுவை இளந்தாரியர் ஆலயங்களின் அயலில் வசித்தவன் என்ற முறையிலும் பலவருடங்களாக இந்த ஆலயங்களில் வழிபட்டு வந்தவன் என்ற முறையிலும் இக்கட்டுரையை எழுதக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்ச்சியடைகிறேன். நன்றி. வணக்கம்.

ஆர்.சிவலிங்கம் (உதயணன்)
ஆசிய ஆபிரிக்கக் கல்வித் திணைக்களம்
ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்
பின்லாந்து
05.10.1999
 

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top