ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
AASUKAVI KALLADI VELUPPILLAI
(1860 - 1944)
இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்தில், ஈழநாட்டில்
'சுதேச நாட்டியம்' என்றொரு
பத்திரிகை ஒரு 'புரட்சிப் பூ'வாக மலர்ந்தது.
தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆக்கமும், கவிதா மேன்மைக்கு ஊக்கமும் அளித்த 'சுதேச
நாட்டியம்', தமிழின் இதழியல் துறையில் பெரும் புகழுடன் அருந் தொண்டாற்றிய பெருமை
நினைக்கத் தக்கது; நினைந்து போற்றத்தக்கது.
'ஆசுகவி' என இலங்கைத் தமிழர்களால் அன்புடன் போற்றப் பெற்ற கல்லடி வேலுப்பிள்ளை,
1902 ஆம் ஆண்டில் தொடங்கிய 'சுதேச நாட்டியம்' தமிழின் மாட்சிமைக்கும், தமிழ்ச்
சமுதாயத்தின் மெய்ம்மையான மேனிலைக்கும் களம் அமைத்துக் கொடுப்பதையே கருப்
பொருளாகவும், கருது பொருளாகவும் கொண்டிருந்தது. இலக்கியத் தாழ்வுகளையும், சமுதாயச்
சீர்கேடுகளையும், சமயக் குறைபாடுகளையும் ஓங்கிய குரலால் உலகறியச் செய்வதைப்
பத்திரிகையின் நோக்கங்களாகச்க் கொண்ட ஆசிரியர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை,
'நாமார்க்கும் குடியல்லோம்' எனப் பத்திரிகையில் வெளியிட்ட குறிக்கோள் உரை
குறிப்பிடத்தக்கது.
"எப் பிரபுக்களாயினும், எவ்வதிகாரிகளாயினும், எக்குருவாயினும், எந் நண்பராயினும்,
எக் கலாஞானிகளாயினும், நீதியற்ற கிரியைகளைச் செய்கிறவராய்க் காணப்படுவாராயின்,
அக்கிரியையும், அவர் கீழ் நிலையையும், எடுத்து வெளிப்படுத்த எதற்காயேனும் அஞ்சி,
பின்நிற்கப் போகிறதில்லை. இதுவே நடுநிலையும் பொது நன்மையும் விரும்பும் பத்திரிகா
லட்சணமாம்."
இத்தகைய கோட்பாடுகளை 'சுதேச நாட்டியம்' இதழின் குறிக்கோள்களாகப் பறை சாற்றிய ஆசுகவி
கல்லடி வேலுப்பிள்ளை, குறை கணட்விடத்துக் கண்டனம் தெரிவிப்பதைத் தமது கடமையாகக்
கொண்டு செயற்பட்டார். தமிழ், சமயம், சமுதாயம் ஆகிய முத்துறைகளில் ஏற்பட்டு
விடுகின்ற இரங்கத் தக்க குறைபாடுகளைச் சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும்
'சுதேச நாட்டியம்' ஒரு நீதிமன்றமாக நின்று நிலவியது. ஆசுகவியின் 'கண்டனங்கள்'
உரைநடையாகவும் கவிதையாகவும் இதழில் இடம்பெற்றன. ஒவ்வோர் இதழும் பரபரப்பாக
விற்பனையாகின. தமிழ் மொழியின் இதழியல் துறையில், ஒரு புதுமையான முன்னோடியாகத்
திகழ்ந்தது 'சுதேச நாட்டியம்'!
நினைக்கின்ற நேரமெல்லாம், அருவியாய்க் கவிதையைக் கொட்டும் ஆற்றலை
இளமைக்காலத்திலிருந்தே பெற்றிருந்த வேலுப்பிள்ளையை, மக்கள் 'ஆசுகவி' என அழைத்து
மகிழ்ந்தனர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை, ஆசுகவி வேலுப்பிள்ளை பாடி
வழங்கியிருப்பினும், அப்பெருமகனார் படைத்தளித்த கவிதை நூல்களுள் 'கதிர மலைப்
பேரின்பக் காதல்', 'மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி', 'உரும்பிராய் கருணாகர
விநாயகர் தோத்திரப் பாமாலை' ஆகிய திரு நூல்கள் பெரும் பெயர் பெற்றன.
கவியாற்றலில் வல்லமை கொண்டிருந்த அப் பெருந்தகை, உரைநடை எழுதுவதில், இன்றைக்கு நூறு
ஆண்டுகளுக்கு முன்னரே, திறமும் உரமும் பெற்றுத் திகழ்ந்தார். ஈழத்தில் ஆறுமுக
நாவலருடைய காலத்திற்குப் பின்னர், அப்பெருமானின் வழி நடந்து, தமிழ் வசன நடைக்குச்
செழுமையூட்ட்ச் செழிக்கச் செய்த பெருமகனார் கல்லடி வேலுப்பிள்ளை ஆவார்.
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டன நூல்கள் சில எழுதினார். கடவுள் துதி நூல்கள் சில
உருவாக்கினார். வரலாற்று ஆய்வு நூல்களும் படைத்தளித்தார். ஏறத்தாழ இருபது நூல்கள்
படைத்த அப்பெருந்தகை, தமது நூல்களில் கையாண்டுள்ள வசன நடை, தமிழின் உரைநடைச்
செல்வத்தை ஒளிபெறச் செய்தது. அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக என்பதை நினைவில்
கொள்ளல் வேண்டும். அப் பெருமகனாரின் திறமிக்க ஆய்வுப் புலமைக்கு எடுத்துக் காட்டாக
விளங்கும் 'யாழ்ப்பாண வைபவ கௌமுதி' யாழ்ப்பாண மக்களின் முன்னோர் பற்றியும்,
யாழ்ப்பாணச் சாதிகளின் பின்னணி பற்றியும் தெளிவு படுத்தும் செறிவு மிக்க வரலாற்று
நூலாகும். யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை வேலுப்பிள்ளை
விளக்கும் பாங்கு, அப் பெருமகனாரின் ஆழ்ந்த அறிவு நுட்பத்தை எடுத்தியம்புகிறது.
அந்தக் கால கட்டத்தில், யாழ்ப்பாணத்துச் சட்ட நிபுணர்களுள் பெரும் புகழ்
பெற்றிருந்த சட்ட மேதை ஐசக் தம்பையா, 'யாழ்ப்பாண வைபவ கௌமுதி' பிரசுரித்து வெளிவரப்
பேருதவி புரிந்திருக்கிறார். எனவே புலவர் பெருமான் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, அப்
பெருநூலை மிகுந்த நன்றிப் பெருக்குடன் ஐசக் தம்பையாவிற்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் ஒரு சிற்றூரான 'வசாவிளான்' என்னும் ஊரில்
கந்தப்பிள்ளை - வள்ளியம்மை இல்லறப் பயனாய் 1860 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிறந்தார்.
வசாவிளான் கிராமத்தில் வேலுப்பிள்ளை பிறந்த வீட்டினருகே ஒரு பெரிய கல் மலை
இருந்தது. கல் மலைக்கு அருகேயிருந்த வீட்டில் தோன்றிய வேலுப்பிள்ளை, இளமைக்
காலத்திலிருந்தே கல்லடி வேலுப்பிள்ளை எனக் குறிப்பிடப் பெற்றார்.
அகஸ்டீன் என்ற கிறித்தவரிடம் தொடக்கக் கல்வி பயின்ற வேலுப்பிள்ளை, பின்னர்
பெரும்புலவர் நமசிவாயம், வித்துவான் கதிர்காம ஐயர் ஆகிய தமிழ்ச் சான்றோர்களிடம்
தமிழ் மொழியை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். வடமொழி ஆர்வத்தால், அம்மொழியைப்
பண்டிதர் ஒருவரிடம் கற்றுக் கொண்டார்.
பல்வேறு பணிகளில் ஆசுகவி வேலுப்பிள்ளை, தமது நாற்பதாம் வயது வரை கவனமும் கருத்தும்
செலுத்திவரினும், அப் பெருமானாரது கனவு நாற்பது வயதிற்குப் பின்னரே நனவானது. ஆம்;
இளமைக் காலம் முதலாகவே, ஓர் இதழினைத் தொடங்கி நடத்த வேண்டுமென்ற அப் பெருந்தகையின்
கனவு, நாற்பத்திரண்டாவது வயதில்தான் நனவாகி, நடைமுறையாக உதயமானது. யாழ்ப்பாணப்
பகுதியில் தம்மை மதிக்கும் அன்பர்களிடம் ஆசுகவி தமது கனவை எடுத்துக் கூறினார். தமது
வழிகாட்டலில் ஒரு பத்திரிகை உருவானால், அதன் வழி தமிழ்த் தொண்டும், சமுதாயப்
பணியும், சமயப் பணியும் ஆற்றுவதற்குத் தமக்கு நல்லதொரு களம் கிடைக்குமென்பதை,
புலவர் பெருமான் விளக்கினார். அன்பர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உதவினர்.
அன்பர்களின் உதவியுடன் தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, சென்னையில், ஓர் அச்சு
இயந்திரத்தை வாங்கிச் சென்று, யாழ்ப்பாணத்தில் 'சுதேச நாட்டியம்' இதழைத் தோற்றம்
பெறச் செய்தார் வேலுப்பிள்ளை.
'சுதேச நாட்டியம்' உதயமான பின்னரே, ஆசுகவி வேலுப்பிள்ளையின் அறிவாற்றலைத் தமிழுலகம்
இனம் கண்டு போற்றத் தொடங்கியது. ஈழநாட்டுத் தமிழறிஞரை, இலங்கைத் தமிழர் மட்டுமின்றி
எல்லாத் தமிழர்களும் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் அந்தப் பத்திரிகை அரிய
சாதனமாகி, நாளும் வளரத் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளிலேயே 'சுதேச நாட்டியம்' பத்திரிகையில் தமிழின் உரை
நடைக்குப் புதிய வளம் சேர்த்தார் ஆசுகவி வேலுப்பிள்ளை. தமிழ் மொழியில் வசன நடையை
வளம் கொழிக்கச் செய்த சான்ரோர்களில் ஆசுகவியும் ஒருவரென்பதை 'சுதேச நாட்டிய'த்தில்
அப் பெருமனார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரைகளிலிருந்து
தெளிவாக அறிய முடிகிறது. ஒரே ஓர் எடுத்துக்காட்டு. 'காந்தியும் கதரும்' எனத்
தலைப்பிட்டு 1927ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இதோ:
"மகாத்மாவின் யாழ்ப்பாண தரிசனம், யாழ்ப்பாணச் சரித்திரத்தில் ஒரு விசேட ஸ்தானத்தைப்
பெற்று விட்டது. யாழ்ப்பாண வாசிகளுக்குப் புத்துயிரளித்துவிட்டது. கதர் மீது
ஆர்வத்தையும், அபிமானத்தையும் மூட்டிவிட்டது.
போனது போக, இனியாவது மகாத்மா கேட்டுக் கொண்டபடி கதராடையையே நம்மவர்கள்
அணிவார்களாக!"
ஐரோப்பிய உடைகளை முற்றாய் நம்மவர் நீக்க வேண்டும். உஷ்ணப் பிரதேசங்களில் வசிக்கும்
நமக்கு அவ்வுடுப்புகள் வேண்டுவதில்லை. கதருடயே நமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது.
ஐரோப்பிய உடையிலும், அந்நாகரதிலும், நம்மவர்கள் ஏன் இத்துணை மோகம்
கொண்டிருக்கிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை.
நம்மவர் மகாத்மா காந்தியை உள்ளபடியே மதிப்பவராயிருந்தால், கதருடையையே எப்பொழுதும்
உடுத்த வேண்டும்!"
அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் எழுதப் பெற்ற உரைநடை என்பதை நினைவில் கொண்டால் தான்,
அதன் அருமை புரியும். அதனால் தான் ஆசுகவியின் வரலாற்றை எழுதிய எழுத்தாளர் சிலோன்
விஜயேந்திரன், அப் பெருமகனாரை 'உரைநடைச் செம்மல்' என உளமார்ந்து பாராட்டிக்
குறிப்பிட்டுள்ளார்.
ஆசுகவி 1910 ஆம் ஆண்டில் சிறை செல்ல நேர்ந்தது. அதுபோது, 'சுதேச நாட்டியம்' பத்திரிகையில் அப் பெருமகனார் வெளியிட்ட அறிக்கை, தேச பக்தியில் அப்பெருந்தகை
கொண்டிருந்த ஈடுபாட்டை, தெய்வபக்தியில் அப் பெருமான் வைத்திருந்த நம்பிக்கையை,
தமிழ்ப் பற்றில் ஆசுகவி கொண்டிருந்த நெஞ்சார்ந்த நெருக்கத்தைத் தெளிவுபடுத்தியது.
'சுதேச நாட்டியம்' பன்னெடுங்காலம், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் உள்ளக்
கருத்துகளை வெளிப்படுத்தும் அரியதோர் இதழாகத் திகழ்ந்து, அப் பெருமகனாரின் பன்முகத்
தமிழ்த் திருப்பணிகளைத் தமிழுலகம் உணர்ந்து போற்றுமாறு செய்வித்தது.
தமிழ் மொழியும், தமி மக்களும் மிகுந்த மேன்மை பெற வேண்டும், மேலோங்க வேண்டுமென
அளப்பெரிய ஆர்வம் கொண்டு வாழ்வு முற்றும் தொண்டாற்றிய வேலுப்பிள்ளை, தமது எண்பத்து
நான்காம் வயதில், 1944 ஆம் ஆண்டு இறைவனின் திருவடிப்பேற்றைப் பெற்றார். ஆசுகவியாக
வாழ்ந்த அப்பெருந்தகை தமிழின் உரை நடைக்கு உரமூட்டிய அருமை அப்பெருமகனார் பெற்ற
தனிப் பெருமை!
எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள் (1994)