மதமாற்றமும் மன்னன் சீற்றமும்

-அராலியூர் அமரர் வெ சு நடராசா-

- V. S. Nadarasa -
 

1544ம் வருடம் தான் கீழைத்தேசங்களில் மதமாற்றம் உச்சநிலை அடைந்திருந்ததாம். இலங்கையில் குறிப்பாக மன்னார் பகுதி முதலில் போர்த்துக்கேயரின் பாசாங்குக்கு இரையானது. விபரீத முறையில் பல கோணங்களில் இருந்து மொழியையும், மதத்தையும், நாட்டையும் சுரண்டுவதைக் கண்ட, கேட்ட சங்கிலி உள்ளம் குமுறினான். சுய உணர்ச்சி, தாய்மொழிப்பற்று, தேச நன்மை ஆகிய அனைத்தாலும் தூண்டப் பெற்ற சங்கிலி அன்னிய ஆதிக்கத்தை வேரறுக்க எண்ணம் கொண்டான். மதம் மாறிய சிலரை சிரச்சேதம் செய்வித்தான். நாடு பறிபோவதற்கு முதற்படி மதம் மாறிப் போவதே என்று கருதினான் போலும் சங்கிலி. 16ம் நூற்றாண்டில் மேல் நாட்டிலும் கூட தங்கள் மதக் கொள்கையுடன் மாறுபட்டவர்களையெல்லாம் மன்னர்கள் சிரச்சேதம் செய்வித்தனராம். எனவே நாட்டுப் பற்று ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இந்த அரசன் போர்த்துக்கேயரின் விரோதியானான். அவனது செயல் சிந்தனைக்குரியதே.

மன்னர் மடிதலும் இடபக் கொடி இறக்கப்படுதலும்

போர்த்துக்கேயர் பல முறை போர் தொடுத்துப் பணியவைக்க முயன்றனர்.

தன் சொந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரமன்னன் அடி பணியாத்தைக் கண்ட பகைவர் நட்புமுறையைக் கையாண்டும் பார்த்தனர். அதுவும் பலனளிக்கவில்லை. திரும்பவும் போர் தொடுத்தனர் போர்த்துக்கேயர். தன்மானத் தமிழ் மன்னனான சங்கிலிதன்னாலான மட்டும் எதிர்த்தான். நல்லூர், கோப்பாய் முதலியவிடங்களில் கடும் யுத்தம் நடந்தது. இரு கட்சியும் வெற்றி கண்டில. எனவே ஓர் உடன்படிக்கை உதயமாயிற்று. அதன் பிரகாரம் சங்கிலியன் மகன் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டான். மன்னாதி மன்னன் மாவீரன் சங்கிலி வேந்தனும் இறுதிச் சொட்டு இரத்தம் இருக்குமட்டும் போராடி மடிய வேண்டியதாயிற்று.

இவனுடன் யாழ்ப்பாண அரசும் அஸ்தமனமாயிற்று. இடப அல்லது நந்திக்கொடி இறக்கப்பட்டு அன்னியக் கொடி ஆடத் தொடங்கியது. தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலை சிறந்த வீரன் என்று வர்ணிக்கப்படுகிறான் சங்கிலி. தன் மகனிலும் பார்க்கத் தாய் நாட்டின் விடுதலையே பெரிதென எண்ணிய வீரன் தான் சங்கிலி. யாழ்ப்பாண மக்களின் மனதினின்றும் என்றுமே மறையாத மன்னன் தான் சங்கிலி. மாபெரும் விரோதிகளையெல்லாம் முதிகிட்டோடச் செய்து தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக 44 வருடம் பாடுபட்டவன் தான் சங்கிலி. அவன் ஆண்ட நல்லூர் எங்கே? அவன் அடியடியாக வந்த வீரபரம்பரை எங்கே? சிந்தியுங்கள்.

மூலம்: எழுச்சி - 10.07.1965

Read this article in PDF.

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top