நான் கேட்டபடி

- மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் -

மிழ்ப் புலவர்களில் கவி, கமகன், வாதி, வாக்கியென நான்கு வகையினர் உண்டு. எந்தச் சமயத்திலும், கொடுத்த விஷயத்தைக் குறித்துத் தெளிவாகப் பேசும்' ஆற்றலுடையவரை வாக்கியென்று சொல்வார்கள். வாக்வி என்ற வடசொல்லின் திரிபே அது. அதனையே 'நாவலர்' என்று தமிழிற் கூறலாம். பண்டைக் காலத்தில் கவிபாடும் ஆற்றலுடையாரையும் நாவலரென்று வழங்கினர். இக்காலத்தில் நல்ல பிரசங்க சக்தி வாய்ந்தவர்களை நாவலரென்று சொல்வதிற் பிழையொன்றும் இல்லை.

தமிழ்நாட்டில் எவ்வளவோ நாவலர்கள் இருப்பினும் நாவலரென்று கூறிய மாத்திரத்தில் அச்சொல் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரையே குறிக்கும். இதற்குக் காரணம் அவர் நாவலர்களுக்குள் சிறந்தவராக விளங்கியமையேயாகும்.

நாவலரை நான் பார்த்துப் பழகுவதற்குரிய சமயம் நேர்ந்ததில்லை. ஆயினும், அவரோடு பழகியவர்களிடமிருந்தும் அவரிடம் பாடங் கேட்டவர்களிடமிருந்தும் அவரைப் பற்றிப் பல செய்திகளைக் கேட்டிருக்கிறேன். அவற்றைக்கொண்டு என் அகக்கண்ணில் ஓர் உருவத்தை அமைத்துப் பார்ப்பது என் வழக்கம்.

அவரை நினைக்கும் போதெல்லாம் அவரது வாழ்க்கைநெறி என் உள்ளத்தைக் கவரும். கல்வியறிவு மிகச் சிறந்ததே; ஆயினும் அவ்வறிவு ஒழுக்கத்தோடு இயையும் போது அதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டாகின்றது.

நாவலருடைய தூய்மையான வாழ்க்கை யாவராலும் பாராட்டுதற்குரியது. பொருள் வருவாயையே தலைமையாகக் கருதி அவர் வாழ்வு நடத்தவில்லை. சைவமும் தமிழும் தழைத்து ஓங்கும்பொருட்டு அவர் மனமொழி மெய்களால் தொண்டு புரிந்து வந்தார். "என் கடன் பணி செய்து கிடப்பதே," என்னும் அப்பர் திருவாக்குக்கு இலக்கியமாக அவரைக் கூறலாம். அவர் நிறுவியுள்ள சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையும், யாழ்ப்பாணத்திலமைத்துள்ள நிலையங்களும் இதற்குப் போதிய சாக்ஷிகளாகும்.

அவருடைய பிரசங்க சக்தி அவருக்குப் பெரும் புகழை உண்டாக்கிற்று. நாவலரென்னும் பெயரும் அதனாலே வந்தது போலும். "வார்த்தை பதினாயிரத்தொருவர்'' என்பது ஒரு தமிழ்ச் செய்யுட் பகுதி. “படைகளோடு சென்று போர் புரிந்து சாவார் எளியர்; சபையிலே போய்த் தைரியமாகப் பேசுவோர் மிகச் சிலர்" என்று திருவள்ளுவரும் கூறினார். அத்தகைய அரிய பிரசங்க வன்மை நாவலரிடத்திலே நன்கு அமைந்திருந்தது.

அக்காலத்துக்கு முன்பு பெரும்பாலும் புராணப் பிரசங்கங்களும் வாதங்களுமே சபைகளில் நடைபெற்று வந்தன. பொதுவாக ஒரு விஷயத்தை மேற்கொண்டு முறைப்படுத்திக் காரணகாரியங்களைக் காட்டி ஆக்ஷேப சமாதானங்களோடு பேசும் வழக்கம் தமிழ்நாட்டில் மிகக் குறைவாக இருந்தது. கிறிஸ்தவ சமயப் பாதிரிமார் செய்த உபந்யாஸங்களின் முறை தெளிவாகவும் எளிதிலே யாவரும் அறிந்து சுவைப்பதற்குரியதாகவும் இருந்தது. அந்த முறையை நாவலர் பயின்று அதிற் பேராற்றல் அடைந்தார்.

தமிழ் வளர்ச்சியின் பொருட்டு அவர் செய்த அருஞ் செயல்களுக்கு அடையாளங்களாக அவர் பதிப்பித்த நூல்கள் விளங்குகின்றன. அவருடைய பதிப்புமுறை தமிழ் நாட்டாராற் பெரிதும் மதிக்கப்படுவது.

நூலாசிரிய முறையில், நாவலர் எழுதிய நூல்கள் இந்நாட்டில் உலவுகின்றன. பாலபாடங்கள் ஒழுக்கத்தையும் சைவசமய உணர்ச்சியை யும் உண்டாக்குவன. நன்னூலுக்கு அவர் ஒரு காண்டிகையுரை எழுதியிருக்கின்றார். இலக்கணச்சுருக்கம் முதலிய சிற்றிலக்கண நூல்கள் சிலவற்றையும் இயற்றி வெளியிட்டிருக்கின்றார். இவை தமிழிலக்கணம் பயிலும் மாணாக்கர்களுக்கு மிகப் பயன்படுவனவாகும்.

சில இலக்கிய நூல்களுக்கும் அவர் உரை எழுதியிருக்கின்றனர். அவருடைய வசன நடை எளியது; வடசொற்களோடு கலந்து அழகு பெறுவது; பாலர் முதல் பண்டிதர் ஈறாகவுள்ள யாவருக்கும் பயன் தரத்தக்கது. அவர் காலத்தில் தமிழில் அழகிய வசனநடை எழுதுவோர் மிக அரியராக இருந்தனர்.

பிறரிடம் குறைகாணின் கண்டிப்பது நாவலர் இயல்பு. பொது நிலையங்களிலும், தர்ம ஸ்தாபனங்களிலும் நிகழும் தவறுகளை யாருக்கும் அஞ்சாது வெளியிட்டார். அவர் எழுதிய கண்டனப் பத்திரங்கள் பல. அவற்றை ஆராய்ந்தால் ஒவ்வொரு ஸ்தாபனமும் நெறிவழாமல் நடைபெற்று வரவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த ஊக்கம் புலப்படும்.

நாவலர் வாழ்க்கையில் ஒழுக்கத்தின் உயர்வும், கல்விப் பெருமையும், சைவ சீலத்தின் சிறப்பும் கமழ்ந்தன. அவர் சமயத் தொண்டராகவும், நாவன்மை மிக்கவராகவும், நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும் விளங்கினர்.

என்னுடைய தமிழாசிரியரான திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் நாவலரும் ஒரு காலத்தினரே. இருவரும் நெருங்கிப் பழகியதுண்டு. நாவலருடைய குணாதிசயங்களைப் பிள்ளையவர்கள் அடிக்கடி பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டினருக்குத் தமிழினிடத்தில் அன்பு வளர்ச்சி பெற்று வருகின்றது. அதற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் ஒரு காரணம் ஆவர். அவர் என்றும் தமிழ்நாட்டினரது நினைவில் இருப்பவராதலின் அவருடைய புகழுடம்பு என்றும் மறைதலின்றி நிலவி ஒளிருமென்பதில் ஐயம் இல்லை.

மூலம்: நாவலர் நினைவு மலர்

மலர் ஆசிரியர்: பண்டிதர் கா. பொ. இரத்தினம்

வெளியீடு: ‘ஈழகேசரி’ அதிபர் நா. பொன்னையா

அச்சகம்: சுன்னாகம் திருமகள் அச்சுயந்திரசாலை

ஆண்டு: பங்குனி 1938

பதிவு: 27 சூன் 2020

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top