யாழ்ப்பாணத்து நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்


"தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்", என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர, ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்), பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

"தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு". - ஆறுமுக நாவலர்.

நன்றி: www.geocities.com/shivaperumant and www.geocities.com/shivaperuman

Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top