Siriththiran Sivagnanasuntharam (Sunthar)
மாமனிதர் சிரித்திரன் சிவஞானசுந்தரம் (சுந்தர்)
'செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்'
என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன்
சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம். சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில்
புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும். 45 வருடங்களாகக்
கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் 15000க்கு
மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1963ஆம் அண்டில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்"
சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து
வெளிவந்து சாதனை படைத்தது.
சிரித்திரன் சுந்தரின் நெஞ்சில் நிறைந்த சில நகைச்சுவைகள்:
- சிரித்திரனின் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றில் ஒரு கடா ஆட்டினைத்
தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: "எல்லோரும்
இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே" என்கின்றது. சமய உண்மை ஒன்று
இங்கு சிரிப்பாக வெளிப்பட்டது.
- பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப்
போனார்?", அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற
ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்த்ப் போனார்." அடக்கடவுளே! கள்ள
பெட்டிஷன் எழுதுகிறவர்கள் உடம்பில் அவ்வளவு விஷமா?
- ரயிலில் 'ஓசிப் பேப்பர்' கேட்கிறான் ஒருவன். அதனைக் கொடுத்தவுடன் மூக்குக்
கண்ணாடியைத் தரச் சொல்லிக் கேட்கிறான். இவன் எப்படிப்பட்ட மனிதன்?
- பிச்சைக்காரன் ஒருவன் ஒரு வாலிபனை பார்த்துப் பின்வருமாறு கேட்கின்றான்: "ஐயா பிரபு,
சீதனமாக வேண்டின 3 லட்சத்தில் ஒரு 50 சதக் குத்தியை எறிஞ்சுவிட்டுப் போ."
- சவாரித் தம்பர், மெயில் வாகனத்தார் எல்லாம் நெஞ்சை விட்டு நீங்காத அற்புதமான
பாத்திரங்கள். ஒருநாள் மெயில் வாகனத்தார் வெறும் கோவணத்தோடு ஏதோ தலைபோகிற வேகத்தில்
போய்க் கொண்டிருக்கிறார். வழியிலே அவரை சவாரித்தம்பர் சந்திக்கிறார் ஒரு நக்கல்
சிரிப்பு முகத்திலே இழையோட. தனது சின்னக்குடும்பி மேலே உயர பொக்கை வாய் திறந்து "என்ன
மெயில் வாகனத்தார் குளிக்கப் போறியளோ" என்று கேட்க மெயில் வாகனத்தார் "இல்லை..
கொழும்புக்குப் போறன்.. வழியில் எல்லாம் கண்டபடி திறந்து பார்க்கிறாங்களாம். அதான்
இப்படி.." என்கிறார். பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலம் அது.
- ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும்
மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம்
தெளிந்து விடுகின்றது. "அவள் காதில் என்ன சொன்னாள்? "உனது புருஷன் அக்கவுண்டன்ற்
சோதனை பாஸ்". ஒரு மத்தியதர வர்க்கத்தின் பொருளியலை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்திய
இக்கார்ட்டூன் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழாதா?
- ஒருவர் இன்னொருவரை பார்த்து தனக்கு ஒரு 100 ரூபா மாத்தித் தருமாறு கேட்கின்றார்.
இவர் மாற்றுவதற்கு காசு எடுக்கும் போது கடனாக ஐம்பது ரூபா தருமாறு கேட்கின்றார்.
காசு உள்ளதா எனப் பார்ப்பதற்கான குறியீடே காசு மாற்றும் தந்திரமானது!
- வெளிநாட்டு மோகம் - தாய் தந்தை சோகம். இதனைச் சுட்டிக்காட்டி சுந்தரின் சுவையான
பகிடி: "என் மூத்தவன் கனடாவில், நடுவிலான் லண்டனில், இளையவன் துபாயில்.. நான் பாயில்"
என்று சவாரித்தம்பர் கூறுகிறார்.
- பெற்ற மனம் பித்து பிள்ளை மனங்கல்லு என்பதை மெயில்வாகனத்தார் "தாய் 3மிளரும்,
தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க'
என வடமராட்சிப் பேச்சு வழக்கில் கூறுகிறார். இதை விடக் கல்மனத்தை அழகாய் யாரால் கூற
முடியும்?
- மக்களை ஏமாற்றி வாய்ச்சவால் வழங்கும் அரசியல்வாதிக்கு அவன் காதருகே ஒலிபெருக்கியை
உரத்துப் பேசவைத்து எமலோகத்தண்டனை வழங்கினார் ஒரு கார்ட்டூனில் சிரித்திரன் சுந்தர்.
- ஒரு தாய் பிள்ளைகளுடன் வருகிறாள். பஸ்ஸில் இருந்த வாலிபன் எழும்பி இடம்
கொடுக்கவில்லை. அதே சமயத்தில் இளம் பெண் வருகிறாள். வாலிபன் எழும்பிப் பவுத்திரமாக
இடம் கொடுக்கின்றான். கார்ட்டூன் முடிவில் அவன் மணவறையில் இடம் தேடுவதாகச் சுந்தர்
முடித்துவிடுகின்றார்.
- ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் அழகில் குறைந்த 'மைனர் மச்சான்' என்ற பாத்திரம்
அழகியலை தன்னுள் அடக்கிச் சிறந்த நகைச்சுவையை உண்டு பண்ணியது. முதலில் மித்திரனிலும்,
பின்பு சிரித்திரனிலும் வெளிவந்த இந்தக் கார்ட்டூன் 20ஆம் நூற்றாண்டு வாலிப
உலகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன்
இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப்
பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், "எறும்புகளுக்குத்தான் சீனி
இருக்குமிடம் தெரியும்."
- ஒரு குடிகாரன் பிளாவில் கள்ளைக் குடித்துக் கொண்டு அவன் மாப்பிள்ளை பொல்லாத
குடிகாரன் என்கிறான்.
தனது சித்திரங்களைக் கார்ட்டூன் என அழைப்பதை அவர் விரும்பவில்லை. அவற்றைக்
கருத்தூண்கள் என்றே அழைத்தார். சமுதாயத்தின் குறைபாடுகளை அவர் கீறியதால் அந்தச்
சொல்லாட்சியே தனக்கு நிறைவு தரும் என அவர் கருதினார்.
மகுடி பதில்
சிரித்திரன் சுந்தரின் மகுடி பதில்கள் நறுக்கு, வித்துவத்தனம், நகைச்சுவையினூடு
கலந்திருக்கும் கருத்தாழம், புதுக் கவிதை போல் முகத்திலறையும் வேகம்
நிறைந்திருக்கும். அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
- கே: மரண அறிவித்தல் பற்றி என்ன சொல்கிறீர்?
மகுடி: இறந்தோர் பெயர் சொல்லி இறப்போர் புகழ் பாடல்.
- கே: நான்கு தமிழர்கள் ஒரு காட்டில் சந்தித்தால் என்ன செய்வார்கள்?
மகுடி: சங்கம் அமைப்பார்கள், சண்டை பிடிப்பார்கள்.
- கே: எனது நண்பன் பெண்களைக் கண்டால் நாக்கைக் காட்டுகிறான். இதற்கு அர்த்தம் என்ன?
மகுடி:அவர் பாவம் விஷமில்லாத சாரைப்பாம்பு.
- கே: தூங்கி விழுந்த தமிழனைத் தட்டி எழுப்பியது யார்?
மகுடி:அநுராதபுரத்தில் ரயிலில் ஏறிய சிங்களப் பிரயாணி.
- கே: எப்போது கை நிறையப் பணம் இருக்கும்?
மகுடி: வாய் நிறையப் பொய் இருந்தால்.
- கே: உலகில் சிறந்த சங்கீதம் எது?
மகுடி: அனாதைக் குழந்தையின் சிரிப்பொலி.
- கே: குணமில்லாதவனைப் பணத்திற்காகக் கல்யாணம் செய்யலாமா?
மகுடி: நாகரத்தினத்திற்காக நாகத்தை அரவணைக்கலாமா?
- கே: சீதனத்தைப் பற்றி..
மகுடி: ஓடு மீன் ஓட உறுமீன் வருமட்டும் காத்திருக்குமாம் சீதனக் கொக்கு.
மில்க்வைற் க கனகராசா அவர்கள் இவ்வாறு நினைவு கூறுகிறார்: "சிரித்திரன்
சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட
வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச்
செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது
பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை
விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே
பசுமையாக நிறைந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க
மாட்டா."
நன்றி:
- சுவைத்திரள் சஞ்சிகை (ஆசிரியர்: திக்கவயல் தர்மு)
- வீரகேசரி
பதிந்தது: மார்ச் 2001