Vipulananda Adigal

தமிழிசை இயக்கமும் விபுலானந்தரும்

"தமிழிசை இயக்கம் தூய கலை இயக்கமே. அதில் அரசியல் கலப்பே இல்லை. ஜாதிப் பித்தரும் இதில் இல்லை. சமஸ்கிருதத்தையோ, தெலுங்கையோ, நாம் வெறுக்கவில்லை. மற்ற மொழியார் தமது தாய்மொழிப் பாட்டைப் போற்றுவது போலத் தமிழர் தமிழ்ப் பாடல்களைப் போற்ற வேண்டும் என்கிறோம்'' என்று 'அண்ணாமலை அரசர்' தமது தமிழிசை வளர்ப்புக்கு விளக்கம் தந்துள்ளார். ராஜாஜியோ, கல்கியோ எவ்விடத்தும் தமிழிசை இயக்கம் என்ற தொடரை தமது பேச்சில், எழுத்தில் கையாளவில்லை. மாறாகத் 'தமிழ்ப்பாட்டு இயக்கம்' என்றே எழுதுகிறார்கள். இதில் தமிழிசை, தமிழ்ப்பண் போன்ற உள்ளார்ந்த பொருள்களை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கான சான்றுகளை அவர்களது எழுத்தில் காண முடியவில்லை. கர்நாடக இசை மரபு வழிப்பட்ட, தமிழ்ப் பாட்டுக்கள் தேவை என்பதே இவர்களது நோக்கம். அதாவது 'திராவிட இயக்கம் சார்ந்த தலைவர்கள்' ஆங்கில மோகிகளாக இருக்கும் தன்மையோடு அவர்களது தமிழ்ப் பற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையில் கர்நாடக இசை சார்ந்த தமிழ்ப் பாட்டுக்களை இவர் விரும்பியபடி நாம் புரிந்து கொள்வது அவசியம். இவர்கள் யாருக்கும் விபுலானந்தர் எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தினார் என்று அறிய முடியவில்லை. 1933-இல் தமது வீட்டில் தேஈசியக்கொடி ஏற்றி அந்த ஆண்டே அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியப் பணியை விட வேண்டிய அவசியம் ஏற்பட்ட விபுலானந்தர், 1941-இல் நடந்த முதல் தமிழிசை மாநாட்டில் மிகப் பெரும் சிம்மாசனத்தில் இருக்க வேண்டிய விபுலானந்தர், இலங்கை செல்ல வேண்டிய சூழலும், 1934 தொடங்கிய இசை ஆய்வில் தனி மனிதராக ஈடுபட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுப் போனதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.

1926-இல் இவரது 'மதங்க சூளாமணி' ஆய்வும், 1936-இல் சென்னைப் பல்கலை ஆய்வும் தமிழிசை மற்றும் கலை தொடர்பான ஆழமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தினாலும், அது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகளில் இவரது பங்களிப்பு கவனத்தில் கொள்ளப்பட்டதாக அறிய முடியவில்லை.

இங்கு வெற்று அரசியல் கோஷம் மற்றும் காலந்தோறும் ஆளும் வர்க்கமே கலைகளைக் கட்டிக் காக்கிறது என்பது போன்ற 'புரவலர் போற்றும்' பண்பாட்டுக்களம் அரசர்களுக்குத் தேவை. இருபதாம் நூற்றாண்டு அரசருக்கு இவ்வகையில் தமிழ்ப்பாட்டு தேவைப்பட்டது. இதனை வேறு வகையில் புரிந்து கொள்ள, மேல்சாதி, மேல் வர்க்க பண்பாட்டு நிகழ்வுகளில், அவர்களுக்குள்ள முரண்பாடுகளே இவை. உண்மையான கோட்பாட்டு ரீதியான தமிழியல் தொடர்பான ஆய்வுப் போக்காகக் கண்டு ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது. இதனை உறுதிப்படுத்த விபுலானந்தர் பற்றிய இவ் அமைப்புகளின் 'கவனிப்புகளை' நல்ல எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம்.

1930 மே மாதம் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் இசைச் கச்சேரி நடைபெற்றது. அதில் பார்ப்பனர் அல்லாதார் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று பெரியார் அறிவித்தார். அவருக்குத் தமிழிசை என்ற கோட்பாட்டுக் கருத்தாக்கத்தில் அக்கறை இருந்ததாக அறிய இயலவில்லை. மாறாகப் பாடுபவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் 'தமிழ்ப் பாட்டு' கேட்பவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதாவது, தமிழ்ப் பாட்டுக்களை இசை அரங்குகளில் பாட வேண்டும் என்பவர்களிலிருந்து தமிழ்ப் பாட்டுக்களைப் பார்ப்பனர் அல்லாதவர் பாட வேண்டும் என்ற கருத்தாக்கம் கொண்டிருந்தார்.

எனவே, மேற்குறித்த தமிழிசை மற்றும் தமிழ்ப்பாட்டு தொடர்பான தமிழகத் தமிழிசை வரலாற்றில், தமிழிசைக்கென கோட்பாட்டு உருவாக்கத்தை இந்திய தேசியத்தை ஏற்றுக் கொள்ளும், ஆரிய திராவிட பாஷா சங்கத்தை உருவாக்கி வளர்க்க விபுலானந்தர் முயன்றார்.

சிலப்பதிகாரத்தில் இங்கு, இவர் கருணாமிர்த சாகர கர்நாடக இசை வழிப்பட்ட அணுகுமுறைகளில் வேறுபடுகிறார். எனவே அவர் வழிப்பட்ட ஆய்வுப் போக்குகளில், விபுலானந்தர் முன்னெடுக்கப்படவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மைக் காலங்களில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கருணாமிர்த சாகரம் வழிபட்ட 'புதிய ராகங்கள்' அவரது பரம்பரையினராக ஆய்வு செய்யப்பட்டு வெளிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விபுலானந்தரால் உருவாக்கப்பட்ட வெள்ளைவாரணர் போன்ற அவரது மாணாக்கர்களும் விபுலானந்தர் மேலும் தொடர விரும்பிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.

தேசியவாதிகள், சுயமரியாதை இயக்கத்தவர்கள் இவர்களின் அணுகுமுறைகளிலிருந்து பல வகைகளில் மாறுபட்ட விபுலானந்தர் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வெற்று ஆரவார அரசியல்வாதிகளுக்குக் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை தேவையில்லைதான்.

'1946-களில் செம்மங்குடி தமிழ்ப் பாட்டுப் பாடியதோடு தமிழிசை இயக்கம் முடிவுற்றது' என்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கூற்றை இங்கு நாம் நினைவுபடுத்துவது அவசியம்.

1947-இல் விபுலானந்தரின் இசைத் தமிழ் நூல் வெளியிட்ட பின்பு, 1941 முதல் தமிழ்ப் பாட்டுக் கச்சேரி நடத்திய அண்ணாமலை மன்றம் 1909 முதல் பின் ஆராய்ச்சியும் தொடங்கியது. அதில் பெ. தூரன் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவ் ஆராய்ச்சி தொடர்பான அவரது கட்டுரையில் விபுலானந்தரை நினைவுகூர்கிறார். இங்கும் வடமொழி / தமிழ் என்ற இரு திசைகளில் - தமிழிசை ஆராய்ச்சியை பெ. தூரன் முன்னிறுத்துகிறார். விபுலானந்தர் இவ்வகை அணுகுமுறையின்றி, வரலாற்று வளர்ச்சியில் இரண்டு இசை மரபுகளின் இணைப்புகளில், உருவான இசையை முன்னெடுப்பதைக் கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டது.

மேற்குறித்த எவ்வகை அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட விபுலானந்தர் 'தமிழுக்கென்று தனியான இசை மரபு உண்டென்று உறுதிப்படுத்திய கோட்பாட்டாளர்' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவரது அணுகுமுறை வட மொழிக்கோ, பார்ப்பனர்களுக்கோ, தெலுங்கர்களுக்கோ தியாகய்யருக்கோ எதிர்நிலை எடுக்கவில்லை. மாறாக அவற்றின் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளைக் கவனத்தில் கொண்ட ஆய்வாளராக, உண்மையான தமிழிசைத் தேடலின் மூலவராக அறியப்படுகிறார்.

இன்றைய இயங்கியல் போக்கிலான தமிழியல் ஆய்வுக்கு வளம் சேர்த்த / சேர்க்கும் பேராசிரியர்கள் கைலாசபதி / சிவத்தம்பி ஆகியோரின் அணுகுமுறையும், பேராசிரியர்கள் தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளையின்அணுகுமுறையோடும் ஒரு தளத்தில் விபுலானந்தர் இணைந்து வருகிறார். இவரது ஆய்வு நேர்மை, தத்துவம் மற்றும் அரசியல் அடிப்படையற்ற தமிழகப் பண்பாட்டு இயக்கங்களால் கவனத்தில் கொள்ளப்படாமை ஆச்சரியமன்று.

நன்றி: ஆறாம்திணை, இணையத் தமிழிதழ் 2007-09-26