சிவமயம்

யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்

சைவநன்மணி நா. செல்லப்பா



ங்கு கொடுக்கப் படுவது மனவாசக விளக்கமாகும். இது மெய்யுணர்தற் தெளிவு ஆகமாட்டாது. மனவாசக விளக்கமுலம் நாம் சாதனர் நெறிகளை அறியலாமே யன்றி மெய்யுணர்தலோ அல்லது சத்திய தரிசனமோ பெறுதல் இயலாது. சத்திய தரிசனத்தை ஒவ்வொரு சாதகனும் சுயமாகவே உரிய சாதனை செய்து கண்டு பிடித்தல் வேண்டும். சத்திய தரிசனத்தை மாசறு காட்சி என்றும், நிருவிகற்பக்காட்சி என்றும், சிவக் காட்சி என்றும், கடவுள் தரிசனம் என்றும் பலவாறு வர்ணிப்பார்கள்.

யோகசுவாமிகள் அருளிய நான்கு மகாவாக்கியங்களும் மற்றும் நற்சிந்தனைகளும் மனவாசக விளக்கமாக உள்ளன. அவற்றைக் கற்பதனாலோ அல்லது பாராயணம் செய்வதனாலோ நேரடியாக எவராலும் முழுமையான சத்திய தரிசனம் பெறுதல் அரிதாகும். அரைகுறையான உண்மை விளக்கம் பெறுதல் கூடும். ஆனால் அது பூரணமாகாது. அவற்றை சாதனை செய்தல் மூலமே சத்தியதரிசனம் பெறலாம்.

மாசறு காட்சி பெறவிரும்புவோர் முதலில் மனவாசக விளக்கம் பெறுதல் அவசியமாகும். ஏனெனின் அதன் மூலமாகத்தான் சாதனா நுட்பங்களை நாம் விளங்கி கொள்ள முடியும். சாதனா நுட்பங்களைச் சரிவர விளங்கிக் கொள்ளாது சாதனை செய்தல் வீணாகும். தவறான சாதனைகள் ஒருபோதும் மெய்யுணர்தலைக் கொடுக்கமாட்டா. இந்த அடிப்படை விளக்கத்துடன் யோகசுவாமிகள் அருளிய நான்கு மகாவாக்கியங்களையும் வழுவறப் பயில்வோம். அவற்றைச் சாதனைக்குரிய ஒழுங்கு முறையில் அமைத்து இங்கு தருகிறோம். அவையாவன:

1. எப்பவோ முடிந்த காரியம்

2. நாம் அறியோம்

3. ஒரு பொல்லாப்பும் இல்லை

4. முழுதும் உண்மை

என்பவாகும்.

இந்நான்கு வாக்கியங்களும் யோகசுவாமிகளுக்கு அவருடைய சற்குரு செல்லாப்பச் சுவாமிகளினால் உபதேசிக்கப்பட்டனவாகும். இவை போதனா முறையில் அமைந்துள்ளபோதும் இவற்றுள் அற்புதமான சாதனா நெறி நுட்பங்கள் மறைந்து பொதிந்துள்ளன.

இவை வேதாகம மகாவாக்கியங்களைப் போல உயர்ந்த தெய்வீகத் தன்மை உடையனவாகும். வேதமொழியை மறைமொழி என்பது போல யோகசுவாமிகள் மொழியையும் மறைமொழியென நாம் கொள்ளுதல் பொருத்தம் உடையதாகும். இவை சுத்தமான இலகு தமிழில் உள்ளபடியால் இவற்றை விளங்கிக் கொள்ளுதல் எளிதென நாம் நினைக்கலாம். மொழி சுலபமாக இருந்தபோதும் அவற்றிற் பொதிந்துள்ள மறை பொருளைத் தெளிந்து கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. மொழி வல்லுநர் மகாவாக்கியங்களுக்குச் சுலபமான உரை எழுதலாம் உரைவிளக்கம், மறைஞான மெய்ப்பொருள் விளக்கம் கொடுப்பது சந்தேகமாகும். பக்தி சிரத்தியுடன் கூடிய அவதான ஆற்றலும், விழிப்புணர்வும் நடுவு நிலை வைராக்கிய விசாரணையும் இல்லாது மறைஞான மெய்ப்பொருளைத் தெளிய முயற்சிக்கும் சாதகர்கள் இலகு காத்த கிளிபோல் ஆவார்கள்.

சாதனா முறைகள் பலவற்றிலும் சிறந்ததாகக் கருதப்படுவது, தியான விசாரணையாகும். அதன் மூலமாகவே மகாவாக்கியங்களின் மெய்ப்பொருளையும் அவை மறைமுகமாகக் காட்டும் சாதனா நுட்பங்களையும் நாம் சுயமாவே கிரகித்து உணர்ந்து தெளிய இயலும். தியான விசாரணை செய்வதற்கு நடுவு நிலை மிகவும் அவசியமாகும். நடுவுநிலை நிற்பதென்பது வள்ளுவன் வாக்கின் வண்ணம், "சமன் செய்து சீர்தூக்கும் (தராசுக்) கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை (சார்ந்து நில்லாமை) ஆகும். திருமூலர் கூற்றின்படி:

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை

நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை

நடுநின் றர்நல்ல தேவரு மாவர்

நடுவுநின் றார்வழி நானும் நின்றேனே


என்பதாகும்.

எனவே நாமும் நடுவு நிலை நின்று யோகசுவாமிகள் அருளிய மகாவாக்கியங்களைத் தியான விசாரணை செய்து அவற்றுட் பொதிந்துள்ள சாதனா நுட்பங்களை கிரகித்துத் தெளிந்து சரிவர அனுட்டிப்போம். அவற்றின் மறைபொருளைக் கிரகித்துத் தெளிவதற்குச் சுட்டறிவாற்றல் போதாது. அதற்கு வேண்டுவது விவேகப்படைப்பு சக்தியாகும். விவேகப்படைப்பு சக்தியை எந்த ஒரு மனித குருவாலும் தமது சீடர்களுக்குச் சுட்டறிவு போல வழங்குதல் இயலாது. விவேகப் படைப்புச் சக்தியை நல்கி அருள்பவர் சிவகுருவே ஆவர். எனவே அவன் தாள் வணங்கி அவன் அருளாலே மகாவாக்கியங்களிலுள்ள சாதனா நுட்பங்களைத் தியான விசாரணை செய்து கிரகித்துக் கொள்வோம்.

1. எப்பவோ முடிந்த காரியம்

தியான விசாரனை செய்து கிரகித்து மெய்யுணர்தல் பெறுவதற்கு வேண்டிய திருவருள் தம்மிடம் இல்லையே என ஏங்கி அல்லற்படும் சிவனடியார்களுக்கு யோகசுவாமிகள் முதலாவது உபதேசத்தை வழங்குகிறார். வேறு சில சாதகர்கள், "நாளும் கோளும் குறுக்கிடுகின்றவே, பிராரப்த கர்மவினைகள் தடையாக உள்ளனவே, நம்மால் என்ன செய்ய இயலும்?", என மனம் வருந்தி ஆத்மீக விடுதலைக்கு வேண்டிய சாதனை செய்யாது சாட்குச் சொல்கின்றனர். நாளும் கோளும் பழவினையும் மெய்யடியார்களை அசைக்கமுடியாதென்பதை விளக்கும் திருமந்திரம் ஈதோ:--

ஆளும் மலர்ப்பதந் தந்த கடவுளை

நாளும் வழிபட்டு நன்மையும் நின்றவர்

கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்

வாளு மனத்தொடும் வைத்தொழிந் தேனே!


இதன் பிரகாரம் யோகசுவாமிகள் திருவருள் மலரப்பெற்ற மனத்தினால் கோளும் வினையும் அறுத்த நற்குருதேவராவர். திருவருள் எற்படவில்லையே என ஏங்கி வருந்தி அல்லற்படும் அடியார்களுக்கு நம்பிக்கையும் சாதனை செய்வதில் ஆர்வமும் ஏற்படும்படி

எப்பவோ முடிந்த காரியம்

என அருள் உபதேசஞ் செய்துள்ளார்.

உலகிற்கு முதன்முதலாகச் சிருஷ்டிக்கப்பட்ட ஒருசெல் (cell) உள்ள 'அமீபா' எனப்படும் சீவராசிகளிலிருந்து கூர்ப்பு எய்தி மனித இனமாக வளர்ந்துள்ளதுவரை சகல உயிரினங்களும் அருட்சத்தி கொண்டு சுயமாக முன்னேறும்படியே வாய்ப்புப் பெற்றுள்ளன. உயிர்களிடம் அருட்சத்தியானது படைக்கப்பட்ட பொழுதே இயற்கையாக இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது. மக்களும் அவ்வாறே திருவருள் கொண்டு பிறக்கிறார்கள். அது எப்பவோ முடிந்த காரியம். என்றைக்குச் சிவ கிருபை வருமோ? என நாம் ஏங்கிப் பாடி அலறவேண்டியதில்லை. வேத நாயகன் வேண்டுதல் வேண்டாமையினான் என்பதை இவ்வாக்கியம் எடுத்துக் காட்டுகிறது. திருவருளை வேண்டி ஸ்தல தீர்த்த யாத்திரை செய்து நாம் அலைதல் தேவையில்லை.

மக்களிடம் பிறக்கும் பொழுதே அமையப் பெற்ற திருவருளானது மேகங்களால் மறைக்கப்பட்டுள்ள சூரியனைப் போல மறைந்துள்ளது. அதேபோல எமது இதயத்தில் உள்ள அருள் ஒளி பந்த பாசத் திரைகளால் மறைக்கப்படுள்ளது. அது பிரகாசமாகப் புலப்படவேண்டுமானால் பாசத்திரையை நீக்கம் செய்தல் அவசியமாகும். "எப்பவோ முடிந்த காரியம்" என்னும் உபதேசத்திலிருந்து நம் கிரகித்து உணரக்கூடியது யாதெனின் எம்மிடம் மறைந்துள்ள அருட்சத்தியை வெளிகொண்டு வருதல் வேண்டுமாயின், பாசநீக்கம் செய்தலே சிறந்த சாதனம் என்பதாகும். பாசநீக்கத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நான்கு முக்கியமான சாதனைகள்: கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிட்டைக் கூடுதல் எனபவாகும். அவற்றை யோகிகள் பத்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், சிவஞானயோகம் எனக் கூறுவர். சிவனடியார்கள் அவற்றைச் சரியை கிரியை யோகம் ஞானம் என வர்ணிப்பார்கள்.

எப்படி இருந்த போதும் இந்த நான்கு சதனா நெறி முறைகளையும் அனுசரித்துள்ளனவாக நான்கு மகாவாக்கியங்களும் இருப்பதை நாம் கிரகித்துத் தெளிந்து கொள்ளலாம்.

எப்பவோ முடிந்ததென்னும் இலக்கியத்துக்கு இலக்கணமாக அமைந்ததே கேட்டல் எனப்படும் சாதனையாகும். இந்தக் கேட்டற் சாதனையை மறுசாதனைகளைப் போல இரண்டு நெறிகளில் நாம் அனுட்டிக்கலாம். ஒன்று உபாயநெறி என்பது; மற்றது சத்திய நெறியாகும். உபாய நெறி என்பது உலக நன்மைக்காகப் பலன் கருதிச் செய்யப்படுவதாகும். சத்திய நெறியானது, ஆத்மீக விடுதலையின் பொருட்டுப் பலன் கருதாது செய்யப்படும் சாதனையாகும். உபாயநெறி பாசிக் குளத்தில் கல்லெறிதல் போலும், பசித்தவன் புசித்தல் போலும் தற்காலிகமான பேற்றைக் கொடுப்பதாகும். அது மன இந்திரிய விழிப்பு நிலையில் கேட்டலாகும். அதன் மூலம் சுட்டறிவையும் பணம் புகழ் பட்டம் முதலியவற்றையும் சம்பாதிக்கலாம். அவை ஆத்மீக விடுதலைக்குப் பதிலாகப் பாசப் பிணைப்பை அதிகரிப்பனவாகும். யோகசுவாமிகள் சத்திய நெறியில் இம்மியளவும் தவறாது நின்றே இறைபணி ஆற்றினார். அவர் சகல சீவராசிகளிடமும் அன்பின் பொருட்டே அன்பு செலுத்தினார். அநேகமான துறவிகளைப் போல அவர் அன்பில் வாணிபம் செய்ததில்லை. எப்பவோ முடிந்த காரியம் என்பதைத் தெளிந்தால் நாம் இறைவனுடன் வர்த்தக ரீதியில் தொடர்பு கொள்ள எவ்வகையினும் எத்தனிக்க வேண்டியதில்லை.

உபாய நெறி அனுட்டானங்களைப் பொதுவாகப் புறப்பூசை எனக் கூறுவர். சத்திய நெறிச் சாதனைகளை அகப்பூசை அல்லது அந்தர்யாக பூசை என விளக்குவர். இவ்விரு பூசைகளைப் பற்றி தெளிவுபடுத்தும் உபநிடதச் சுலோகம் ஒன்றை இங்கு நினைவு கூர விரும்புகிறோம்:

பிரதமா பிரதிமா பூஜா

ஜெபஸ் தோத்திரம் மத்தியமா

உதமா மாணஸி பூஜா

சொகம் பூஜோத்த மோத்தமா


இச்சுலோகத்தில் சாதகர்கள் ஆரம்பக் கட்டட்தில் செய்யும் புறப்பூசையாகிய விக்கிரக வழிபாட்டை அதமமானதென்றும், செபதோத்திரம் செய்து வழிபடுதலை மத்தியமான தென்றும், அகப்பூசையை உத்தமானதென்றும், சிவோகம் பாவனை எனப்படும் சோகம் பூஜனையை உத்தமத்திலும் உத்தமமான தென்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்நான்கு படிமுறைக் கிரமத்தில் பூசை செய்து ஆத்ம ஈடேற்றம் பெற விரும்பும் சாதகர்கள் ஆரம்பப்படியிலேயே நின்று கொண்டு படியேற்றம் பெற்றுவிட்டதாகத் தற்பெருமை கூறினாற் போதாது. படியேற்றம் என்பது ஒரு படியை விட்டு மறுபடிக்கு ஏறுதலாகும். ஒரே படியில் என்றும் நிற்றல் ஒருபோதும் படியேற்றம் ஆகாது. மனித இனம் உலகில் தோன்றி 25 இலட்சம் வரை ஆகின்றதென விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இத்தனை காலமாகப் பெரும்பான்மை ஆத்மீக முன்னேற்றத்தில் ஆரம்பப் படியில் நின்று கொண்டு சமய முன்னேற்றம் அடைந்துவிட்டதாகப் பெருமைப்படுவதில் பிரயோசனமில்லை.படியில் அசையாது நிற்கும் அபிமானத்தை விடாத வரைக்கும் படியேற்றம் பெறுதல் பகற்கனவாகும். சுருக்கமாகச் சொல்வதாயின் படிகள் யாவற்றையும் தாண்டினாற்றான் குறித்த இடத்தை நாம் அடையமுடியும். படியில் நிற்றல் யாத்திரை முடிவு ஆகாது.

எப்பவோ முடிந்த காரியம் என்னும் மகாவாக்கியத்தின் மறை பொருளை நாம் வழுவற உணர்தல் யோகசுவாமிகள் முக்கியமாக அநுட்டித்த சிவோகம் பாவனைப் பூசையை நாமும் அனுசரிப்பதற்கு அவசியமாகும். மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய ஒரு திருவாசகம் சிவோகம்பாவனை செய்வதற்கு உத்தம வழிகாட்டியாக உள்ளது. எப்பவோ முடிந்த காரியம் என்பதையும் தெளிவுபடுட்துகிறது. அது," இறைவனே ! நீ என் உடலிடங் கொண்டாய்! இனி உன்னை என்னிரக்கேனே!" என்பதாகும். இறைவன் எம் உடலிற் குடிகொண்டு உயிருக்கு உயிராகவும் அறிவுக்கு அறிவாகவும் உள்ளான். அது எப்பவோ முடிந்த காரியம்.

எனவே நாம் அவனிடம் காணிக்கை வைத்துப் பேரம்பேசி அது இது என யாது இரக்கவேண்டியுள்ளது? அவனை மறைத்துள்ள திரை சேலையை நீக்கினால் மட்டும் போதும். கோயிலிற் கூட விக்கிரகத்தைத் தரிசிப்பதாயின் திரைச் சேலையை நீக்கியே ஆகுதல் வேண்டும்.

அதேபோல எம் இதயத்திலுள்ள இறைவனை மறைத்துள்ள பாசத்திரையை நாம் நீக்குதல் வேண்டும். அதுவே நாம் செய்ய வேண்டிய சிறந்த சாதனையாகும். பண்டமோ பொருளோ பணமோ கொடுத்து நேர்த்திக் கடன் வைத்துக் கோயிலில் பிராமண பூசகரைக் கொண்டு செய்விக்கப்படும் பூசை இரத்தற் பூசையாகும். அதை மணிவாசகப் பெருமான் கண்டிப்பாக நிராகரிக்கின்றார். யோக சுவாமிகள் அருளிய எப்பவோ முடிந்த காரியம் என்னும் உபதேசம், திருவருளானது எம்மிடம் ஏற்கனவே அமைந்திருக்கும்போது

அதை பெறுவதற்குப் புறப்பூசைகள் வேண்டுவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. அவர் சிவோகம்பாவனை செய்வதிலேயே கூடுதலாக ஈடுபட்டிருந்தார். வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய் இல்லையே என அழுதல் பேதைமையாகும். தன்னிடம் உள்ள கஸ்த்தூரியின் நறுமணம் எங்கிருந்து வருகிறதென்பதை உணராத கஸ்த்தூரிமான் அதைத் தேடிப் புறவுலகில் அலைகிறதாம். அதேபோல நாம் அலைதல் அடுக்குமா? அடுக்காதென்பதை எப்பவோ முடிந்த காரியம் விளக்குகிறது.

இலக்கிய உலகில் இன்று தாசன் என்னும் சொல் மலிவாக அடிபட்டு வருகிறது. தாசன்மார்களுக்குக் குறைவில்லை: கம்பதாசன், பாரதிதாசன் கண்ணதாசன் காளிதாசன் எனப் பல பெயர்கள் வழங்கப் படுகின்றன. தாசன் என்பது பரதந்திரனையாகும். பரதந்திரன் பிறரில் தங்கியிருக்கும் அடிமையாவான். அடியார்கள் அடிமைகள் அல்லர். அவர்கள் சுதந்திர புருஷர்களாவர்.

பொறிவழி ஓடுபவன் பரதந்திர னாவான்

இறைவழி மிளிர்பவன் சுதந்திர னாவான்


யோகசுவாமிகள் இறைவழி மிளிர்ந்தவர் ஆவர். தன்னிடம் எப்பவோ முடிந்த காரியமாக மறைந்திருந்த அருளொளியை பாசநீக்கத்தால் மிளிரப் பெற்ற மகானாவர். அவர் காட்டிய வழி இறைவழியேயன்றி பரதந்திர வழியல்ல. அவர் எவரையும் பரதந்திரராகத் தன்மீது தங்கியிருந்து தன்னுடைய அடிகளை வழிபட்டு ஆத்ம விடுதலை பெற முயற்சிக்கும்படி கூறவில்லை. ஒருவரையும் அவர் தனக்கு தாசனாக இருக்கும்படி கூறவில்லை. ஒருவரையும் அவர் தனக்குத் தாசனாக இருக்கும்படி வேண்டியதில்லை. இறைவனையே அவர் இரட்சகராக வழிபட்டார். அதுவும் அவனே தானாகிய அத்துவித நெறி நின்று -- அது எப்பவோ முடிந்த காரியம் எனத் தெளிந்து -- வழிபட்டார். எனவே சிவனடியார்கள் எவரும் யோகசுவாமிகளுடைய அடிகளை வழிபட வேண்டியதில்லை. அவர் காட்டிய இறைவழியைச் சுதந்திரமாக அனுசரித்தலே சிறந்த சாதனையாகும்.

சிவனடியின் மறைபொருள் சுத்த சத்தியாகும். சிவனடியை வழிபடும் அடியார்கள் சுத்த சத்தி பெறுவார்கள். திருவடி வழிபாடு அந்தர்யாகப் பூசையைக் குறிப்பதாகும். அது மானிட குருமார்களின் காலடிக்குப் புறப்பூசை செய்வதன்றி சுத்த சத்தியும் ஆத்மாவும் அத்துவிதமான ஒருமைப்பட்டுள்ளனவாகும். இதைத் தெள்ளத் தெளிய உணர்ந்த யோகசுவாமிகள் தமது நற்சிந்தனை நூலில்:

அவனே நானென்று சொல்லித் தியானம் செய்தினமும்

ஆசை எல்லாம் ஒழியும் ஈசனருள் பொழியும்


என எமக்கு உபதேசித்துள்ளார். அவனே நானென்று சொல்லித் தியானிப்பதற்குரிய வேதாகம மந்திரம் "சோகம்" என்பதாகும். இப்பதம் "சோ " என்றும் "அகம்" என்றும் பகுக்கக்கூடியதாகும் -- "சோ" அவனையும் "அகம்" நான் எனும் ஆத்மாவையும் குறிப்பதாகும். இந்த மந்திர உச்சாடன செபதியானம் சிவோகம்பாவனையாகும். அது மனவிருத்தியை நீக்குவதற்குரியதாகும். அதை ஓதும்போது பக்தி சிரத்தையும் தூய நம்பிக்கையும் அசையாது இருந்தாற்போதும். எவ்விதமான மனக் கற்பனையோ அல்லது கருத்து விளக்கமோ கொடுத்தல் சிவோகம்பாவனைக்குப் பங்கம் விளைவிப்பதாகும். அதில் தாசன் - எஜமான் அடி-முடி என்னும் இருவகை எண்ணங்களுக்கு இடமில்லை. தாள்-தலை (அடி-முடி) எனப்படும் பாகுபாடின்றி தாடலையாகிய தனிப்பதமாகவே அது விளங்கும்.

இறைவன் சகல உயிர்களுக்கும் சமமாகவே சூரியனைப்போல அருள்பாலிக்கிறார். சம அருள்பாலிப்பு என்பது எப்பவோ முடிந்தது; என்றும் தொடர்ந்துவரும் காரியமாகும். ஆனால் மக்களிடையே புலப்படும் திருவருட்பொலிவு சமமாக இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் யார்? என்பது எமது மனச்சார்பற்ற ஆய்வுக்கும் உண்மைத் தெளிவுக்கும் உரியதாகும். இறைவனுடைய படைப்புத் தொழில் இயற்கை நியதியின் கூர்ப்பு எனப்படும் பரிணாமக் கிரமத்தில் அமைந்திருப்பதாகப் புலப்படுகிறது. அதில் உயிர்கள் சுயமாகவே முன்னேறக்கூடிய சத்தியைப் பெற்றுள்ளன. அது எப்பவோ முடிந்த காரியம். இங்ஙனம் சுயசத்தியைப் பெற்ற உயிரினங்களில் செயற்பாட்டில் இறைவன் தலையிடுவதில்லை. கூர்ப்புக் கிரமத்தில் மனிதநிலை அடைந்த உயிர்கள் பகுத்தறிவைப் பெற்றன. பகுத்தறிவென்பது மனத்தின் ஆக்கமாகும். அது சிந்தனைத் தொகுப்பினால் உருவாக்கப்படுவதாகும். பகுத்தறிவு இருமைவகை உடையதாகும். அது எவ்வளவு முதிர்ச்சி அடைந்தாலும் இருமைவகை நீங்கப்பெறுவதில்லை. பகுத்தறிவு முதிர்ச்சி அடைந்த மனிதனிடம்தான் கூடுதலான இருமைவகை உணர்ச்சிகள் உருவாகின்றன. அதனால் அவன் இறைவனிடமும் சமநிலையற்ற இருமைவகை வேறுபாடு உள்ளதெனக் கற்பனை செய்கிறான். கற்பனைத் திறமையாலும் கவித்துவச் சிறப்பாலும் கடவுளுக்கும் அசுரத்தன்மை கூடுதலாக உள்ள மனிதனுக்கும் போர் நிகழ்வதாக புராண இதிகாசங்களைப்படைக்கிறான். நல்லவர்களுக்கு அருளும் பொருட்டுக் கடவுள் துஷ்ட நிக்கிரக சிஷ்டப் பரிபாலனம் செய்கிறார் என்னும் கொள்கையைப் பரப்புகிறான்.

இது கொள்கையே யன்றி பூரணமான சத்தியம் அல்ல. இக்கொள்கையாளர்தாம் கடவுள் நல்லவர்களுக்குச் சன்மானமும் தீயவர்களுக்குத் தண்டனையும் வழங்குகிறார் என்று நம்புகின்றனர். இக்கொள்கையைச் சங்கத் தமிழ் நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சான்றோர்கள் மறுத்து : நன்றும் தீதும் பிறர்தர வாரா" எனத் தெளிவு படுத்தியுள்ளனர். நன்மையும் தீமையும் இருமைவகையுடைய மனித மனத்தால் சிருஷ்டிக்கப்படுவனவாகும். அவை இறைவனுடைய சிருஷ்டி அல்ல. அவை இரண்டும் ஒரே நாணயமாகிய மனத்தின் இருபக்கங்களாகும். நன்மையிலும் தீமை உண்டு; தீமையிலும் நன்மை உண்டு. சான்றோர்கள் இவை இரண்டையும் சமமாகக் கருதி இவற்றிலிருந்து விடுதலைப் பெறுதலே மோட்சம் எனக் கொண்டனர். உண்மை இவ்வாறாக இருக்கக் கடவுள் சகல உயிர்களுக்கும் சமமாகக் கருணை காட்டாது நல்லவர்களுக்குச் சன்மானமும் தீயவர்களுக்குத் தண்டனையும் கொடுத்து பேறுபாடு காட்டுகிறார் என்ற மூடக் கொள்கையை நாம் சத்தியம் என ஏற்றல் எங்ஙனம் அடுக்கும்?

இயற்கை பரிணாம முன்னேற்றம் மூளைசாலிகளான பகுத்தறிவாளருடன் முடிவடைந்து விடுவதாகப் புலப்படவில்லை. பகுத்தறிவுக்கு அப்பாலுள்ள தெய்வீகப் படைப்புச் சத்தியை முழுமையாக மனிதன் மலரப் பெறுவதுடன் தான் அது முற்றுப்பெறுவதாகத் தெரிகிறது. உலகில் நன்மைக்கும் தீமைக்கும் அறத்துக்கும் மறத்துக்கும் தீராத போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. எந்த ஒரு அவதார புருஷனும் போராட்டம் நடத்தி நிரந்தரமாக நன்மையையோ அல்லது அறத்தையோ நிலை நிறுத்தியதாகப் புலப்படவில்லை. மனிதனிடம் இருமைவகை மனம் விருத்தியடைந்து கொண்டிருக்கும் வரைக்கும் இந்த எதிர்ப்புச் சத்திகளின் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதை வழுவற உணர்ந்த சைவ சித்தாந்திகள் இராப்பகல் அற்ற இடத்தே அறிதுயில் கொண்டு இருவினைக் கெடும்போதுதான் மனிதனிடம் தெய்வீகமான விவேகப் படைப்புச் சத்தி அல்லது மெய்யுணர்தல் சுயமாகவே உள்ளிருந்து மலரும் எனக் கண்டறிந்துள்ளனர். மெய்யுணர்தல் பெறுவதற்கு எவ்விதமான அகப்போராட்டமோ அல்லது புறப்போராட்டமோ தேவை இல்லை. அதற்கு வேண்டியது மனச் சார்புணர்ந்து அச்சார்பு கெட ஒழுகி ஈண்டு இருமைவகை தெளிந்து புனிதமான அறம் பூண்டு வாழுதலாகும்.

புனிதமான அறமும், நன்மையும் மன விருத்தியினால் ஆக்கப்படும் மறத்துக்கும் தீமைக்கும் எதிரான சார்புநிலையில் உருவாகுவன அல்ல. தனியான , எதிர்ப்பு சத்தி இல்லாத அறமும், நன்மையும் பேரின்பமும் இருக்கவே இருக்கின்றன. அவற்றை மனவிருத்தியால் உருவாக்கமுடியாது. அவற்றை நாம் பூரணமாகச் சுட்டறிவால் அறியோம் என்பது யோகசுவாமிகள் அருளிய இரண்டாவது வாக்கியமாகும். அதை சாதனைக்குரிய முறையில் தொடர்ந்து ஆய்ந்து உண்மை விளக்கம் பெறுவோம்.

அணிந்துரை
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top