புலவர்மணி கவிசிந்தாமணி
பண்டிதமணி சோ. இளமுருகனார்
அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள்
- கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் -
புலவர்மணி கவிசிந்தாமணி ஆசிரியர் பயிற்சிக்கழகங்களில் அருந்தமிழ்ப்பணி
கோப்பாய் அரசினர்ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திய மகாலிங்கசிவம் அவர்கள் இயற்கையெய்திய பின் அப்பதவிக்கு மிகமிகப் பொருத்தமானவர் இவரே யெனக்கண்டு நியமிக்கப்பட்டார். இவர் பணியினால் அக்கழகம் பெருமை பெற்றது. புலவர்மணி கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் ஏறத்தாழ 15 ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியராகக் கடமை புரிந்துள்ளார். அக்காலத்தே பல ஆசிரியர்களையும் ஆசிரிய மாணவர்களையும் வண. குருமார்களையும் தமிழ் கற்கத் தூண்டிப் பண்டிதர்களாக ஆக்கியுள்ளார். அதிபர் வண. சிங்கராய சுவாமிகள் ஓ.எம்.ஜ.எம்.ஏ (இலண்டன்) அவர்களின் வேண்டுகோளின்படி மகாகவி செவப்பிரியர் (Shakesphere) எழுதிய கமலேசன் (Hamlet) என்னும் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து நடிப்பித்து அறிஞர்களின் பாராட்டையும் பெற்றார். திருநெல்வேலிப் பரமேசுவரா ஆசிரிய கலாசாலையில் மாவை நவநீதகிருட்ணபாரதியாருடன் சேர்த்து விரிவுரையாளராய்ச் சீரிய பணி புரிந்த இவர் கலாநிதி திரு. கு. சிவப்பிரகாசம் எம். எஸ்.சி. அவர்களைத் திருவாசகத்தில் ஈடுபட்டுக் குழைவுறும் வண்ணம் செய்தார்.தமிழுரிமைப் போரும் தலைவர் பணியும்
தமிழ் மொழி சைவத்திருநெறி என்பவற்றிற்கு மகத்தான தொண்டு புரிந்த கவிமணியவர்கள் உரிமை வேட்கையிலும் உறைப்புற்று நின்றவர். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஈழத்தில் நிலைபெற்று நின்ற தமிழ் மொழியின் உரிமை பறிக்கப்பட்ட போது பொங்கி எழுந்தார். தந்தை செல்வாவின் தலைமையில் இயங்கிவந்த சமஸ்டிக் கட்சியின் பெயரைத் 'தமிழரசுக் கட்சி" என மாற்றி வைக்கப் பெரும்பாடுபட்டு வெற்றிகண்டார். தமிழ் அரசியற்; கட்சிகளுடன் இணைந்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டார். அரசியல் மேடைகளை இளமுருகனாரின் சங்கநாதம் அழகு செய்தது. இயல்பான நகைச்சுவையோடு கூடிய அவரது அரசியற் பேச்சுக்களைக் கேட்கப் பொதுமக்கள் பல்லாயிரமாகத் திரண்டு வந்தனர். தமிழார்வத்தைக் தட்டி எழுப்பி உரிமை வேட்கையை ஊட்டவல்ல பல எழுச்சி இலக்கியங்களைப் படைத்தார்;. இவர் யாத்த திருமலை யாத்திரை அறப்போர்க்கு அறைகூவல் இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி குயிற்பத்து முதலியன மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டன. அமரர் பண்டாரநாயக்கா முதலமைச்சராய் இருந்த போது தமிழின் அருமை பெருமைகளை அறிவுறுத்தி உரிமை கோர முற்பட்டார். அதனாலே தமிழின் தொன்மை இனிமை தெய்வத்தன்மை இலக்கண இலக்கிய வளம் தமிழ்ப் பெருங்குடிகளின் தொன்மை என்போன்றவற்றை விளக்கிச் செந்தமிழ்ச்செல்வம் என்னும் உயரிய நூலை யாத்து அதன் பொருளை ஆங்கிலத்திலே சுருக்கித் தந்து அனுப்பி வைத்தார். செந்தமிழ்ச்செல்வம் இன்று சீரிய இலக்கியமாகத் திகழ்கின்றது.பரிசிலும் வரிசையும் பாங்குடன் பெறுதல்
ஓய்வு பெறுவதற்கு முன் தான் கடமை புரிந்த உடுவில் மகளிர் கல்லூரியில் எக்காலத்தும் கண்டிராதவாறு தமிழ் உணர்வினை ஏற்படுத்திய ஆசிரியர் தமயந்தி திருமணம், அரிச்சந்திரன், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நாடகங்களை எழுதி மாணவிகளைக் கொண்டு நடிப்பித்தார். இந்நாடகங்கள் கல்லூரிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன. புகழையும் பொருளையும் விரும்பாது ஓய்வொழிவின்றித் தமிழப் பணி புரிந்த புலவர்மணி அறிவிலிகளைச் சாடித் தமிழ் மரபு பேணி நின்றார். அவர் விரும்பாத போதும் பரிசில்களும் வரிசைகளும் அவரை நாடி வந்தன. அவற்றை விபரிப்பது மிகைப்படக் கூறலாய் அமையுமேனும் 1936 இல் பயிற்சிக் கலாசாலை மாணவனாய் இருந்த காலத்திலும் கயரோகச் சிந்து பாடிய காலத்திலும் கிடைத்த தங்கப் பதக்கங்களைப் பரிசில்களாகப் பெற்றமையைக் கூறாமல் இருக்க முடியவில்லை.கவிசிந்தாமணி பட்டம்
இவரின் தமிழ்ப்பணிக்காகப் பல சபைகள் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கியுள்ளன. அன்றியும் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் புலவர்மணி வரிசை தந்து போற்றினார். ஆதீனங்கள் பட்டங்கள் தந்து கௌரவித்தன. காஞ்சிபுரம் மெய்கணடார்; ஆதீன மகா சந்நிதானமாகிய சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் கவிசிந்தாமணி என்னும் வரிசையை நல்கிக் களிப்புற்றார்.புலவர்மணியின் படைப்புகள்
ஈழத்துச்சிதம்பர புராணம், செந்தமிழ்ச்செல்வம், பூரணன் கதை, இலக்கணச் சூறாவளி, தொல்காப்பிய முதநூற்ச் சூத்திர விருத்தி, செந்தமிழ்வழக்கு, அரங்கேற்று வைபவம், வேனில் விழா, கப்பற்பாட்டு, கவிதைவியல், சொற்கலை, கயரோகச்சிந்து, சுருக்கெழுத்துச் சூத்திரம் முதலியன இவரின் சிறந்த படைப்புக்களாகும். குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருணராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, ஜங்குறுநூறு என்பனவற்றக்கும் இவர் விளக்கவுரை எழுதியுள்ளார். தமயந்தி திருமணம், கமலேசன், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நாடக நூல்களையும் புலவர்மணி யாத்துள்ளார். இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி, அறப்போருக்கு அறைகூவல், திருமலை யாத்திரை என்பன இவரியற்றிய அரசியற்பாடல்களாகும்.இறுதிக்காலம்
அஞ்சா நெஞ்சுடனும் உடலுறுதியுடனும் தமது இளமைக் காலத்தைக் கழித்த புலவர்மணி இறுதிக் காலத்தில் நோயினால் உடல்நிலை தளர்ந்தாலும் மனவுறுதியுடன் தமது கடமைகளைச் செய்து வந்தார். இருந்தும் கடைசி நேரத்தில் நெஞ்சில் உண்டாகிய முட்டு இவரை இறைவன் திருவடி நீழலில் இலகுவாகச் சேர்த்து விட்டது. ஏறத்தாழ 45 ஆண்டுகளாகத் தமிழையும், சைவத்தையும் தமது முச்சாகக் கொண்டு பல திறப்பட்ட நூல்களை ஆக்கியும், கட்டுரைகளை எழுதியும், சொற்பொழிவுகளை நிகழ்த்தியும் தமிழன்னைக்குப் பேரொளி கொடுத்துக் கொண்டிருந்த அணையா விளக்கு இராட்சத ஆண்டு மார்கழித் திங்கள் முதலாந்தேதி (17.12.75) இரவு ஒரு மணியளவில் அவிந்துவிட்டது. எனினும் அவர் தம் நன் மாணாக்கர்கள் அத்தனை பேரும் அவரை அடியொற்றித் தமிழ்த்தொண்டு செய்வராயின் அச்சுடர் அவிந்திலது என்றும், அஃது ஒன்று பலவாய்க் கிழைத்துப் பேரொளி வீசகின்ற தென்றும் துணிந்து கூறலாம்.புலவர்மணி அவர்கள் இயற்றிய ஈழத்துச் சிதம்பர புராணம் பற்றி அறிஞர்களின் கருத்துகள்
25ஆவது தருமை ஆதீன முதல்வர் சிறீ-ல-சிறீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்:
“ பாட்டுகள் பத்திநலம் தோய்ந்த பழுத்த புலமையைக் காட்டி நிற்கின்றன; இதற்குத் திட்ப நுட்பம் செறிந்த உரையினைப் புலவர்மணி அவர்களின் துணைவியார் பண்டிதைமணி பரமேசுவரியார் அரிதின் எழுதியுள்ளார்.” "புலவர்மணி திரு சோ. இளமுருகனார் அவர்கள் தம்முடைய புலமையினால் திண்ணபுரத்துச் சுந்தரேசர் திருவடிகளிற் பத்தியுடன் சூட்டியுள்ள இத் தலபுராணம் தமிழிலக்கியங்களிற் புதிய தெய்வத் தமிழ்ப் பணியாக விளங்கிச் சிறப்பதாக."நல்லைத் திருஞாசம்பந்தர் ஆதீன முதல்வர் திருப்பெருந்திரு சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள்:
"புலவர்மணி இளமுருகனாரின் உள்ளக் கமலத்திலே ஊற்றெடுத்துச் சிவானந்தத் தேன்ததும்பும் அருவியாக வந்ததே இத் தலபுராணம். பாட்டில் அமையவேண்டிய சிறப்புக்கள் எல்லாம் இப் புராணத்திலே அமைந்து திகழ்வதைக் கண்ட இன்புற்றோம். இழுமென்ற இன்னோசையும், விழுமிய நடையழகும், இடத்திற்கேற்ற சந்த அமைதியும், கற்பனை யழகும் பொலிந்து கம்பர் பெருமான் கூறிய "செஞ்சொற் கவியின்பம்" என்பதற்கு இலக்கியமாய் இப்புராணம் மிளிர்கின்றது."கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் - விரிவுரையாளர், இலங்கைப் பல்கலக்கழகம்:
"தமிழ் மரபு என்னும் வரம்புக்குட்பட்டு நின்று, தமிழுக்கு எள்ளளவேனும் மாசு ஏற்படாவண்ணம் தூய தமிழிற் கவிதை பாடுவதைக் குறிக்கோளாகக் கொண்டவர். இவர் யாத்துள்ள கவிதைகளிலே தூய தமிழ்மணம் வீசுகின்றது. தெய்வீக மணம் கமழ்கின்றது....."