நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

NAVAALIYUUR SOMASUNTHARAPULAVAR


"அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடு

மாறு முகப் பதுமம்"


என்று தனது பதினெட்டு வயதில் முருகனைப் பாடியவர் சோமசுந்தரப் புலவர்.

ஈழத் திருநாட்டின் செய்யுளின் வரலாற்றுப் பாதையைத் திரும்பிப் பார்ப்போமேயானால் முக்கிய இடத்தை பெற்றவர்கள் ஒரு சிலரே என்பதை நாம் அறியலாம். அவர்களில் இருபதாம் நூற்றாண்டில் பெருமையுடன் முன்னோடியாகத் திகழ்ந்தவர் எங்கள் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் எனலாம். அது மட்டுமல்ல ஈழத்தில் திளைத்த செய்யுள் இலக்கிய வரலாற்றில் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகவும் அமைந்தவர் சோமசுந்தரப் புலவர் என்றால் மிகை இல்லை. இருபதாம் நூற்றாண்டுக்கு முந்திய மூன்று நூற்றாண்டுகளில் சமயமே இலக்கியத்தின் கருப்பொருளாகவும் தொனிப்பொருளாகவும் அமைந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் ஈழத்துச் செய்யுள் இலக்கியம், தேசியம், சமுகம் என்பனவற்றை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு புதிய யாப்புகளைத் தோற்றுவித்தன என்பதும் வரலாறு.

சமகாலப் புலவர்களை விஞ்சியவர்

இருபதாம் நூற்றாண்டில் பல புலவர்கள் ஈழத்தில் வாழ்ந்தனர். அவர்களில் சுன்னாகத்தைச் சேர்ந்த குமாரசாமிப் புலவர், வறுத்தலை விளானைச் சேர்ந்த மயில்வாகனப் புலவர், நல்ல தம்பிப் புலவர் ஆகியோருடன் ஒப்பிடும் பொழுது சோமசுந்தரப் புலவரே இருபதாம் நூற்றாண்டு காலத்தில் சமயத்தை பொருளாகக் கொண்ட அதிகமான பிரபந்த இலக்கியங்களைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலவர் சமைத்த பிரபந்தங்கள்

தனது காலத்தில் வாழ்ந்த புலவர்களைப் போன்று 'பதிகம்', 'ஊஞ்சல்' என்றும் இரண்டு பிரபந்தங்களியும் பாடிய சோமசுந்தரப் புலவர் 'கலம்பகம்', 'நான்மணி மாலை', 'அட்டகம்', 'அந்தாதி', 'சிலேடை வெண்பா', 'திருப்பள்ளியெழுச்சி' ஆகிய பிரபந்தங்களையும் பாடிய பெருமைகுமுரியவராவார்.

தலங்களை மையமாக வைத்துப் பாடிய பிரப்ந்தங்களில் 'அட்டகிமுக் கலம்பகம்', 'தில்லை அந்தாதி', 'கதிரைச் சிலேடை வெண்பா' போன்ற இலக்கியங்களின் சிறப்பு என்றும் ஓங்கி நிற்கக் கூடியவை எனலாம்.

கதிர்காமம் பற்றிய பாடல்கள்

இவர் பாடிய கதிரைச் சிலேடை வெண்பாவில் ஒவ்வொரு வெண்பாவின் முதல் இரண்டடிகளும் கதிர்காமத்தின் சிறப்பினைச் சிலேடை நயத்தினை கூறுகின்றன. கதிர்காமத்தில் காணக்கூடிய அலங்காரக் காட்சிகள் யாவற்றையும் எளிய நடையிலும் சிலேடைகள் மூலமும் விளக்கியுள்ளார்.

"நிம்டதுறை பேடகமு நில்லாவினென் விளங்குங்

பமா வெறுங் கதிரையே"

என்னும் பாடலால் முருகக் கடவுள் உறையும் பேடகம் யானை மேல் ஏற்றி வீதி வலம் வருதலையும் அங்கே தினை மாவிளக்குகளின் தன்மையையும் வர்ணித்துள்ளமை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

நாமகள் துணை கொண்டு பாடியவர்

நாமகள் துணை கொண்டு பாடல்கள் இயற்றிய சோமசுந்தரப் புலவர் நாமகளின் சிறப்பினை எடுத்து ஓதிய பாடல்களை "நாமகள் புகழ் மாலை"யில் காணலாம். 'கம்மனை கும்மி', 'பதி பசு பாச விளக்கச் செய்யுள்' நூல்களும் சைவ சித்தாந்தங்களை விளக்குவதாக ஆக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் எழுதிய கந்த புராணக் கதைகளும் சைவ சமயத்தின் உள் கருத்துக்களை தெளிவு படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவர் ஆக்கிய 'உயிரிளங்குமரன்' நாடகம் மூலம் சமூகத்தில் தேங்கிக் கிடக்கும் சமூக குறைபாடுகளை எடுத்து இயம்பியுள்ளமை புலவரின் துணிச்சலை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஈழத்து மக்களின் மொழி பேணப்படல் வேண்டும் என்று முழக்கம் செய்தவர்

நமது நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேசிய விழிப்புணர்வை உருவாக்க இவர் பாடல்கள் ஏதுவாக்கப்பட்டமை வியக்கத்தக்கதொன்றாகும். 'உயிரிளங்குமரன்' நாடகத்தில் கமத்தொழில், நெசவுத் தொழில் என்பனவற்றை மக்கள் அலட்சியம் செய்தமையை எடுத்துக்காட்டியும் அத்தொழில்களின் சிறப்பினையும் சுட்டிக் காட்டியதனால் மக்களிடையே மறுமலர்ச்சி ஏற்பட்டது.

"குருமடம் புகுந்தவுருவி லாக்காமன்

கல்விச்சாலையை பெற்றமிழ்ப் பித்துத்

தாய் மொழிமடவார் வாய்மொழியாக்கிச்

சமயமும் லீலாசமயமாய்ச் செய்து

நிகலில் தீக்கை நிருவாணமாக்கிச்

சந்நிதானங்கள் தந்நதானம் விடக்

குன்றிலுங்க குழியிலும் விழுத்தி

வருகின்றான்"

என்று வரும் 'உயிரிளங்குமரன்' நாடகத்தில் வரும் பாடல் சமய சம்மந்த ஆக்கங்களின் சமூக நோக்கினை புலப்படுத்திய பெருமை சோமசுந்தரப் புலவர் அவர்களையே சாரும்.

புலவர் இயற்றிய குழந்தைப்பாடல்கள் பல. இப்பாடல்கள் மூலம் ஈழத்துச் செய்யுள் இலக்கிய வரலாற்றில் தாம் பெற்ற திறமையை வலுப்படுத்தியுள்ளார்.

சிறந்த குழந்தைப் பாடல்கள் இயற்றுவதில் தமிழகத்தில் முன்னோடியாக விளங்கிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்று ஈழத்திலும் சோமசுந்தரப்புலவர் முதன்மை பெற்றுள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக!

காரையூர் நா பொன்னையா

மூலம்: வீரகேசரி


நவாலியூர் சோமசுந்தரப்புலவர் இயற்றிய பாடல்கள்:

புலவர்மணி சோ. இளமுருகனார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் - கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள்

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top