ஓம் சிவமயம்
சிவசிவ என்னச் சிவகதியாமே
நல்லூரான் திருவடி
நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி - கிளியே!
இரவுபகல் காணேனெடி.
ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி - கிளியே!
நல்லூரான் தஞ்சமெடி.
தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமெடி - கிளியே!
கவலையெல்லாம் போகுமெடி.
எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டலென்
கர்த்தன் திருவடிகள் - கிளியே!
காவல் அறிந்திடெடி.
பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி.
சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னானெடி - கிளியே!
பொல்லாங்கு தீருமெடி.