கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை
 

11. பஞ்சாக்ஷரவியல்
 

1. சைவசமயிகள் நியமமாகச் செபியக்கற்பாலதாகிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).

2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை எப்படிப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்?

தத்தம் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்குந் தீ?க்ஷக்கும் ஏற்பக் குருமுகமாகவே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

4. மந்திரோபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?

குருவை வழிபட்டு, அவருக்கு வருடந்தோறும் இயன்ற தக்ஷணை கொடுத்துக்கொண்டே செபித்தல் வேண்டும்.

5. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே நியமமாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டுருவாயினும், ஐம்பதுருவாயினும், இருபத்தைந்துருவாயினும், பத்துருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

6. செபத்துக்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். (விரலிறை=கட்டைவிரல்)

7. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

உருத்திராக்ஷமணி கொண்டு செய்வது உத்தமம்.

8. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியுங் கொள்ளத் தகும். இல்வாழ்வான் நூற்றெட்டுமணி ஐம்பத்து நான்கு மணிகளாலுஞ் சபமாலை செய்து கொள்ளலாம்.

9. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டுமுக மணியும், பதின்மூன்று முக மணியுஞ் செபமாலைக்கு ஆகாவாம்; அன்றியும், எல்லாமணியும் ஒரே விதமாகிய முகங்களையுடையனவாகவே கொள்ளல் வேண்டும்; பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடைத்து.

10. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழிழையினா லாக்கிய கயிற்றினாலே கோத்தல் வேண்டும்.

11. செபமாலையை எப்படிச் செய்தல் வேண்டும்?

முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு என்றும் பெயர்.

12. செபமாவது யாது?

தியானிக்கப்படும் பொருளை எதிர்முக மாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

13. மந்திரம் என்பதற்குப் பொருள் யாது?

நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்னும் பெயர், நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்குஞ் சிவசத்திக்குமே செல்லும்; ஆயினும், வாச்சியத்துக்கும் வாசகத்துக்கும் பேதமில்லாமை பற்றி, உபசாரத்தால் வாசகத்துக்குஞ் செல்லும்; எனவே, மந்திரம் வாச்சிய மந்திரம், வாசகமந்திரம் என இரு திறப்படும் என்ற படியாயிற்று. [மந்=நினைப்பவன்; திர=காப்பது]

14. மந்திரசெபம் எத்தனை வகைப்படும்?

மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.

15. மானசமாவது யாது?

நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருத்தி மனசினாலே செபித்தலாம்.

16. உபாஞ்சுவாவது யாது?

தன் செவிக்கு மாத்திரங் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்றும் பெயர்.

17. வாசகமாவது யாது?

அருகிலிருக்கும் பிறர் செவிக்குங் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

18. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசங் கோடி மடங்கு பலமுந் தரும்.

19. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

வடக்குமுக மாகவேனும் கிழக்குமுக மாகவேனும், மரப்பலகை, வஸ்திரம், இரத்தின கம்பளம், மான்றோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றிலே, முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத் தொடையினுள்ளே வலப் புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்த்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

20. எப்படி இருந்து செபிக்க லாகாது?

சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கெளபீனந் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரந் தரியாதும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றையும், புலையர் முதலாயினோரையும் பார்த்துக் கொண்டுஞ் செபிக்கலாகாது. செபஞ் செய்யும் போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்பல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்.

21. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

பிறர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகக் செபிக்கிற் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனசிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயக மணிக்கு அடுத்த முகமேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும் முத்தியின் பொருட்டு மேனோக்கித் தள்ளியுஞ் செபித்து, பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும் போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படிற் பாவமுண்டாம்.

22. இன்ன இன்ன பொழுது செபித்தவர் போக மோக்ஷங்களுள் இன்னது இன்னது பெறுவர் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராணவாயுவானது இடப்பக்க நாடியாகிய இடையிலே நடக்கும் போது செபித்தவர் போகத்தையும், வலப்பக்க நாடியாகிய பிங்கலையிலே நடக்கும் போது செபித்தவர் மோக்ஷத்தையும், நடுநிற்கு நாடியாகிய கழுமுனையிலே நடக்கும் போது செபித்தவர் போகம் மோக்ஷம் என்னும் இரண்டையும் பெறுவர்.

23. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபம் எவ்வெக் காலங்களிலே விசேஷமாகச் செய்யத் தக்கது?

அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், பன்னிரண்டு மாதப்பிறப்பு, கிரகணம், சிவராத்திரி, அர்த்தோதயம், மகோதயம் முதலாகிய புண்ணிய காலங்களிலே புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து, தியானஞ் செபம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும். சித்திரை, ஐப்பசி என்னும் இவ்விரண்டு மாதப் பிறப்பும் விஷ? எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறத்தற்கு முன்னெட்டு நாழிகையும் பின்னெட்டு நாழிகையும் புண்ணிய காலம். ஆடி மாதப் பிறப்பு, தக்ஷ?ணாயனம் எனப்படும்.

இதிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு உத்தராயணம் எனப்படும்; இதிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி என்னும் இந்நான்கு மாதப் பிறப்பும் விட்டுணுபதி எனப்படும்; இவைகளிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். ஆனி, புரட்டாதி, மார்கழி, பங்குனி என்னும் இந்நான்கு மாதப்பிறப்பும் சடசீதிமுகம் எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். சூரிய கிரகணத்திலே பரிசகாலம் புண்ணிய காலம்; சந்திர கிரகணத்திலே விமோசன காலம் புண்ணிய காலம். அர்த்தோதயமாவது தை மாதத்திலே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும் விதிபாத யோகமுங் கூடிய காலம். மகோதயமாவது தை மாதத்திலே திங்கட்கிழமையும் அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும், விதிபாத யோகமுங் கூடிய காலம்.

24. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்னை?

ஸ்ரீ பஞ்டாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நிங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித் தருளுவர்.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்

Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top