கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை
 

9. உருத்திராக்ஷவியல்
 

1. உருத்திராக்ஷமாவது யாது?

தேவர்கள் திரிபுரத்தசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பஞ் செய்து கொண்ட பொழுது, திருக்கைலாசபதியுடைய மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரிற்றோன்றிய மணியாம்.

2. உருத்திராக்ஷந் தரித்தற்கு யோக்கியர் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசார முடையவராய் உள்ளவர்.

3. உருத்திராக்ஷந் தரித்துக்கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

4. எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?

சந்தியாவந்தம், சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணங் கேட்டல், சிராத்தம் முதலியவை செய்யுங் காலங்களில் ஆவசியகமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்; தரித்துக்கொள்ளாது இவை செய்தவருக்குப் பலம் அற்பம்.

5. ஸ்நான காலத்தில் உருத்திராக்ஷதாரணங் கூடாதா?

கூடும்; ஸ்நானஞ் செய்யும் பொழுது உருத்திராக்ஷ மணியிற் பட்டு வடியுஞ் சலம் கங்கா சலத்துக்குச் சமமாகும்.

6. உருத்திராக்ஷத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

ஒருமுக மணி முதற் பதினாறுமுக மணி வரையும் உண்டு.

7. உருத்திராக்ஷ மணியை எப்படிக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்?

பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும் முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்.

8. உருத்திராக்ஷந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், பூணூல் என்பவைகளாம்.

9. இன்ன இன்ன தானங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; குடுமியிலும் பூணூலிலும் ஒவ்வொரு மணியும், தலையிலே இருபத்திரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். குடுமியும் பூணூலும் ஒழித்த மற்றைத் தானங்களிலே அவ்வத்தானங் கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகும்.

10. இந்தத் தானஙக ளெல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்ஷந் தரித்துக்கொள்ளலாமா?

குடுமியிலும், காதுகளிலும், பூணுலிலும் எப்போதுந் தரித்துக்கொள்ளலாம்; மற்றைத் தானங்களிலோ வெனின், சயனத்திலும் மலசல மோசனத்திலும், நோயினும், சனனாசெளச மரணாசெளசங்களிலுந் தரித்துக்கொள்ளலாகாது..

11. உருத்திராக்ஷதாரணம் எதற்கு அறிகுறி?

சிவபெருமானுடைய திருக்கண்ணிற் றோன்றுந் திருவருட்பேற்றிற்கு அறிகுறி.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்

Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top