சிவமயம்

யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்

சைவநன்மணி நா. செல்லப்பா


2: நாம் அறியோம்

சத்தியப் புலப்பாடு அல்லது சிவதரிசனம் பெறுவதற்கு ஆத்ம விசாரனை அவசியம் என்பது யோக சுவாமிகளின் துணிபாகும். அதற்கு அனுசரனையாக "நான் யார்?" என்பதை விழிப்புணர்வுடன் நடுவு நிலையிலிருந்து விசாரணை செய்து நன்கு தெளிந்து கொள்ளுமாறு உபதேசித்துள்ளார். இவ்வுபதேசம் திருமூல நாயனார் மொழிந்த பின்வரும் திருமந்திரத்துக்கு அமைய உள்ளதைப் பாருங்கள்:--

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே

இதில் வரும் "தன்னை அறியும் அறிவு" யாதென்பதைத் தெளிந்து கொண்டே ஆத்ம விசாரனை செய்தல் முக்கியமாகும். தன்னை அறியும் அறிவு மனவிருத்தியினால் ஆக்கப்படும் சுட்டறிவல்ல. அது சுட்டறிவைக் கடந்து, அறிவுக்குத் தெளிவறிவாக உள்ள அருள் உணர்வாகும். சாதகர்கள் சாதாரணமாகச் சுட்டறிவுகொண்டு நற்சிந்தனை நூலைப் பயில்கின்றனர். சுட்டறிவு மூலம் "நான்" என்பது ஆன்மா என முடிவு செய்கின்றனர். அதன் பின்பு , நான் யார்? என்பதை விசாரணை செய்ய முற்படுகின்றனர். முற்கூட்டியே அறிந்துகொண்டு எதையும் விசாரனை செய்தல் உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு உதவுமா?

ஆத்ம விசாரணை மிகவும் சிக்கலாகவும் சங்கடமாகவும் உள்ளது. அதில் ஈடுபடு முன்பு ஆத்மாவை அறியும் அறிவு சுட்டறிவு அல்ல என்பதையும் , சுட்டறிவினால் அறியப்படும் ஆத்மாவானது ஒரு பொய்யான கற்பனைத் தோற்றம் உடைய தென்பதையும் வழுவற விளங்கிக் கொள்ளுதல் அவசியம். சுட்டறிவால் ஆத்மாவை "நாம் அறியோம்" என்பது எமது மெய்யுணர்தல் ஆகும் வேண்டும். சுட்டறிவினால் சிருஷ்டிக்கப்படும் ஆன்மா ஆகினும் சரி, கடவுளேயாயினும் சரி, ஒரு பொய்க் கற்பனைத் தோற்றமேயாகும். சுட்டறிவு நிலையை முத்துரிய நிலை எனக் கூறுதல் சைவ சித்தாந்த மரபாகும். முத்திரியம் என்பது ஆத்மா உடலுடன் கூடி நின்று பெறும் விழிப்பு, கனவு, உறக்கமாகிய மூன்று நிலைகளுமாகும். இத்துரிய நிலையில் நாம் ஒருபோதும் பூரணமாக அறிய மாட்டோம். அரைகுறையாக அறியலாம். அரைகுறையானது பூரணமாவதில்லை. ஆத்ம விசாரணை செய்வதற்கு உரிய தகுந்த நிலை துரியாதீத நிலையாகும். துரியாதீத நிலையிற்றான் ஆத்மாவிடம் 'மெய்யுணர்தல்' மலரும். மெய்யுணர்தல் நிலையில் விசாரனை செய்தாற்றான் சத்திய தரிசனம் கிடைக்கும். ஆத்மாவைப் பற்றிய பூரணமான ஞானம் பெறலாம்.

சுட்டறிவானது இருமை வகையுடையது. அதன் செயற் பாட்டினால் தான் நமக்கு இருவினை உண்டாகிறது. இருமை வகை உணர்ச்சி கெட்டால்தான் மெய்யுணர்தல் உதயமாகும். ஆத்ம விசாரனை செய்து "நான் யார்?" என்பதை முழுமையாகத் தெளியவேண்டும் எனின் நாம் செய்யவேண்டிய சிறந்த சாதனை இன்னதென விளக்கும் திருமந்திரப் பாடல் இதோ:--

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முந்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்

பின்னை வினையினைப் பிடித்துப் பிசைவர்

சென்னியில் வைத்த சிவனரு ளாலே!

சிவன் அருளாலேதான் ஆத்மா தன்னை அறியவும் இருவினை நீக்கம் செய்யவும் இயலும். இருவினை நீக்கத்துக்கு வேண்டிய சாதனை இருவினை ஒப்பாகும். இருவினை ஒப்பு என்பது மனவிருத்தியினால் ஏற்படும் இருமைவகை விகாரங்களைச் சரிசமமாகத் தெளிதலாகும். அங்ஙனம் முழுமையாகத் தெளியும்போது மனம் மௌனம் அடைகிறது. ஆம்! அற்புதம் நிகழ்கிறது. அது திருவருளை ஏற்கும் பாத்திரமாக மாறுகிறது. அதன் பேறாக மெய்யுணர்தல் மலர்கிறது. அந்த அருளொளி மலர்ச்சியில் உண்மையான ஆத்ம தரிசன மெய்ப் புலப்பாடு ஏற்படுகிறது.

ஆத்ம ஞானமாகிய மெய்யுணர்தல் பெறுவதற்கு முன்னை வினையின் முடிச்சு அவிழ்த்தல் மிகவும் முக்கியமாகும். முன்னை வினை என்பது இறந்த கால உளவியல் இருவினைச் செயற்பாட்டின் பேறாகும். இருவினையாவது நன்மையும் தீமையும் அவற்றால் உருவாகும் அறிவும் அறியாமையும் ஆகும். இருவினை நீங்குவதற்கு நாம் செய்யவேண்டிய சாதனை அதன் முடிச்சை அவிழ்க்க வேண்டியதாகும். அதை எப்படி அவிழ்த்தல் வேண்டும்? என்பதைப் பற்றிய சாதனை விபரங்களைத் திருமூலரோ அல்லது யோகசுவாமிகளோ நேரடியாக எல்லா விபரங்களுடன் கொடுக்கவில்லை. எனினும் அந்த விபரங்களை நாம் அவர்கள் ஆற்றிய உபதேசங்களிலிருந்து அவதான விழிப்புணர்வுடன் மன நடுவு நிலையில் நின்று கவனித்துக் கிரகிக்க முடிகிறது. அதற்கு உறுதுணையாக உள்ளவை இருவினை ஒப்பும், சிவோகம் பாவனையும் பஞ்சாட்சர செபத் தியானமும் ஆகும். அவற்றின் பேறாகவே எம்மிடம் கிரகித்து மெய்ப்பொருள் உணரும் ஆற்றல் சிறப்புகிறது. கல்வி கேள்வி அறிவுடைமையால் அல்ல என்பதை நேயர்கள் விளங்கிக் கொள்ளவும்.

முன்னை வினை என்பது இறந்த காலத்தில் ஆற்றப்பட்ட இருவினையாகும். அதன் முடிச்சு அவிழ்ப்பதென்பது உளவியற் காலத்தைப்பற்றிய உண்மை விளக்கம் பெறுதலாகும். உளவியற் காலம் என்பது மனதில் ஏற்கனவே பதித்து வைக்கப்பட்ட சிந்தனைகளால் ஆக்கப்படுவதாகும். அது உண்மையான காலம் அல்ல. மூளையில் பதியப்பட்ட சிந்தனை யாவும் இறந்த காலத்தனவாகும். இறந்த காலம் இறந்ததுதான். அத்ற்குப் புத்தியிர் கொடுத்து எழுப்பி நிகழ்காலம் ஆக்க இயலாது. எமது மனம் கற்பனை மூலம், செய்ய முடியாததைப் போலியாகச் செய்கிறது. இறந்த காலச் சிந்தனைகளை நிகழ்காலத்தன வாக்கி நிலவ விடுகிறது. இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் முடிச்சுப்போடுகிறது. அதனால் இருவினை ஆக்கப்படுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டுமானால் நாம் துரியாதீத நிலை அடைதல் வேண்டும். துரியாதீதம் என்பது உளவியற் காலத்தைக் கடந்ததாகும். அது இறந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் இடையே ஊசலாடும் மனோ நிலையல்ல.

அடுத்ததாகப் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவது எப்படி? என்பதை ஆய்ந்து தெளிவோம். இறந்த காலச் சிந்தனைகளைப் புதுப்பித்து விருத்தி அடையும் மனம் நிகழ்காலத்துக்கு முகங் கொடுத்துப் பிரச்சினைகளை நடுவு நிலையில் நின்று ஆய்ந்து தீர்ப்பது கிடையாது. ஆப்படி ஆய்ந்தாலும் அது பக்கச் சார்புடைய தாகவே இருக்கும். உண்மை விளக்கம் முழுமையாகப் பெறுதல் மனதின் கால முடிபான மரணமாகும். மன மரணத்தை மெய்ஞானிகள் மனோலயம் என்பார்கள். மனோலயம் பெற மனம் விரும்புவதில்லை. நிகழ்காலத்திலே தான் அதற்கு மரண ஆபத்து உள்ளது. எனவே அது நிகழ்காலஹ்த்தை விட்டு எதிர்காலம் ஒன்றைப் பொய்யாக சிருஷ்டிக்கிறது. அதன்பின்பு உளவியல் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே ஊசல் ஆடுகிறது. இந்த ஊசல் ஆட்டம் அதற்குச் சிற்றின்பமாகும்.

மனோலயம் பெறாமல் எம்மால் ஆத்மஞானமோ அல்லது சிவஞானமோ அடைதல் அரிதாகும். மனோலயம் பெறுதல் வேண்டுமாயின் முன்னை வினையின் முடிச்சு அவிழ்த்தலும், பின்னை வினையைப் பிடித்துப் பிசைவதும்தான் நாம் செய்யவேண்டிய சாதனை என்பது திருமூலர் காட்டும் நெறியாகும். மனோலயம் பெறாது ஆத்மவிசாரனை செய்தல் பிரயோசனமற்ற செயலென்பது யோகசுவாமிகளுடைய மறைஞான விளக்கமாகும். ஊஞ்சல் ஆடுவோர் அதன் கயிறு அறுந்து வீழ்ந்துவிடக் கூடும் எனப் பயப்படுவதுண்டு. அதேபோல மன ஊசல் ஆடுவோர் மனக்கயிறு அறுந்து விழுந்துவிடுவோம் என அஞ்சுதல் இயல்பாகும். கயிற்று ஊஞ்சல் அறுந்து விழுந்தால் ஒருவரைப் பூமியானது தாரகமாக நின்று ஏற்றுக்கொள்கிறது, அதேப்போல மன ஊஞ்சல் அறுந்து வீழ்ந்தால் எம்மைத் திருவருளே தாரகமாக நின்று ஏற்றுக்கொள்கிறது. எனவே மன ஊஞ்சல் அறுந்தால் எமக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் வேண்டியதில்லை. ஊஞ்சல் ஆடும் மனத்தால் ஆத்மாவை "நாம் அறியோம்" எனத் தெளிந்து மனோலயம் பெறுவதற்குரிய சாதனை செய்து வெற்றி பெறுவோம். அப்பொழுது தாரகமாகிய திருவருளே எமைத் தாங்கி நின்று ஆத்மஞானம் கொடுக்கும்.

இந்த வகையில் செல்லப்பாச் சுவாமிகள் யோகசுவாமிகளுக்கு அற்புதமாகப் படிப்பித்து அவரைச் சுயமாகவே சாதனை செய்து ஆத்ம ஞானம் பெறும்படி நெறிப்படுத்தியதாக அறிகிறோம். நல்லூர்க் கந்த சுவாமிகோயிற் தேரடியில் யோகசுவாமிகள் செல்லப்பாச் சுவாமிகளிடம் நயன ஸ்பரிச தீக்கையும், சன்மார்க்க உபதேசமும் பெற்றார். எனினும் பூரணமான ஆத்மஞானம் பெறமுடியவில்லை. தனது குருவிடம் இருந்து பூரணமான ஆத்மஞானம் பெறலாம் என்ற நம்பிக்கையில் அவர் குருவைப் பின் தொடரலாயினர். பின் தொடர்வதில் பிரயோசனமில்லை, உபதேசம் செய்யப்பட்ட மகாவாக்கியங்களின் மறைபொருளைச் சுயமாகவே கண்டு பிடித்து அதற்குரிய சாதனை செய்து தாரகமாகிய திருவருள் மலரப்பெற்று ஆதமஞானத்தை முழுமையாகப் பெறும் வண்ணம் செல்லப்பச் சுவாமிகள் சொல்லிப்பார்த்தார். அதைப் பொருட்படுத்தாது மீண்டும் குருவைப் பின்பற்றுவதில் அவர் ஈடுபட்டார். வேறு வழியின்றி செல்லப்பாச் சுவாமிகள் அவரை விரட்டித் துரத்திவிட்டார். அதன் பிற்பாடுதான் யோகசுவாமிகள் கதிர்காமத்துக்கு பாதயாத்திரையைச் செய்து செபதியானத்துடன் ஆரம்பித்தார். இரண்டு மாதகாலம் இங்ஙனம் செலவிட்டு முடிவில் கதிர்காமம் அடைந்தார். அங்கு தனிமையில் தனித்திருந்து இருவினை ஒப்பு சிவோகம்பாவனை, பஞ்சாட்சர செபதியானம் முதலிய சாதனைகள் ஒருமாதகாலமாகப் புரிந்து பூரணமான ஆத்மஞானம் சுயமாகவே பெற்றார்.

இவ்விடத்தில் நாம் சுட்டறிவுக்கும் தெளிவறிவாகிய மெய்யுணர்தலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். சுட்டறிவு இருமைவகை உடையதாகும். அதை நாம் பிறரிடமிருந்தும், நூல்கள் மூலமாகவும் சம்பாதித்து மூளையில் திணித்து வைக்கலாம். அதைவேண்டிய போது ஞாபகமாக மீட்டு எடுக்கலாம். இங்ஙனம் மீட்டு எடுக்கபப்டும் நினைவுகளால் ஆத்மாவை "நாம் அறியோம்" என்பதே மறைபொருளாகும். ஆத்மாவை எவ்விதத்திலாகினும் அறியமாட்டோம் என்பது அதன் பொருள் அல்ல. ஆத்மாவை யார் எனத் தெளிதற்கு மெய்யுணர்தலே வேண்டியதாகும். அது மன உணர்ச்சியும் அல்ல; மூளையில் சேமித்து வைக்கப்டும் அறிவுச் சம்பாத்தியமும் அல்ல. அதை ஒருபோதும் நினைவுத் திறனால் மீட்டு எடுத்தல் இயலாது. மனோலயம் எற்படும் போது அது ஆத்மஇதயத்தில் சுயமாகவே உள்ளிருந்து மலருவதாகும்.

திருவருள் உள்ளொளியின் உண்மை விளக்கத்தை எடுத்துக்காட்டுவதாக சிவலிங்கம் அமைந்துள்ளது. சிவபூசை செய்பவர்களுக்குத் திருமந்திரத்தில் "தெள்ளத் தெளிந்தார்குச் சீவன் சிவலிங்கமாகும்" என உபதேசிக்கப்பட்டுள்ளது. அதன் மறைபொருள் சீவனிடம் அருளொளி சிவலிங்க வடிவில் மறைந்துள்ளது என்பதாகும். சீவனைச் சிவலிங்கத்தின் பீடமாகவும், சிவனுடைய அருள் ஒளியைப் பீடத்தில் உள்ள ஆவுடையாராகவும் கொள்க. பீடத்துள்ள ஆவுடையார் சீவனில் எழும் அருளொளியாகவும் வர்ணிக்கப்படுள்ளது. இந்த அருள் ஒளியின் அடிதலையைப் பிரம்மா விஷ்ணுவாலும் கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் அதை "நாம் அறியோம்" எனவேக் கூறினர். ஆயினும் பிரம்மன் கண்டதாகப் பொய் சொல்லி அகப்பட்டுக் கொண்டு பின் நான் அறியேன் என்பதை ஒப்புக்கொண்டான். யோகசுவாமிகள் திருவடியைத் தரிசிப்பதனால் எவராலும் சிவன் அருளொளியைக் காணமுடியும் எனக் கற்பனை செய்தல் பேதைமையாகும்.. அவருடைய போதனைச் சாதனை செய்தல் மூலமே சிவனொளி பெருதல் இயலும்.

சிவனொளியும் தெளிவறிவும் ஒன்றேயாகும். அதைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் திருமந்திரம் ஒன்றைப் படித்துப் பாருங்கள்:

தெளிவறி யாதார் சிவனை அறியார்

தெளிவறி யாதார் சீவனும் ஆகார்

தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்

தெளிவறி யாதார் தீரார் பிறப்பே!

சுட்டறிவு விருத்தியினால் "நாம் அறியோம்" எனப்படும் ஆத்மாவையும் கடவுளையும் தெளிவறிவு மலர்ச்சியினால் உணர இயலும் என்பது புலப்படுகிறது. சுட்டறிவும் தெளிவறிவும் எம்மிடம் ஒரே சமயத்தில் விளங்கித் தோன்றமாட்டா. சுட்டறிவின் முடிபிலேதான் தெளிவறிவு மலரும். தெளிவறிவு மறைந்துள்ள போது சுட்டறிவு பொலியும். நற்சிந்தனைகளைச் சுட்டறிவு மூலம் பெற்று வளர்ப்பதனால் நாம் அவற்றைத் தெளிவறிவாக உயர்த்திவிட முடியாதென்பதை உணர்வோமாக!

இதைத் தொடர்ந்து இன்னொரு சைவ சித்தாந்த உண்மை விளக்கம் பெறுதல் சிறப்பாகும். அதாவது தெளிவறிவு மூலம் ஆன்ம தரிசனம் பெற்ற ஞானிகள் அதை இன்னதென மனவாசக விளக்கம் கொடுக்க மாட்டார் என்பதும் அங்ஙனம் விளக்கமளித்துப் பெருமைப்படுவர் ஆன்ம தரிசனம் பெற்றிலர் என்பதுமாகும். இதைச் சுருக்கமாகக் "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" எனக் கூறுவர்.

சாதரணமாக " நாம் ஆத்மாவை அறிந்துள்ளோம்" எனக் கூறும்போது நாம் அறிந்துள்ள ஆத்மாவானது மனத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட போலி ஆத்மாவாகும். மனதில் ஏற்படும் செருக்கு அல்லது அகங்காரம் ஆத்மாவைப் போலக் காட்சி அளிக்கிறது. உண்மையான ஆத்மாவை யார்? என்பதைக் கண்டறிய வேண்டுமாயின் முதலாவதாக நமது சித்தப் பிரமையினால் உருவாகும் போலியான ஆத்மாவைப் பொய்யானதென விசாரணை செய்து உணருதல் வேண்டும். போலியை உண்மை என நம்பி மயங்குதல் மருளாகும். மருள் நீங்குதல் தான் மாசறு காட்சியாகும். மாசறு காட்சி மூலமாகத்தான் நாம் ஆத்ம தரிசனமும் ஞானமும் பெறலாம். அதன்பொருட்டு 'நான் எனது' எனப்படும் அகங்காரத்தை வேரோடு களைதல் வேண்டும் இந்த அகங்காரத்துடன் ஆத்மாவை நாம் அறிவோம் எனபெருமைப் படுபவர்கள் உண்மையான ஆத்மாவை அறியும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். "நாம் அறியோம்" என்பவர்கள்தாம் நிசமாகவே அதை இன்னதெனச் சரிவர ஆய்ந்தறியும் வாய்ப்புப் பெறுகிறார்கள்.

ஆகவே ஆதமவிசாரணை செய்யும் சாதகர்கள் முதன்முதலாக "நான் எனது" எனும் செருக்கு அறும்வகையில் செபதியானம் செய்தல் வேண்டும். மெய்கண்டதேவர் அருளியபடி பொய்யானவற்றை பொய்யெனவே காணுதல் வேண்டும். அதாவது சரீரத்தையோ அல்லது இந்திரிய மனத்தையோ ஆத்மா என நம்பும் மருளை நீக்குதல் வேண்டும். மனத்தாற் சிருஷ்டிக்கப்படும் ஆத்மாவைத்தான் நாம் துரிய நிலையில் இருந்து அறிவோம். உண்மையான ஆத்மாவைத் துரியநிலையிலிருந்து ஒருபோதும் "நாம் அறியோம்" என்னும் தெளிவு ஏற்படுதல் அவசியமாகும். அதை விடுத்து நான் ஆத்மா, அதை நான் அறிவேன் ஒரு சாதகன் முடிபு எடுப்பானேல் அவன் உண்மையான ஆத்ம தரிசனம் பெருதல் அரிதாகும். துரியாதீத நிலையில் இருந்துதான் நிசமான ஆத்மதரிசனம் பெறுதல் இயலும். துரிய நிலையில் நாம் ஊனக் கண்கொண்டு பார்க்கிறோம். துரியாதீத நிலையிற்றான் எம்மால் மெய்ஞ்ஞானக் கண்கொண்டு பார்க்க இயலும். பதியையும் பசுவையும் ஊனக்கண் கொண்டு நாம் அறியோம் எனச் சிவஞானபோதம் தெளிவு படுத்துகிறது. மெய்ஞ்ஞானக் கண் பெருதல் வேண்டின் நாம் துரியாதீத நிலை அடைந்தே ஆகுதல் வேண்டும். அதை விடுத்து ஊனக்கண் கொண்டு ஆயுள் பூராவும் ஆத்ம விசாரனை செய்தாலும் ஆத்ம தரிசனம் பெறுதல் இயலாது.

யோக சுவாமிகள் துரியாதீத நிலையில் இருந்தே ஆத்ம தரிசனம் பெற்றார் என்பது முழுதும் உண்மையாகும். அவருடைய சீடர்களுள் கைவிரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே துரியாதீத நிலை அடையும் தெய்வீக பாக்கியம் பெற்றுள்ளார்கள். ஏனையோர் துரியாதீத நிலை அடையாதவர்களாவர். அவர்கள் ஏட்டுக் கல்வி மூலம் ஆத்மாவைப் பற்றிக் கற்றறிந்துவிட்டு " நாம் ஆத்மாவை அறிவோம்" எனக் கூறுவார்களாயின் அது அடுக்குமா? அதை ஏற்று நாமும் அவ்விதம் கூறிப் பெருமைப் படுதல் நியாமாகுமா? "தன்னெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்தபின், தன்னெஞ்சே தனைச் சுடும்" என்னும் குறள் உபதேசத்தை உணர்ந்து செயற்படுதலில் 'நாம் அறியோம்" என்னும் விசாரனையின் போது கண்டிப்பாக அனுசரிக்க வேண்டியதாகும். அதைப்பற்றிக் கற்றல் கேட்டலைவிட நாம் துரியாதீத நிலை அடைந்த பின்பு விசாரணை செய்து சுயமாகவே கண்டு பிடித்தல் வேண்டும். கட்டிலில் ஏறுமுன்பு கால் ஆட்டுதல் வீழ்ச்சிக்குத்தான் ஏதுவாகும்.

துரியாதீத நிலை அடைந்தவர்களாற்றான் நினைப்பற நினைக்கும் ஆற்றல் பெற முடியும். ஆத்மாவையும் முழுமையாக நினைப்பற நினைத்தல் மூலமே பெறலாம். நினைப்பற நினைத்தலைப் பற்றி முதன் முதலா உலகுக்கே கூறி விளக்கிய பெருமை நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர் தலைவர் திருமூலருக்கே உண்டு. அவரை அடுத்து அதைப்பற்றிக் கூறிய மகிமை மாணிக்கவாசக சுவாமிகளுக்கே உண்டு. வேறு எவரும் நினைப்பற நினைத்தலைப் பற்றிக் கூறி விளக்கமளித்தாதகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் அதைப்பற்றி விழுப்பம் உறக் தத்துவமேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ' How to think without thoughts? -- எண்ணங்கள் அற்றுச் சிந்தித்தல் எப்படி? என்பதற்கு அற்புதமான விளக்கம் அளித்துள்ளார். அதைப் பற்றி திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் இதோ:

தலைப்பட லாமெங்கள் தத்துவன் தன்னை

பலப்படு பாசம் அறுத்தறுத் திட்டு

நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்

தலைப்பட லாகுந் தருமந் தானே!

இத்திருமந்திரத்தை அடுத்து மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய இது தொடரானதொரு திருவாசகத்தை இங்கு கொடுக்கிறோம்;

இன்றெனக் கருளி இருள்கடிந்(து) உள்ளத்து

எழுகின்ற ஞாயிறே போன்று

நின்றநின் தன்னை நினைப்பற நினைந்தேன்;

நீயலால் பிறிது மற்றின்மை

சென்றுசென் றணுவாய் தேய்ந்துதேந் தொன்றாம்

திருப்பெருந் துறையுறை சிவனே!

ஒன்றும்நீ அல்லை; அன்றியொன் ரில்லை

யாருன்னை அறியகிற் பாரே?

திருவடிச் சேர்வதற்கும் ஆத்ம ஞானம் பெறுதற்கும், தருமநெறி நிற்றலுக்கும் துரியாதீத நிலையிலிருந்து நாம் நினைப்பற நினைத்தல் மிகவும் அவசியமாகும். நினைப்பற நினைத்தலையே யோகசுவாமிகள் உண்மையான ஆத்ம விசாரனை என மறைமுகமாக விளக்குகிறார். அதன் மூலமே நாம் சிதம்பர நாதனைத் தலைப்படலாம். சிவனை, "ஒன்றும் நீ அல்ல" என விளித்து நயப்பதின் மெய்ப்பொருள் என்ன? அதுவே "நாம் அறியோம்" என்னும் மகாவாக்கியத்து ஆணிவேராக உள்ளது. ஆம்! சிவன் மனத்தினால் சிருஷ்டிக்கபப்டும் பொருள் ஒன்றும் அல்ல. எனவே மனசிருஷ்டியாலும் நினவு விருத்தியினாலும் அவனையோ அல்லது புனிதமான ஆத்மாவையோ நாம் அறியோம். நினைப்பற நினைப்பதனாற்றான் அவற்றைப் பற்றி சத்திய தரிசனம் பெறலாம்.

அணுசக்தியின் ஆற்றலைப் பற்றி மாணிக்கவாசக சுவாமிகள் முற்காலத்திலேயே நன்கு தெளிந்துள்ளார். அணுவானது தன்னகத்தே எதிர்ப்புச் சக்திகளை இருமைவகையாகக் கொண்டுள்ளதாகும். மனித மனமானது அணுசத்தியின் மிக நுண்ணிய பிரதிபலிப்பாகும். அதனாற்றான் அதனிடம் இருமைவகையான எதிர்ப்புச் சக்திகள் ------ நன்மை-தீமை, அறிவு-அறியாமை, புண்ணியம்-பாவம் முதலிய உருவாகின்றன.

எமது ஒவ்வொரு நினைவும் அதனால் ஆக்கப்படும் சொல்லும் பொருளும் தன்னகத்தை எதிர்ப்பைக் கண்டனவாக இருக்கிறது. மன ஆற்றலின் இயல்பு இருமைவகையாகும். அருள் ஆற்றலின் இயல்பு இருமை வகையற்ற ஒருமைப்பாடு -- அத்துவித தன்மை உடையதாகும். அதனாலேதான் மணிவாசக சுவாமிகள் திருப்பெருந்துறை இறைவனின் இயல்பு அணுதேய்ந்து தேய்ந்து மறைந்து ஒன்றாக அத்துவிதமாக உள்ளதெனத் தெளிவு படுத்துகிறார். அணுத்தன்மை உடைய மனந்தேய்ந்தாற்றான் நம்மிடம் அத்துவிதமான சிவத்தன்மை உருவாகும் எனப் புலப்படுகிறது.

நினைப்பற நினைத்தல் மன ஒருமைப் பாட்டுடன் சிந்தித்தலாகும். அத்தகையதொரு சிந்தனை நிலைதான் துரியாதீத நிலையாகும். துரியம் என்பது ஆத்மா மாயையுடன் சம்பந்தப்பட்டிருக்கும் மூன்று பரிமாணங்களாகும். இந்த மூன்று பரிமாணனக்களையும் மாயாத்தத்துவம் வித்தியாதத்துவம் சிவதத்துவம் எனக் கூறுவர். சிவதத்துவம் வேறு; சிவனுடைய பூரணமான அருள் நிலை வேறாகும். அருள் நிலையானது நான்காவது பரிமாணத்தில் தில்லை அம்பலமாக அல்லது சிதம்பரமாக உள்ளது. அதுவே அங்கு இங்கு எனாதபடி நீக்கம் அற எங்கும் பிரகாசமாகிப் பூரனமாகி வியாபித்து விளங்கும் அற்புதமான நிலையாகும். அதுதான் துரியாதீத மாகும். அந்நிலை எய்தினாற்றான் நினைப்பற நினைக்கும் சத்தியை நாம் பெறலாம். நினைப்பு அறாது நினைப்பதனால் அதனை "நாம் அறியோம்" என்பதே உண்மை விளக்கமாகும்.

சாதகர்களுள் எத்தனை பேர் நினைப்பற நினைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்களோ நாம் அறியோம். சாதனை இன்றி அதனை சாதித்தல் அரிதாகும். அதற்கு வேண்டிய நுட்பமான சாதனைகளை நாம் அடுத்துவரும் இரண்டு மகாவாக்கியங்கள் மூலமாக அவதானித்துப் பயின்று செபத்தியானஞ் செய்து, கிரகித்து அனுசரிப்போமாக!

இரண்டாம் மகாவாக்கியம் முற்றும்

அணிந்துரை
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top