உ
சிவமயம்
யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்
சைவநன்மணி நா. செல்லப்பா
நான்காவது மகாவாக்கியம்: முழுதும் உண்மை
யோகசுவாமிகள் அருளிய நான்காவது கடைசி மகாவாக்கியம் இதுவாகும். நாம் பலவற்றைக்
கேட்கிறோம், பார்க்கிறோம், படிக்கிறோம். அவற்றுக்கு உதவியாகப் பல நவீன விஞ்ஞான
ரீதியிலான மக்கள் தொடர்பு சாதனங்கள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் இங்ஙனம் நாம்
அறிபவை முழுதும் உண்மைதானா? என்ற பிரச்சினை எழுகிறது. முழுதும் உண்மை என்றால் என்ன?
என்பதைப் பற்றிக்கூட முழுமையான மனவாசக விளக்கம் பெறுதல் கடினமாக உள்ளது. இலகு தமிழ்
மொழியிற்றான் இவ்வாக்கியம் உள்ளது. இலகுமொழி முழுமையான உண்மை விளக்கம் கொடுப்பதாக
இல்லை. பகுத்தறிவாற்றலும் அதை ஈவதாகப் புலப்படவிலை. யோகசுவாமிகள் "முழுதும் உண்மை"
எனபதின் மெய்ப்பொருளைப் பூரணமாக உணர்ந்துதான் அதை எமக்கு உபதேசித்துள்ளார் என்பது
புலப்படுகிறது.
அவர் பெற்ற முழுதும் உண்மைப் புலப்பாடு ஏன் ஏற்படுகிறதில்லை? பூரணமான உண்மைப்
புலப்பாட்டை நாம் அவரிடமிருந்து பெறுதல் முடியுமா? அவருடைய போதனைகளும்
நற்சிந்தனைகளும் உண்மையாகவே நமக்கு முழுமையான சத்தியப் புலப்பாட்டை நேரடியாகவே
நல்கும் ஆற்றல் உடையனவா? இல்லையாயின் அவரைப் போல நாம் பூரணமான உண்மை விளக்கம் பெற்று
எமது வாழ்க்கையை எவ்வாறு பூரணத்துவம்-- முழுமை உடையதாக்களாம்? என்னும் பிரச்சினைகள்
எம்மிடம் எழுகின்றன. இது இயல்பானதாகும். இது எவ்விதமான குருதுவேஷம் கொண்டதாகவும்
இல்லை. பிறருடைய பூரண வாழ்க்கையைப் போற்றிப் புகழ்ந்து பிரச்சாரம் செய்வதினால் நாம்
முழுதும் உண்மையைத் தெளிந்து உணர்ந்து செயற்படுபவர்கள் ஆகிவிட முடியுமா? மெய்ஞான
சத்திய வீரவணக்கம் உண்மையாகவே எதைக் குறிக்கிறது? அது குறிக்கும் இலட்சியத்தை
யடைவதற்கு ஒருவழி காட்டியாக இந்த முழுதும் உண்மை விளக்க ஆய்வு அமைந்துள்ளது.
நாம் யோகசுவாமிகளை மெய்ஞ்ஞான வீரனாக வழிபடுவதின் உண்மையான நோக்கம் என்ன? அவருக்கென
உதட்டளவில் சேவை செய்வதா? பணிந்து போற்றிப் புகழ்ந்து புறப்பூசைகள் புரிவதா? அவரைப்
போலியாகப் பின்பற்றுவதா? இன்றேல் அவருக்கு இணையாக நாமும் மனமாற்றம் பெற்று எமது
மனத்தை திருவருளுக்கு முழுமையான பாத்திரம் ஆக்கி அதில் முழுதும் உண்மைப் புலப்பாட்டை
நாமே நேரடியாக காண்பதா? என்பதுதான் எமது முக்கியமான ஆத்மீகப் பிரச்சினையாகும்.
யோகசுவாமிகளுடைய அன்பு நெறி நமக்கு -- நாம் செய்ய வேண்டிய சாதனைகளுக்கு -- நல்லதொரு
வழிகாட்டியாக உள்ளது. சாதனைகளை வழுவறச் செய்வதன் பேறாக நாமும் சுவாமிகளை போல
மனமடைமாற்றம் பெறலாம். பெறும்போது நாமும் அவரைப்போலத் திருவருளுக்குப் உண்மையான
முழுமைப் பாத்திரமாகலாம். அப்பொழுது திருவருளே எம்மிடம் முழுதும் உண்மையாக நிலவிப்
பூரணமான சத்தியப் புலப்பாட்டையும், பூரணமான வாழ்வையும் நல்கும். பிறரை வெறுமனே
புறப்பூசைகள் செய்து போற்றிப் பின்பற்றுவதால் முழுதும் உண்மைப் புலப்பாடு
சாத்தியமாகாது. மனித வீரவணக்கமே கதியென நம்பி வாழும் சாதகர்கள் இவ்வுண்மை விளக்கம்
பெறுதல் அவசியமாகும்.
நாயன்மார்களும் சந்தான குரவர்களும் மகரிஷிகளும் தனித்தனியே சாதனம் செய்துதான்
சுயமாகவே சத்திய சொரூபதரிசனம் -- அதாவது முழுதும் உண்மைப் புலப்பாடு பெற்றுளர்.
சத்திய சொரூபமாகிய சிவனைச் சைவர்கள் சச்சிதானந்தன் என வழிபடுகின்றனர். அதன் நோக்கம்
அவர்களும் சச்சிதானந்தம் அடைதல் வேண்டும் என்பதாகும். சச்சிதானந்தனின் உண்மைவிளக்கம்
அவன் சத் எனப்படும் உண்மையையும், சித் எனப்படும் பேரறிவையும் ஆனந்தம் எனப்படும்
பேரின்பத்தையும் முழுமையாகக் கொண்டவன் என்பதாகும். இது முழுதும் உண்மை. மனிதன்
சிரமப்பட்டுப் பெறும் உண்மை அல்ல. அவை அரைகுறையானவையாகும். அரைகுறையான ஒருபோதும்
பூரணமாகமாட்டா. ஏனெனின் பகுதிகளை ஒன்று சேர்த்துக் கூட்டுவதனால் பூரணம், -- முழுதும்
உண்மை -- உண்டாவதில்லை.
இதை அருமையாகவும் அழகாவும் விளக்கும் சமஸ்கிருத உபநிடத சுலோகம் ஒன்றை இங்கு
தருகிறோம்:--
பூரண மத·; பூரண மிதம்;
பூர்ணாத் பூர்ணம் உதிச் யதே!
பூர்ணஸ்ய பூர்ணம் ஆ தாய
பூர்ணம் ஏவா வசிஸ் யதே!
இந்த வடமொழிச் சுலோகட்தின் தமிழாக்கம் பின் வருமாறு:--
அது பூரணம்; இது பூரணம்
பூரணத் திலிருந்து பூரணம் உதிக்கிறது
பூரணத்தி லிருந்து பூரணத்தை எடுத்தாலும்
பூரணம் ஒன்றே விஞ்சி உள்ளது!
யோகசுவாமிகள் அருளிய முழுதும் உண்மை எனும் மகாவாக்கியத்துக்கு இந்தச் சுலோகத்தைப்
போல வேறெதுவும் சிறந்த உண்மைவிளக்கம் கொடுப்பதாகத் தெரியவில்லை. மேலெழுந்தவாரியாகச்
சொல்லுக்குச் சொல்லு விசேடவுரை கூறுவதனால் இதிலுள்ள தத்துவஞான மறைபொருள் முழுமையாகப்
புரிய மாட்டாது. உண்மையாகவே நாம் திருவருளுக்குப் பாத்திரமாக இருந்து இதை
விழிப்புணர்வுடன் அவதானித்து ஆய்ந்தாலன்றி இதன் மறை பொருள் புலப்படாது. திருவருளே
விவேகப் படைப்புச் சக்தியாக உள்ளிருந்து மலர்ந்து இதிலுள்ள பூர்ணத்துவத்தின் --
முழுதும் உண்மைத் தன்மையை சுயமாகக் கிரகித்து உணரும் ஆற்றலைக் கொடுக்கிறது.
கிரகிக்கும் ஆற்றலை ஒருவருக்கு இன்னொருவர் வழங்குதல் இயலாது.
பூரணமாகிய ஒருதனிப் பொருளை அறிந்தோ அறியாமலோ வைத்துக்கொண்டு அத்துடன் நாம் எத்தனையோ
கணித உளவியல் விளையாட்டுகள் புரிகிறோம். அதைப் பகுதிகளாக பிரிக்கிறோம்,
பெருக்குகிறோம், கூட்டுகிறோம், கழிக்கிறோம். அதனால் நாமும் ஏதோ ஒரு பூரணமான கணக்கைப்
போடுகிறோம். நாம் போடும் இந்தக் கணக்கு நமக்குப் பூரணமாகத் தெரிகிறது.
பூரணமான பரம்பொருளாகிய அது பூரணமாகப் புலப்படுகிறது. நாம் கணக்கிட்டுப் பார்க்கும்
பூரணமாகிய இதுவும் ஏதோ பூரணமாகத் தெரிகிறது. அது பூரணம், இதுவும் பூரணமாக எமக்குப்
புலபடுகிறது. அந்தப் பூரணத்திலிருந்து இந்தப் பூரணம் உதிக்கிற போல நமக்குத்
தெரிகிறது. இந்நிலையில் உபநிடதம் இயற்றிய மகரிஷி அற்புதமானதோர் உண்மையைக் கூறி அதன்
மெய்ப்பொருளை எம்மையே கிரகித்துத் தெளியும்படி விடுகிறார். நாம் இப்பொழுது
கிரகித்துத் தெளிய வேண்டியது, இச்சுலோகத்தில் வரும் பின்னைய இரண்டு அடிகளிலும்
பொதுந்துள மறைபொருளையே யாகும். அதை மீண்டும் ஒருமுறை அவதானிப்போம்:
பூரணத்தி லிருந்து பூரணத்தை எடுத்தாலும்
பூரணம் ஒன்றே விஞ்சி உள்ளது!
பரிபூரணத்திலிருந்து நாம் காண்கிற -- கணக்கிட்டு அறிகிற உளவியற் பூரணத்தை
எடுத்தாலும் அதன் பெறுமதி பாதிக்கபடுவதில்லை. பரிபூரணத்திலிருந்து பகுதிகளை
பகுத்துக் காணுதல் மனச் சார்பு நிலையில் பொருந்துமே யன்றி புனிதமான ஆத்மிக நிலையில்
அது பொருந்தாது. அதேபோலப் பரிபூரணத்துடன் பகுதிகளைத் தொடுத்துப் பார்த்தலும்
வீணாகும். இதிலிருந்து நாம் பொதுவாகக் கிரகித்துக் தெளியக் கூடியது யாதெனின் உளவியல்
ரீதியில் நாம் போடும் (psychoanalysis) பகுப்புக் கணக்கும், (psychosynthesis)
தொகுப்புக் கணக்கும் பரிபூரணத்தைக் கண்டு பிடிப்பதற்கு உதவாதென்பதாகும். விசேடமாகக்
கிரகித்து விளங்கக்கூடியது சுட்டறிவுச் சம்பாத்தியத்தால் -- புறக் கல்வி கேள்விகளால்
-- பரம் பொருளை முழுமையாகத் தெளிய முடியாதென்பதாகும். அதை முழுமையாகத் தெளிவு
பெறுவதற்கு மெய்யுணர்தல் ஒன்றே போதும். அதனால் உள்ளிருந்து மலர்வதே யோகசுவாமிகள
அருளிய முழுதும் உண்மையாகும்.
இது தொடர்பாக எழுத்தாளரைச் சென்ற 35 வருடங்களாக மெய் உணர்த்தி உய்வித்து வரும்
தாயுமானசுவாமிகளுடைய அருட்பா ஒன்று நினைவுக்கு வருகிறது.
இதோ அது:-
கூடுதல் உடன்பிரிதல் அற்று நிர்த் தொந்தமாய்
குவிதலுடன் விரிதல் அற்றுக்
குணம் அற்று வரவினொடு போக்கும் அற்று நிலையான
குறியற்று மலமும் அற்று
நாடுதலும் அற்று ஐவகைப் பூத பேதமற்று
ஞாதுருவின் ஞானம் அற்று
வாடுதலும் அற்று மேல் ஒன்றற்று இரண்டற்று
வாக்குஅற்று மனமும் அற்று
மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே
வாய் மருந் துண்டு அவசமாய்த்
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மௌனியே
சித்தாந்த முக்தி முதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷ¢ணா மூர்த்தியே
சின்மயா னந்த குருவே!
யோகசுவாமிகள் சின்மயானந்த-- முழுதும் உண்மையான-- குருவையே வழிபட்டு மௌன நிலை எய்திச்
சும்மா இருந்து சுகவாரிதியில்-- ஆனந்தக் கடலில் பரிபூரணத்தேன் பருகி வாழ்ந்து எமக்கு
வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழி தாயுமானவர் கூறியது போல எல்லாம் அற்றுப் போகும்
மனநிவிருத்தி மார்க்கமே யாகும். மன நிவிருத்தி என்பது மனதில் எண்ணங்கள் யாவையும்
விருத்தி அடையாது செய்தலாகும். அதனால் மனம் காலியாகும். காலியாகவே திருவருளுக்குப்
பாத்திரமாகும். திருவருளே, முழுதும் உண்மை என்ன? என்பதைப் புலப்படுத்தி நமக்கு
உதவும்.
சிவசக்தியே முருகப்பெருமானுடைய சொரூபம் என்பதை உணர்ந்து அவர் வழிபட்டு வந்தார்.
சிவனுக்கும் சக்திக்கும் வேறுபடில்லாததுபோல சிவனுக்கும் முருகனுக்கும் வேறுபாடில்லை
எனத் தெளிந்தார். சங்க காலத்திலிருந்தே தமிழ் நாடு முருக வழிபாட்டையே முதன்மையாகக்
கொண்டிருந்தது. முருகன் அருளாலேயே அவர் எப்படிச் சைவ சித்தாந்தம் கூறும் படிமுறைக்
கிரமப்படி ஆத்மீக விடுதலை பெற்று முழுதும் உண்மை என்பதை உள்ளொளி மூலம் விளங்கப்
பெற்றார் என்பதை சற்று அவதானிப்போம். சகலர் நிலையில் மூன்று மலங்களாலும்
பீடிக்கப்பட்டிருந்த அவர் முருகன் மீது பக்தி சிரத்தை கொண்டார். அரச உத்தியோகத்தை
உதறித் தள்ளிவிட்டு நல்லூர்க் கந்தன் சந்நிதியை அடைந்தார். அங்கு செல்லப்பாச்
சுவாமியைத் தமது முதலாவது குருவாக ஏற்றார். கந்தன் கருணையானது செல்லப்பாச்
சுவாமிகளிடம் படர்க்கை நிலையில் புலப்பட்டு அவருக்கு உபதேசம் செய்து நயன தீக்கை
மூலம் மலம் அற்று - இருமலமுடைய பிரளயாகலர் நிலை எய்தினார். அதன் பிற்பாடு
கதிர்காமத்துக்குப் பாதயாத்திரை செய்து அங்கு சுயமாகவே சிவோகம் பாவனையில் ஈடுபட்டார்.
அப்பொழுது அருள் அவருக்கு முன்னிலையில் நின்று கர்மமல நீக்கம் செய்து உதவியது. அதன்
பயனாக அவர் ஒருமலம் உடைய விஞ்ஞான கலர் நிலை அடைந்தார். அதன் பிற்பாடு அவர்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற் கிணங்கச் செல்லும் இடமெல்லாம் பஞ்சாட்சர
செபதியானத்தில் -- நாய் ஓட்டு மந்திரத்தை ஓயாது உச்சரித்து வந்தார். சொற்ப காலத்தில்
மீண்டும் முருகன் அருள் அவருக்குத் தன்மை நிலையில் அவருடைய உயிருக்கு உயிராகவும்
அறிவுக்கு அறிவாகவும் நின்று ஆணவமலம் நீக்கி உதவியது. அப்பொழுது அவர் ஜீவன்முக்தர்
நிலை அடைந்தார். ஆம்! அவர் தாயுமானவர் உரைத்த வண்ணம் பரிபூரண சிவானந்த சுகவாரிதியில்
மூழ்கலானார்!
சிவசக்தியானது நாதம், விந்து கலையுருவில் ஆத்மாவிற்கு அருளி உதவுகிறது. தூலவடிவில்
அது திரோதனமாகவும் சூக்கும நிலையில் அது சுத்தமாகவும் புலப்படுகிறது. சுத்த
சக்தியாகிய நாதச் சொரூபமாக கணபதியும், விந்து சொரூபமாக முருகணும், இவை சொரூபமாக
சரஸ்வதியும் திகழ்கின்றனர். தூலவடிவிற்றான் இச்சக்திகளுக்குப் புறப்பூசைகள்
செய்கிறோம். சூக்கும வடிவிலுள்ளபோது அவைகளுக்குப் புறப்பூசை செய்ய வேண்டிய அவசியம்
இல்லை; அகப்பூசை செய்தல் அவசியம் ஆகும். புறப்பூசை உலகியல் நன்மை கருதியும் அகப்பூசை
ஆத்ம விடுதலையைக் கொடுக்கும் மலநீக்கம் குறித்தும் செய்யப்படுவனவாகும். யோகசுவாமிகள்
அகப்பூசை செய்வதில் மட்டும் நாட்டம் கொண்டிருந்தார். அதுவும் இயங்கும் சக்தியாக
முருகனையும் இயங்காத சக்தியாகிய சிவபரம் பொருளையும் வேண்டியே அந்தர்யாக பூசை செய்து
வந்தார்.
நாதத்தை ஒலி என்றும் விந்துவை ஒளி யென்றும் தமிழில் வழங்குகிறோம். ஒளியின்
சக்தியானது ஒலியின் சக்தியைவிடப் பல மடங்கு அதிகமானதாகும். அதேபோல நாதத்தை நுகரும்
காதிலும் பார்க்க, ஒலியை நுகரும் கண்ணுடைய சக்தி இருபது மடங்கு கூடியதென விஞ்ஞானிகள்
ஆய்ந்து அறிந்து வெளியிட்டுள்ளனர். மாசறு காட்சி முலமாகவே மெய்யுணர்தல் பெறலாம்
என்பது வள்ளுவன் துணிபாகும். மேல் நாட்டுத் தத்துவஞானியாகிய காண்ட் (Kant) என்பவரும்
pure perception -- புனித காட்சிதான் சத்தியப் புலப்பாட்டுக்கு அவசியம் என
வலியுறுத்துகிறார். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே விந்து சொரூபியாகிய
முருகன் வழிபாடே தமிழ் நாட்டில் முதன் முதலாகத் தோன்றியதாகும். மாசறுகாட்சியைப்
பக்குவம் அடைந்த ஆத்மாக்களுக்குக் கொடுத்து அருள்வதில் சிறந்தவன் முருகனாகும்.
தந்தையாகிய சிவனுக்கே அவன் முழுதும் உண்மையைப் பற்றிய உபதேசம் செய்தவனாயிற்றே! அவன்
அருளால் யோகசுவாமிகள் முழுதும் உண்மை யாது? என்பதை மாசறு காட்சி மூலம் உணரப்பெற்றது
ஆச்சரியமில்லை.
முருகனுடைய சக்தியைத் திருக்கைவேல் என வர்ணிப்பார்கள். அது நவீன விண்வெளி ஏவுகணை
போன்றது. ஏவுகணையில் விண்வெளி யாத்திரை செய்யும் பயணிகள் போதிய பயிற்சி பெற்றுத்
தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும். சிதாகாசத்தில் பயணம் செய்து ஆத்ம
விசாரணை ஆய்வு செய்த யோகசுவாமிகளும் தன்னை நன்கு பக்குவப்படுத்திக் கொண்டார்.
பக்குவம் அடைந்த சுவாமிகள் முருகனுடைய ஏவுகணையாகிய சக்திவேல் மூலம்
தில்லையம்பலத்துக்கு ஏவப்பட்டார். அங்கு அவர் பெற்ற ஆனந்த நடராஜனின் அற்புதமான மாசறு
காட்சியே மெய்யுணர்தலாக -- நான்கு மகாவாக்கியங்களாக -- மிளிர்ந்தன. எழுத்தாளர்
சுவாமிகளுடன் முதன்முதலாகத் தொடர்பு கொண்ட 1929ஆம் ஆண்டிலிருந்தே முருகவழி பாட்டில்
ஈடுபட்டு வருகிறார். விசேடமாகச் சுவாமிகள் அருளிய தீர்க்க தரிசன ஆசீர்வாக்குக்கு
அமைய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற 1972ஆம் ஆண்டிலிருந்தே அந்தர்யாக பூசை செய்து
வருகிறார். அதன் பேறாகவே சுவாமிகளுடைய மகாவாக்கியங்களுக்கு விளக்க ஆய்வுரை செய்யும்
தகைமை கிடைத்தது.
சிதாகாசத்தை அடைவதற்கு உண்மையாகவே எவ்விதமான புறப்பயணமும் செய்யவேண்டியதில்லை.
வெறும் குடாகாசம் பராகாசமாக வேண்டும் எனின் அதற்கு எங்கும் பயணம் செய்ய
வேண்டியதில்லை. குடத்தின் ஓட்டை உடைத்துவிட்டாலே போதும் குடாகாசம் பராகாசத்துடன்
ஒன்றிவிடுகிறது. கோயிலிற் தேங்காய் உடைப்பதின் தத்துவமும் இதுவேயாகும். புறப்பூசை
செய்து ஆயிரம் தேங்காய்களை உடைப்பதைவிட முருகனுடைய சக்திவேலே எமது ஆத்மாவை
மூடியுள்ள "நான் எனது" எனும் அகங்கார ஓட்டை-சிரட்டையை உடைத்டுதுஉதவுகிறதெனப் பாவனைத்
தியானம் செய்தல் இலட்சம் மடங்கு விசேடமும் பலனும் உள்ளதாகும்.
பூமியாகிய கண்டத்திலிருந்து அகண்டாகாச மர்மங்களை ஆய்ந்தறிதல் சுலபமான காரியமல்ல.
விண்வெளியிலிருந்து அவற்றை ஆய்ந்து உண்மையைக் கண்டுபிடித்தல் சுலபமாகும்.
சிதம்பரமாகிய பரவெளியில் இருந்து நாம் மாசறு காட்சி பெறுதல் இயலும். அதைப்
பெறுவதற்கு நாம் தேடுதலும் நாடுதலும் ஓடுதலும் செய்யவேண்டியதில்லை. யோகசுவாமிக¨ளைப்
போலச் சும்மா இருந்து முருகன் அருளால் அகங்கார மன ஓட்டை உடைத்தாலே போதும் சத்திய
தரிசனமும் பெறலாம். முழுதும் உண்மையாக உள்ளதை -- செம்பொருளை -- காணும்
மெய்யுணர்தலைப் பெறலாம்.
முழுதும் உண்மையான புலப்பாடு சத்திய சொரூப தரிசனமாகும். அதை யோகசுவாமிகள்
அனுபவத்தாற் பெறவில்லை. அனுபவம் என்பது விளைவாகும். அதனால் பெறப்படும் அறிவு--
காண்பவன் காட்சி எனும் இருமைவகை உடையதாகும். எனவே, சுவாமிகள் பெற்ற முழுதும் உண்மைத்
தரிசனத்தை அனுபூதி எனக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். அனுபூதியாகிய பூரணத் தெளிவில்
காண்பவன் காட்சி எனப்படும் இருமைவகை இல்லை. அதில் புனிதமான மாசறு கட்சி ஒன்றுமட்டும்
உண்டு. அதை கண்டவர் விண்டிலர் என்பதனால் நாம் அதை இன்னதெனச் சுட்டி காட்டமுடியாது
விடுகிறோம். ஆயினும் அதைச் சாதகர்கள் சுயமாகவே சாதனை செய்து கண்டு பிடிப்பது எப்படி?
என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம்.
மாசறு காட்சி பெறுவது எப்படி? என்பதைக் திருக்குறள் மற்றைய நூல்களிலும் பார்க்கச்
சிறப்பாக விளக்குவதைக் காண்கிறோம். அவ்விளக்கம் மெய்யுணர்தல் எனும் அதிகாரத்தில்
பத்துக் குறள் வெண்பாக்களில் வருகிறது. அவை யாவையும் இங்கு ஆய்ந்து விரிவுரை எழுத
அவகாசமில்லை. அவற்றுள் முதலாவது செய்யுளும் கடைசி செய்யுளும் நாம் செய்யவேண்டிய
அனுபூதி பெறும் சாதனைக்கு மிகவும் ஆதார வழிகாட்டியாக உள்ளன. எனவே அவ்விரண்டு
குறட்பாக்களை மட்டும் இங்கு எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள முதலாவது பாடல் theory--
கொள்கை விளக்கமாகவும் இறுதிப்பாடல் practical-- செயல்முறை விளக்கமாகவும் வருவதைக்
காண்கிறோம். இந்த அடிப்படையில் அவை இரண்டையும் நோக்குவோம்.
பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
எம்மிடம் மருள் எனப்படும் அறிவுமயக்கம் ஏற்படுவதற்குக் காரணம் மெய்ப்பொருள்
அல்லாதவற்றை உண்மையானவை என உணருதலாகும். அத்தகைய மருள் உடையவன் மக்களுள் சிறப்பு
இல்லாதவனாகும். வாழ்க்கையில் ஒருவன் சிறப்புற வாழவேண்டுமாயின் மருள் நீங்கி மாசறு
காட்சி பெறுதல் அவசியமாகும். மருள் என்பது ஆத்மாவைப் பீடித்த ஒரு நீடித்த தீவிரமான
நோயாகும். அது எப்படி உண்டாகின்றதென்பதையும் அதை எங்ஙனம் நீக்கவேண்டும் என்ற
சதனாமுறையையும் உளவியல் ரீதியில் மிகவும் அற்புதமாக விளக்கும் பத்தாவது குறட்பா இதோ:--
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
இதில் வரும் காமம் (இச்சை) வெகுளி (கோபம்) மயக்கம் (மமகாரம் எனப்படும் செருக்கு)
ஆகிய மூன்றும் உண்மையான பொருட்களா? என்பது எமது ஆய்வுக்குரிய விடயமாகும். அவை
மனத்தினால் ஆக்கப்படும் பொய்யான கற்பனைப் பொருட்களாகும். அவையாவும் மனவிருத்தியின்
-- உணர்ச்சிகளின் -- விகாரங்களின் மூன்று வெவ்வேஎறு நிலைகளாகும். மனோவிகார
உணர்ச்சிகள் பொருள் அல்லாதனவாகும். ஆனால் நாம் அவற்றை உள்பொருள்கள் ஆக்கி
மலைப்புறுகிறோம். அவற்றை எப்படி உள்பொருள் ஆக்குகிறோம் -- பொருள் அல்லாதவற்றைப்
பொருள் ஆக்குகிறோம் என்பது ஆய்வுக்குரியதாகும்.
மனதில் ஏற்படும் உணர்ச்சிகள் பல்வேறு மனநிலை மாற்றத்தால் ஏற்படுவனவே அன்றி அவை
உண்மையான பொருள்களல்ல. ஆனால் அவற்றுக்குக் காம வெகுளி மயக்கம் எனச் சுட்டுப்பெயர்
இடும்போது அவற்றைப் பொருள் ஆக்கி விடுகிறோம். அங்ஙனம் பொருளாக்கிய பின்பு அவற்றை
அடக்கு அல்லது நீக்கு என்றோ உபதேசம் செய்வதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. அவற்றை
அறவே நக்£குவதாயின் அவற்றுக்கு நாமம் இட்டுச் சுட்டுப் பொருள்களாகக் கணிக்கும்
வழக்கத்தை விடுதல் வேண்டும். அவற்றின் நாமம் கெட வேண்டுமாயின், மனவிருத்தி நீங்கிட
-- மனச்சலனமற்ற சாந்த மௌன நிலை ஏற்படுதல் வேண்டும். அதுவே அவற்றின் நாமம் கெடுவதற்கு
உகந்த வழியாகும். ஆத்ம நோய் நீங்குவதற்கு இத்தகைய தியான விசாரணைத் தெளிவு அவசியம்
வேண்டுவதாகும்.
பொருள் அற்றவற்றைப் பொருள் எனக் காணுதல் மருள் எனக்குறிப்பிடும் வள்ளுவனின் வாக்கை
மெய்கண்டதேவர் தமது சிவஞானபோதச் சாதனை இயலில் வேறு ஒருவிதமாகக் கூறுகிறார். அதாவது
பொய்யானவற்றைப் பொய்யெனவே காணுதல் மெய்யுணர்தாலாகும் என்பதாகும். மனதுக்குப்
பூரணமான உண்மையைக் காணும் ஆற்றல் இல்லை என்பதனாலேயே யோகசுவாமிகள் நாம் அறியோம் என
இரண்டாவது மகாவாக்கியத்தில் உபதேசித்துள்ளார், மனதினால் ஆக்கப்படும் பொய்யான உளவியற்
பொருள்களைப் பொய்யென விசாரணை செய்து விளங்கும் ஆற்றல் மனதுக்கு உண்டு. ஆனால் அந்த
ஆற்றல் சிதறுண்டு மழுங்கி உள்ளது. அதை ஏகாக்கிரப்படுவதற்குச் சில சாதனைகள் உண்டு.
அவற்றுள் முக்கியமானது ஸ்திரப்பிரக்ஞையுடன் அவதானமாக விழிப்புணர்வுடனும் மனவிருத்தி
இல்லாது குறித்த பொருள் எதையும் கவனித்தலாகும்.
மனவிருத்தியை ஆங்கிலத்தில் உளவியல் ஆய்வாளர்கள் (projection of thoughts) எண்ண எறிவை
என வர்ணிப்பர். திரைப்படச் சுருளையை மின் ஒளிமூலம் திரையில் எறிவை காட்டும் யந்திரம்
projector எனப்படுகிறது. அதேபோல மனமானது எண்ணங்களைத் தனது சுட்டறிவு ஒளிமூலம்
மூளையில் எறிவை செய்து காட்டுகிறது. திரைப்படக் காட்சி உண்மைக் காட்சி போலப்
புலப்படுகிறது. அது உண்மைக் காட்சி அல்ல. மானத எண்ண எறிவைக் காட்சியும் ஒரு பொய்யான
காட்சியாகும். ஆனால் நிஜம்போலப் புலப்படுகிறது. மானதக் காட்சியை மாசறு கட்சியென
நம்பி ஏற்றல் மருளாகும். அந்த மருள் நீங்கும் பொருட்டே பொய்யானவற்றை பொய்யெனக்
காணுதல் வேண்டும். பொருள் அல்லாதவற்றைப் பொருள் எனக் கொள்ளுதல் கூடாது. மாசறுகாட்சி
மொழி ஆற்றலினாலோ அல்லது சுட்டறிவுச் சக்தியினாலோ பெறக்கூடிய ஒன்றன்று. அது விவேகப்
படைப்புச் சக்தியாகிய அருள் உள்ளொளியால் மட்டும் பெறக்கூடியதாகும். இதற்கு உகந்த
எடுத்துக்காட்டு படிப்பு வாசனையற்ற கண்ணப்ப நாயனாரும், நந்தனாரும் ஆகும்.
விஞ்ஞானிகளுள் குறிப்படத் தகுந்தவர் மின்மந்திரவாதி எனப்படும் தோமஸ் அல்வா
எடிசனாகும். உள்ளொளியே அவருடைய நூற்றுக்கணக்கான புதிய விஞ்ஞானக் கண்டு
பிடிப்புகளுக்குக் காரணமாகும். யோகசுவாமிகளுடைய நான்கு மகாவாக்கியக் கண்டு
பிடிப்புக்கும் காரணம் அவர் பெற்ற அருள் ஒளியேயாகும். அவை முழுதும் உண்மையெனத்
தெளிந்துகொள்வதற்கு நமக்கும் அருளொளி வேண்டும்.
இந்த அருள் ஒளி எப்படி உதயமாகிறது என்பதைக் கந்தலங்காரத்தில் அருணகிரி நாதர்
விளம்பியுள்ளதைப் பாருங்கள்:
ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்துச் சியின்மேல்
அளியில் விளைந்த ஆனந்தத்த தேனைத்
தெளிய விளம்பிய ஆறுமுகவா!
இதிற் குறிக்கப்பட்ட அருள் ஒளி மலையின் உச்சியில் முருகன் சிவலிங்கமாகக் காட்சி
அளிக்கிறான் , அக்காட்சி ஆனந்தத் தேனாக உள்ளது. அத்தேன் தூய பலன் கருதாத அன்பின்
ஊற்றாகப் பொங்குகிறது. தேனிடம் உள்ள தீன் சுவையைத் தேன் அறிந்து அனுபவிப்பதில்லை.
அதனை பிறரே சுவைப்பர்கள். அதுபோல அன்புடையார் எதுவும் தமக்குடையர் அல்லர். பரோபகாரச்
சிந்தனையும் செயலுமே அருள் ஒளி மலர்ச்சிக்குக் காரணமாகும். இவ்வுண்மையை உயிர்கள்
விமோசனம் பெறும் பொருட்டுத் தெளிந்து அனுசரிக்கும் நோக்குடன் முருகன் தந்தையாகிய
சிவனுக்கு உபதேசித்ததாகக் கூறப்படுகின்றது. சுயநலம் மக்களுக்கு மருளையும் பரோபகாரம்
எனப்படும் அன்பின் விளைவான பிறர் நலம் பேணுதல் அருள் ஒளியையும் நல்குவனவாகும். அருள்
ஒளிப் பொலிவே அனுபூதியாகும்.
யோகசுவாமிகள் காட்டிய ஆத்மீக சாதனாநெறி எந்த ஒரு குறிப்பிட்ட புறப்பாதையும் அல்ல.
அது மெய்கண்ட தேவர் காட்டிய இல்வழியின் மறைஞான விளக்கமாகும். இல்வழி என்பது
மனவிருத்தியை நிவிருத்தி செய்தலாம். அதை ஆங்கிலத்தில் ( negative approach to
education) கல்விமுறையின் எதிர்மறை அணுகுமுறை எனக் கூறுவர். அது உடன்பாட்டு நிலையில்
சுட்டறிவு சம்பாதிக்கும் வழியல. எதிர்மறை நிலையில் மக்களுடைய விவேகப்படைப்புச் சக்தி
மலர்ச்சிக்குத் தடையாக உள்ளவற்றை நீக்குதலாகும். அருளொளி மலர்ச்சியே
விவேகப்படைப்புச் சக்தியாகும். மனமலர்ச்சிக்குத் தடையாக உள்ளவை பந்த பாசங்களாகும்.
பந்த பாச நீக்கத்தையே தமது வாழ்க்கைக்குறிகோளாகக் கொண்டு வெற்றி பெற்ற மகரிஷி
யோகசுவாமிகள் ஆவர். அவர் காட்டிய பாச நீக்கமாகிய இல்வழியையே நாமும் அனுசரித்தல்
அவசியமான கடமையாகும்.
நிவிருத்தியாகிய இல்வழியைத் தாயுமானவ சுவாமிகள் தன்னை ஆண்ட நிர்விகற்ப சாதனாநெறி
எனக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்:--
என்னை ஆண்ட
படிக்கு நிர் விகற்பத்தால் பரமா நந்தக்
கதிகண்டு கொள்ளவும் நின்னருள் கூரிந்தக்
கதியன்றி உறங்கேன்; மேற் கருமம் பாரேன்
இத்துடன் இம்மனவாசக விளக்கம் முடிபடைகிறது. இதை ஊன்று கோலாகக் கொண்டு சாதகர்கள்
மேலும் முன்னேறுதல் வேண்டும். அதன்பொருட்டு மனச்சார்பற்ற நடுவு நிலையில் நின்று
கேட்டல், சிந்தித்தல், தெளிதல் , சமாதி கூடுதல் மூலம் இருவினை ஒப்பு சிவோகம்பாவனை
பஞ்சாட்சர செபதியானம் இறைபணி நிற்றல் ஆகிய நான்கு சாதனைகளையும் சரவரச் செய்து
ஒவ்வொருவரும் சுயமாகவே அருள் பெறுதல் வேண்டும். அருள் ஒளியே நமது பூரணமான பேரின்ப
வாழ்க்கைக்கு வழிகாட்டி ஆகட்டும்.
சத்தியம்-சிவம்- சுந்தரம்
சிவயோகசுவாமிகள் மகாவாக்கிய விளக்கம் முற்றும்.
அணிந்துரை
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை