பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை

வள்ளுவப் பேராசானில் தொடங்கி, நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் வரை இசைக்கும் இசைக் கருவிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இந்த இசைக் கருவிகளில் மிகவும் அதிகமாக இடம்பெறுவது "யாழ்' என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆமாம், இந்த "யாழ்' எப்படி இருக்கும்? வீணைபோல இருக்குமோ?


பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனை.

ஒப்பனை செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் புலவர். அவருக்கு யாழின் ஒவ்வொரு பகுதியும் எப்படித் தெரிகிறதாம் தெரியுமா?


யாழின் மண்குடம் போன்று அமைந்த பகுதிக்கு பத்தல் என்று பெயர். இந்தப் பத்தலுக்கு, மானின் குளம்பு பதித்த அலகுகளை உவமை கூறலாம் என்கிறார். அந்தப் பத்தலின்மேல் போர்த்தப்பட்டிருக்கும் தோலின் நிறத்திற்கு விளக்கின் சுடர் உவமை கூறப்பட்டிருக்கிறது. இரண்டு புறமும் அமைந்த இந்தப் பத்தல் பகுதிகளை இணைத்துப் பொதித்திருக்கிறது தோல். அந்தத் தோலின் வாய்ப் புறங்கள் மேற்பக்கத்தில் கூட்டித் தைக்கப்பட்டுள்ளன. அந்தத் தையல் போடப்பட்ட இடமானது, சிவந்த நிறமுள்ள இளம் பெண்ணின் இளஞ்சூல் அமைந்த வயிற்றின் கீழே மெலிதான ஒழுங்குபட்ட ரோமங்கள் நீண்ட கோடாய் அமைந்ததுபோலத் தெரிகிறது புலவருக்கு.


பத்தலின் பகுதிகள் நெகிழாமல் இணைந்திருப்பதற்கு அவை ஆணிகளால் முடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆணிகள் வலையில் வாழும் நண்டுகளின் கண்களை நினைவு படுத்துகிறதாம். பத்தலின் உட்புறம், வீணையில் உள்ளது போலவே குடைந்தெடுக்கப்பட்டிருக்கும். அதன் தண்டு சார்ந்த மேற்பகுதியும் அரை வட்டமாகக் குடைந்தெடுக்கப்பட்டிருக்கும். அது எப்படித் தோன்றுகிறது என்றால், அமாவாசை கழிந்த எட்டாம் நாளில் தோன்றும் அரை வெண்ணிலா போல இருக்கிறதாம். பொத்தலுற்ற தோலின் உட்புறத்தே அது இருப்பது, உள் நாக்கு இல்லாத வெற்றிடமாகக் காட்சி அளிக்கிறது என்கிறார் புலவர்.


பத்தலோடு பொருத்தப் பெற்றுள்ள கரிய தண்டு, கருமை நிறமுள்ள பாம்பு தலை நிமிர்த்தி இருப்பதுபோலக் காட்சி அளிக்கிறது. அந்தக் கரிய தண்டில் சுற்றப்பட்டுள்ள வார்க் கட்டுகள் கருமையான நிறமுடைய பெண் ஒருத்தி அணிந்த வளையல்கள் போலக் காட்சி அளிக்கின்றனவாம்.


பொருத்தமான நரம்புகள் அந்த வார்க் கட்டுகளோடு பத்தலில் தொடுக்கப்பட்டுள்ளன. அது, திணையரிசியைக் குத்தி, ஆய்ந்த அரிசியில் இருந்து வேண்டாதன நீக்கிப் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளன போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்புகள் என்கிறார் புலவர்.

குற்றம் குறையே இல்லாமல் யாழின் அனைத்துப் பாகங்களையும் சரி செய்தால்தான் அந்த யாழை மீட்டும் கலைஞனால் நல்ல இசையை வெளிப்படுத்த முடியும். அது, மணப்பெண்ணுக்கு சிகை அலங்காரம், ஆடை அலங்காரம், நகை அலங்காரம் எல்லாம் செய்த பின்னும் மேடைக்கு அனுப்புவதற்கு முன்னால் மீண்டும் ஒப்பனை செய்து அழகு பார்ப்பதற்கு ஒப்பானது என்கிறார் புலவர்.


இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் யார்? வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்.


பொருநராற்றுப் படையில் காணப்படும் அற்புதமான பாடல் இது:


குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல்

விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை

எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ் வயிற்று

ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல

பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;

அளைவாழ் அலவன் கண் கண்டன்ன,

துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி;

எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி

அண் நா இல்லா அமைவரு வறுவாய்;

பாம்பு அணந்தன்ன ஓங்கு இது மருப்பின்;

மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;

கண் கூடு இருக்கைத் திண் பிணித் திவளின்

ஆய் திணை யரிசி அவையல் அன்ன

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்

கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;

மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,

அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;

ஆறு அலை கள்வர் படை விட அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை

 

நன்றி: தினமணி (இந்த வாரம் கலாரசிகன், ஜூன் 21, 2009)