Vipulananda Adigal

விபுலாநந்தர்: காக்கியும் காவியும்!


- மப்றூக் -

"நீ எனக்கு எழுதும் கடிதங்களில் கண்ணம்மை என்று கையெழுத்திடா விட்டால் உனக்குப் பதில் அனுப்ப மாட்டேன். நான் உன்னை என் அம்மாவாகக் காண்கின்றேன் என்று சுவாமி விபுலாநந்தர் எனக்குச் சொல்வார். என்மேல் சுவாமிக்கு அத்தனை பாசம். எனது சொந்தப் பெயர் என்னவென்று அநேகமாக யாருக்கும் தெரியாது. கண்ணம்மை என்றுதான் என்னை எல்லோரும் அறிவார்கள். அது எனக்கு சுவாமி வைத்த பெயர்' என்கிறார் கண்ணம்மை என்கிற கோமதகவல்லி!

கண்ணம்மை – சுவாமி விபுலாநந்தரின் மருமகள். குடும்பத்தில் மூத்த பிள்ளை விபுலாநந்தர். அவருக்கு இரண்டு பெண் சகோதரிகள். இரண்டாவது சகோதரியின் மகள்தான் கண்ணம்மை.

கண்ணம்மை ஓய்வுபெற்ற அதிபர். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வசிக்கின்றார். 85 வயது தாண்டிய நிலையிலும் மிகவும் ஞாபக சக்தியுடன் தெளிவாகப் பேசுகின்றார். பாடசாலைக் காலத்து நினைவுகளையும், விபுலாநந்தர் பற்றிய ஞாபகங்களையும் மிகத் துல்லியமாக மீட்கிறார்.

விபுலாநந்தர் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் பிறந்தவர். அவரின் தந்தை பெயர் சாமித்தம்பி, தாயாரின் பெயர் கண்ணம்மை.

விபுலாநந்தர் தன்னுடைய தாயாரை மிகவும் நேசித்திருக்கின்றார். அந்த நேசம் அலாதியானது. தன்னுடைய தாயார் பற்றி சுவாமி விபுலாநந்தர் தனது கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகின்றார். 'என்னுடைய அம்மாவைப் போல உலகத்திலே இன்னுமொருவரைக் காணவில்லை. பார்வைக்கு அழகாக தெய்வம் போல் இருந்தார்கள். என்னை ஒரு பொழுதாவது கடிந்து பேசியது கிடையாது. அப்பா தடியினால் அடித்தாலும் எதிர்த்து நிற்பேன். அம்மா ஒரு வார்த்தை சொன்னால் அதைத் தலை மேற்கொண்டு நடப்பேன்...!'

இதனால்தான், தனது அம்மாவின் மறைவுக்குப் பின்னர் - அவரின் மீதான நேசம் காரணமாக, தன்னுடைய மருமகளுக்கு அம்மாவுடைய 'கண்ணம்மை' எனும் பெயரை வைத்து, மருமகளில் அம்மாவைக் காண முயற்சித்திருக்கின்றார் விபுலாநந்தர்.

மயில்வாகனம் என்கிற மனிதர் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்திருக்க மாட்டீர்கள். அதேவேளை சுவாமி விபுலாநந்தர் பற்றி நிறையவே அறிந்திருப்பீர்கள். இரண்டு பெயர்களுக்கும் சொந்தக்காரர் ஒருவர்தான்!

1924ஆம் ஆண்டு சித்திரை பௌர்ணமியில் காவியுடை தரித்து, சுவாமி விபுலாநந்தர் எனும் நாமம் பெற்ற அந்த மனிதனுக்கு ஆயிரமாயிரம் பக்கங்களும், முகங்களும் இருக்கின்றன.

சுவாமி விபுலாநந்தரை ஒரு சாதுவான துறவியாகவே நம்மில் அநேகர் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால், அவர் ஒரு இராணுவ வீரன் என்றால் நம்புவீர்களா?

'முதலாவது உலக யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. 1914ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். சுவாமிகள் கண்டியில் இராணுவப் பயிற்சி பெற்றார். பின்னர் காலியில் கடமையாற்றினார்' என்று கூறும் விபுலாநந்தரின் மருமகள் கண்ணம்மை, இராணுவ உடையில் துப்பாக்கியுடன் விறைத்து நிற்கும் விபுலாநந்தரின் படமொன்றை நம்மிடம் காட்டினார்.

விபுலாநந்தர் பிறவிப் புத்திஜீவி! அவருக்கு எல்லாக் கலைகளும் வசப்பட்டிருக்கின்றன. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராகக் கடமையாற்றி இருக்கின்றார். அதுபோலவே விஞ்ஞானத்துறையிலும் பி.எஸ்.சி. பட்டம் பெற்றுள்ளார். பன்மொழிப் புலமை பெற்றவர். இசை, நாடகத்துறைகளில் ஆழமான அறிவு கொண்டவர். அதற்கு அவருடைய யாழ் நூல் மற்றும் மதங்க சூளாமணி போன்ற பல நூல்கள் சாட்சியங்களாக இருக்கின்றன.

விபுலாநந்தர் - பன்முகம் கொண்டதொரு வைரம். அவர் எல்லாத்துறைகளையும் வசப்படுத்தியிருந்தார். அவரிடம் - எல்லாத்துறைகளும் வசப்பட்டிருந்தன.

1892ஆம் சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். அவருடைய சொல்லும் செயலும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. 'நாட்டு மரக்கறிகளில் சுவாமிக்கு நல்ல விருப்பம். வல்லாரையை மிகவும் விரும்பி உண்பார். மற்றவர்களையும் அதைச் சாப்பிடுமாறு உற்சாகப்படுத்துவார். இப்போது நாம் பயன்படுத்தும் 'லன்ச் பொக்ஸ்' போல், வாழை இலையால் செய்த பெட்டியில்தான் அவருடைய உணவை வைத்துச் சாப்பிடுவார்' என்று – தன்னுடைய மாமா, விபுலாநந்தரின் உணவுப் பழக்கவழக்கங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் கண்ணம்மை!

விபுலாநந்தரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவரை 'சுவாமி' என்றுதான் கண்ணம்மை விழித்தார். 'சுவாமியை நீங்கள் மாமா என்று அழைக்க மாட்டீர்களா அம்மா' என்று கண்ணம்மை அம்மையாரிடம் கேட்டோம். 'இல்லை. ஒருபோதும் நான் - அவ்வாறு அழைத்தது கிடையாது. அவர் உயிருடன் இருக்கும் போதும், சுவாமி என்றுதான் அவரை அழைப்பேன்' என்றார்.

விபுலாநந்தரும், - அவர் எழுதும் கடிதங்களில் 'விபுலாநந்த சுவாமி' என்றே கையொப்பமிட்டிருக்கின்றார்.

யாழ் நூலில் வரும் பாடலொன்றை சுவாமியின் விருப்பத்துக்கிணங்க மனனம் செய்து நான் பாடிக் காட்டியதற்காக, அவர் எனக்கு வீணையொன்றினைப் பரிசளித்தார். அந்த வீணை இப்போதும் மட்டக்களப்பிலுள்ள விபுலானந்தர் இசைக் கல்லூரியில் இருக்கிறது. அதை அவர்களுக்கு நான் அன்பளிப்பாக வழங்கி விட்டேன் என்று கண்ணம்மை கூறுகின்றார்.

விபுலாநந்தரைப் பற்றிய ஆயிரமாயிரம் கதைகள் அவருடைய மருமகள் கண்ணம்மையிடம் இருக்கின்றன. அந்தக் கதைகள் நாம் அறியாதவை. நமக்குப் புதிதானவை. விபுலாநந்த சுவாமியை நேரடியாகக் கண்டவர்கள். அவரோடு வாழ்ந்தவர்களில் - அநேகர் இப்போது இல்லை. அந்த வகையில், சுவாமியின் மருமகள் கண்ணம்மையினை நாம் ஒரு பொக்கிஷமாகவே காண்கின்றோம். அவரிடம் உறைந்து போய்க் கிடக்கும் விபுலாநந்தர் பற்றிய கதைகளை கேட்டு ஆவணப்படுத்த வேண்டும்.

விபுலாநந்தர் என்றவுடன் அநேகமானோருக்குள் ஓர் இந்துத் துறவியின் சித்திரமே மேலெழும்! ஆனால், அது கடந்து அந்த மனிதரைப் பின்பற்றவும், தொட்டுப் பேசவும் எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன.

19 ஜுலை 1947 இல் விபுலாநந்தர் உடலால் மட்டும் மரணித்தார்.

நன்றி: தமிழ்மிரர் - 27 மார்ச் 2011
எழுதியவர்: மப்றூக்