பண்டைத் தமிழர் இசைச் செல்வம்
- சுவாமி விபுலாநந்தர் -
சுவாமி விபுலானந்தர் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர். ஆங்கிலப் புலமையும், தமிழ்ப்புலமையும், தத்துவ ஆராய்ச்சியும் சிறக்கப் பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பிரிவுக்குத் தலைவராயும் விளங்கி யிருக்கிறார். இவர் சென்றமாத இறுதியில் சென்னை செனட் மண்டபத்தில் பண்டைத் தமிழ்மக்களின் இசைக்கலையைப்பற்றித் தொடர்ச்சியாக ஆறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவற்றுள் மூன்று சொற்பொழிவுகளின் சாரம் சென்ற இதழில் வெளியிடப்பட்டது. பின் மூன்று சொற்பொழிவுகளின் சாரம் வருமாறு:-
சென்னையில் இருந்து வெளிவந்த பிரசண்ட விகடன் 1936 ஏப்ரல் 1 இதழில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.
5-வது பிரசங்கம்
7-வது நூற்றாண்டிலும் பின்னரும் தமிழிசையின் நிலை
பண்டைத் தமிழர்களைப் பற்றிய தமது நான்காவது பிரசங்கமாக, சென்னை சர்வகலாசாலையின் சார்பில் சுவாமி விபுலானந்தர் "7-வது நூற்றாண்டிலும் பின்னரும் தமிழிசையின் நிலை" என்னும் விஷயத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தார். அவர் கூறியதாவது: 'காலம்செல்ல செல்ல தமிழ்ப் பாணனின் நிலை எவ்வாறு மாறுதலையடைந்த தென்பதை கவனிக்கலாம். 7-வது நூற்றாண்டில் தமிழ்நாட்டில் அரசியல் துறையில் கலாபிவிருத்தி சம்பந்தமாகவும் புதிய சகாப்தம் ஏற்பட்டது. அக்காலத்தில்தான் சைவப் பெரியார்களான திருஞான சம்பந்தரும், அப்பரும் தோன்றினார்கள். அவர்களது தோற்றம் புதிய சகாப்தம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் திருஞான சம்பந்தரைச் சந்தித்தனர். அக்காலத்தில் ஞானசம்பந்தரது பக்திரசம் ததும்பும் பண்கள் எல்லேராது மனதையும உருக்கி வந்ததோடு அவர்களது மனம் சீரிய லட்சியங்களை பாடும்படியும் செய்துவந்தன. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரது இசைக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாணனைப்போல வறுமை யுடையவரல்ல. திருநீலகண்டர் பெரிய பக்தர்; வறுமையில்லாமலே யிருந்தார். ஞானசம்பந்தரும் நீலகண்டரும் ஒருவரையொருவர் சந்தித்ததிலிருந்து இருவரும் பெரிய நண்பர்களாயினர். ஞானசம்பந்தரது பண்களுக்கு திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியும் ஸ்வரம் கோத்து யாழில் பாடுவார்கள். தர்மபுரத்தில் யாழில் வாசிக்க முடியாதவாறு திருஞானசம்பந்தர் ‘யாழ் முறி’ என்ற பண்ணை இயற்றிய சம்பவமும், திருநீல நக்கர் என்ற பிராமண பக்தர் தீண்டாதவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும், அவரது மனைவிக்கும் தமது வீட்டிலே பூஜை அறையில் இடமளித்த சம்பவமும் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் விரிவாகவுள்ளன. சைவப் பெரியார்களின் தேவரப் பண்களும் வைஷ்ணவப் பெரியரான நம்மாழ்வாரின் திருவாய் மொழியும் இசையபிவிருத்திக்குச் சாதனங்களாக விருந்தன. தமிழ் மொழியிலே இன்றுவரையில் அவைகளைவிட மேலாக பக்திரசம் வாய்ந்த பாடல்க ளில்லை.
1904-வது வருஷத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திலுள்ள ஸ்ரீ கந்தசாமி கோவில் மலையில் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து அந்தக் கல்வெட்டுகளில் கண்ட விஷயங்களை ராவ்பகதூர் பி. ஆர். பந்தர்கார் பிரசுரித்துள்ளார். 7-வது நூற்றாண்டின் இசையைப் பொறுத்த வரையில் அந்தக் கல்வெட்டுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும். அந்தக் கல்வெட்டுகளில் 7 பகுதிகள் உண்டு. அந்தக் கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்துக்களிலுள்ளன. அவைகளின் அடியில் தமிழில் ‘எட்டுக்கும் ஏழுக்கும் இவை உரிய’ என்று கண்டிருக்கிறது. இவ்விஷயங்கள் ஆராய்ச்சிக்குரியனவாகும்.
9-வது நூற்றாண்டிலே பக்திமான்களான இரு பாணர்கள் தோன்றினார்கள். அவர்களில் ஒருவான பாட்டீரனார் என்பவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் இருந்த காலத்திலிருந்தவர். மற்றொருவர் திருப்பாணாழ்வார். பெருங்கதையும், சீவகசிந்தாமணியும் 10-வது நூற்றாண்டைச் சேர்ந்தவை. யாழ் வாசிப்பது பற்றி அவ்விரு நூல்களும் குறிப்பிடுகின்றன. கதாநாயகன் கதாகாயகிக்கு இசை சொல்லிக்கொடுப்பதும் இருவருக்கும் இசைப்போட்டி நடப்பதும் வழக்கமென்று அவ்விரு நூல்களும் குறிப்பிடுகின்றன. 13-வது நூற்றாண்டிலே ‘சாரங்க தேவார சங்கீத ரத்னாகரத்தில்’ தமிழ் தேவாரப் பண்களைப் பற்றி சில இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். அவ் விஷயங்களை உதவியாகக் கொண்டு தேவார ராகங்கள் பல தற்போது மறைந்து விட்டன. 17-வது, 18- வது நூற்றாண்டுகளிலே தஞ்சையில் அரசாண்ட நாயக்க மன்னர்களும், மகாராஷ்டிர மன்னர்களும் சங்கீதத்தை ஆதரிக்க ஆரம்பித்தனர். அப்பொழுது புராதன தமிழிசை முற்றிலும் மறைந்தது. அதற்குப் பதிலாக புதிய முறை தோன்றியது. வேங்கடமாஹியின் சதுர்தண்டி-பிரகாசிகை (1660) தோன்றியது முதல் சங்கீத முறையில் புதிய சகாப்தம் ஏற்பட்டது. அது இன்றைக்கும் மாறவில்லை. ஷாஜி (1687-1711) சங்கீத அபிவிருத்தியை ஆதரித்தார். அவரும் ஒரு சங்கித வித்வானே. அவரது ராஜசபையில் திருவாரூர் கிரிராஜகவியும் ஒரு சங்கீத வித்வானாவார். கிரிராஜ கவியின் பேரனே திருவையாறு தியாகராஜ சுவாமிகள். பிறகு துலாஜாஜி (1763-1787) யின் காலத்தவரான அருணாசலக் கவிராயர் ராமாயண கீர்த்தனம் பாடினார். அதன் பின் எட்டியாபுரம் சமஸ்தானத்தைச் சார்ந்த முத்துசாமி தீக்ஷதர் (1775) திருவாரூர் சாம சாஸ்திரியார் இவர்கள் தோன்றினார்கள். தற்போது சங்கீதத்தில் ஜனங்களுக்கு விசேஷ சிரத்தை ஏற்பட்டுள்ளது. தற்காலத்தவர்கள் சுயமாக சங்தே அபிவிருத்தி வேலை செய்வார்களென்றும் புதிய முறைகளைச் சிருஷ்டி செய்து சங்கீதத்தை ஜீவனுடைய சக்தி யாக்குவார்களென்றும் நம்புவோமாக.'
சிற்ப-ஓவியக் கலைகள்
தமது 5-வது பிரசங்கத்தில் 'பண்’ என்பது பற்றி சுவாமி விபுலானந்தர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
சங்க நூல்களிலும் இதர பழைய நூல்களிலும் அரண்மனை, ஆலயங்கள், மாளிகைகள் நந்தவனங்கள், நாடகமேடை முதலியவற்றின் வர்ணனை உள்ளது. நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றவை இலக்கிய மட்டுமன்று; அழகிய ஆலயங்களில் செதுக்கியுள்ள தெய்வச் சிலைகள், சித்திரங்கள் முதலியனவுமாகும். தமிழ் சிற்பக் கலை வல்லுநர்கள், சித்திரக் கலை வல்லுநர்கள் இவர்களது திறமை மறைந்து போய் விடவில்லை. அதனை தற்போதும் தமிழ்நாட்டிலும் இலங்கையிலுமுள்ள கோயில்கள் முதலியவற்றில் காணலாம். சங்கநூல்கள் முதலியவற்றில் காணும் புராதன தமிழ் நகரங்களின் வருணனையை ஆதாரமாகக்கொண்டு அந்நகரகள் எவ்வா றிருந்தன வென்பதை ஒருவாறு யூகிக்கலாம்.
சோழ மன்னாது தலைநகரமான காவிரிப்பூம் பட்டினத்தின் வருணனையை மணிமேகலையில் காணலாம். பௌர்ணமி தினத்தில் அந்நகர் எப்படியிருந்ததென்பதையே அந்நூல் கூறுகிறது. அந்நகரை ஒரு அழகிய பெண்ணுக்கு ஒத்திட்டும், நகரின் நடுவிலுள்ள அரசன் மாளிகையை அப்பெண்ணின் முகத்திற்கும், நகரின் இரு கோடியிலுமுள்ள கற்பக விருக்ஷக் கோட்டத்தையும் வச்சராயுதக் கோட்டத்தையும் அப்பெண்ணின் ஸ்தனங்களுக்கும், கீழ்த்திசையில் எழுந்திருக்கும் சந்திரனையும் சூரியனையும் அப்பெண்ணின் காதணிகளுக்கும் ஒத்திட்டுக் கூறியுள்ளார். அரசனது அரண்மனை நகரின் நடுவிலிருக்கு மென்பது இதிலிருந்து தெரிகிறது. எல்லைகளில் மதில்களிருக்கு மென்பது காஞ்சி நகர் வருணனையி லிருந்து புலப்படும்.
சிற்பக்கலை சம்பந்தப்பட்ட வரையில் நாம் எதனையும் இழந்து விடவில்லை. கோபுரமானது பிற்கால சிருஷ்டியல்ல. ஆரம்பக் காலத்திலிருந்தே கோபுரமானது அமைக்கப்பெற்று வந்த தென்பதற்கும், அதுநீளமான தென்பதற்கும், வாசல்கள் விசாலமானவை யென்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. புராதன நகரில் அரசர், மந்திரிகள், பார்ப்பனர், நெசவுக்காார், பொற்கொல்லர், தையல்காரர் முதலியவர்களுக்குத் தனித் தனியாக வீதிகளிருந்தன. நகரில் ஸ்நான மண்டபங்களும் சோலைகளும் இருந்தன. அயல் நாட்டினர் வாசம் செய்துவந்த துறைமுகப் பட்டினங்களும் இருந்தன. நகரிலே பலவித ஆலயங்கள் இருந்தன. இருபுறங்களிலும் யானைகளுடன் லட்சுமி சிலை அமைப்பதோ சித்திரப்படம் எழுதுவதோ நீண்ட காலமாகவே இருந்துவருகிறது.
அக்காலத்திலே சிற்பிகளுக்கும் ஓவியக்காரர்களுக்கும் மிக்க மதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்கள் சிலைகள் மண்ணோடியைந்த மரத்தால் அமைத்தனர். கீர்த்தியுடையவர்கள் இறந்தபின் அவர்களைப் போல் உருவச் சிலைகள் அமைத்தனர்.
அரங்கேற்று காதையில் நாடக மேடையின் வருணனையைக் காணலாம். அம்மேடையின் நான்கு பக்கங்களிலும் தேவதைகளின் உருவப் படங்களை எழுதி வந்தனர்.
புராதன சிற்பிகளும், சித்திரக்கலை வல்லுநரும் தங்களது தொழிலின் ரகசியங்களை வெளியிடுவதில்லை. தனக்களது சந்தியாருக்குப் போதித்து வந்தனர். சிவாகமங்களில் 60 ஆகமங்கள் நகர அமைப்பு முதலிய விஷயங்களையே குறிக்கின்றன. அக்காலத்து சிற்பிகள் சாமான்யரல்ல; புலமை வாய்ந்தவர்கள், அநுபூதி பெறத் தகுதியுடையவராக விளங்கினர். தங்களது கலையின் மேம்பாட்டிற்காக சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தனர். உபாசனை செய்தே எந்த தெய்வத்தின் உருவத்தையும் அமைத்தனர். அவ்விதம் நன்றாக அமைந்த உருவத்தில் தெய்வங் குடிகொள்வது வழக்கமாம். பளிங்குமாடம் அமைத்துள்ளன ரென்பதற்கு மணிமேகலையில் அத்தாட்சி இருக்கிறது. விக்கிரகங்கள் கற்களிலேயே செதுக்கி வந்தனரென்றும் தெரிகிறது. ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணைப் பெற முடியாவிட்டால் தனது துயரினை ஊராருக்குத் தெரிவித்து அப்பெண்ணை மணக்க மடல் ஏறுதல் வழக்கம், அவ் வாலிபன் தனது கையில் தான் காதலிக்கும் பெண்ணின் உருவத்தை வைத்திருப்பான். இதிலிருந்து பண்டைக்காலத்தில் சித்திரக்கலையும் சிறப்படைந்திருந்த தென்பது விளங்கும். முகாம் அமைக்க துணியை உபயோகிப்பது புராதன தமிழ் வழக்கம். தமிழர் போரிடுவதில் ஆர்வ மிக்கவராக விருந்த போதிலும், அவர்கள் கலாபிவிருத்தியிலும், சௌகரியங்களைச் செய்து கொள்வதிலும் விருப்புடையவராக விளங்கினர்.”
6-வது பிரசங்கம்
ரசவாத ஆராய்ச்சி
தமது கடைசி பிரசங்கத்தில் சுவாமி விபுலாநந்தர் "ரசவாத ஆராய்ச்சி" என்பது பற்றிப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
"நான் இங்கே கொண்டுவந்திருக்கும் புத்தகங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்றவை. தமிழ்நாட்டிலே அச்சிடும் முறை ஏற்பட்டபோது இவை மட்டமான தாளில் அச்சிடப்பெற்றன. இவைகளை சிறு புஸ்தகக் கடைககளிலும், தெருக்கடைகளிலும் வாங்கலாம். கிராம வைத்தியர்களுக்கும் இவைகளே சாஸ்திர நூல்களாகும். நான் கொண்டுவந்துள்ள சில புத்தகங்களின் பெயர்களைச் சொல்லுகின்றேன். நந்தீஸ்வரர் நிகண்டு, திருவள்ளுவர் கற்பம் முன்னூறு, ரோமரிஷி நூல், பரிபாஷை திரட்டு, மச்சமுனி நூல், தன் வந்திரி பகவானின் நூல் முதலியன.
இந்தப் பெயர்கள் முக்கியமானவை, இவைகளின் பிரயோஜனம் என்ன வென்பதை ஆராய்ச்சி செய்வதால் பலனுண்டு. இந்தப் புத்தகங்கள் பார்வைக்கு நன்றாக வரா விட்டாலும், இவைகளில் சிலவற்றை பெரிய ஞானிகளே எழுதியிருக்கின்றனர். ஓலைச் சுவடிகளிலிருந்தே இவை அச்சிடப் பெற்றன.
‘கெமிஸ்டரி' என்ற ரசாயன சாஸ்திர வரலாற்றில் பல நிலைகள் உண்டு. இயற்கையின் மறை பொருள்களைப் பகிரங்கப்படுத்துவதை பண்டைக் காலத்து மக்கள் வெறுத்தனர். இதனாலேயே விஞ்ஞான சாஸ்திரத்தை ஆரம்பத்தில் ஜால வித்தையைப்போல் ஜனங்கள் கருதினர். அவ்வித ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களையும், சமூகத்தில் சேர்த்துக் கொள்ளவும் அருவருப்புக் கொண்டனர். புராதன விஞ்ஞான சாஸ்திரிகளான 'வாதி'களின் நூல்களில் சிற்சில உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. எந்த நாட்டிலும் இந்த ‘வாதி’கள் முறை ஒரே விதமானதாகும்.
நம் நாட்டிலே தான் விஞ்ஞான சாஸ்திரமும், கணித சாஸ்திரமும் தோன்றின. அராபிய தேசத்தின் மூலம் நம் நாட்டிலிருந்து அந்த சாஸ்திரங்கள் மேனாட்டிற்குச் சென்றன.
விஞ்ஞான சாஸ்திரத்தின் மத்திய நிலையே 'ரசவாத ஆராய்ச்சி' யாகும். இதனாலேயே இவை பிற்காலத்து புத்தகங்கள் என்று கூறிவிட முடியாது. கம்பர், சேக்கிழார் காலத்தில் ஜனங்கள் சாதாரணமாகப் பேசும் நடை இலக்கியச் செறிவோடிருக்குமென்று கூறிவிடவே முடியாது. அந்த ரசவாதிகளின் நூல்கள் பல விஷயங்களைப் பற்றிக் கூறுகின்றன.
அந்த ரசவாதிகள் மருந்துகள் செய்ததோடு இரும்பு செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கவும் முயன்றனர். மூப்பு, பிணி காய கற்பத்தால் மனிதர் பல நூற்றாண்டுகள் வாழலாம். சாதாரண உலோகங்களைப் பொன்னாக்க ரசத்தைக் கட்ட முயன்றனர்.
அவர்களது நோக்கம் மேலானதேயாகும். அவர்கள் தங்களது முயற்சிகளில் சித்தி பெற்றிருப்பார்களேயானால், மூப்பு, பிணி, திரை இவைகளால் மனித சமூகம் கட்டுப்பட வேண்டியதில்லை, பொன்னாசையால் விளையும் இன்னல்களுக்கும் இடமில்லாமற் போயிருக்கும். ரசவாத ஆராய்ச்சியின் பலனாகவே 'கெமிஸ்ட்ரி' (ரசாய்ன சாஸ்திரம்) என்பது தோன்றியது, வாத நூல்கள் அஷ்டாங்க யோகத்தைப்பற்றியும், ஆசைகளை நிறைவேற்றவல்ல மந்திரங்களையும், பேய் முதலியவற்றை ஒட்டவல்ல யந்திரங்களையும் பற்றி குறிப்பிடுகின்றன.
திருமந்திரம் என்பது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகும். அந்நூலை அருளிச்செய்த திருமூலர் ஒரு சித்தர். அவர் தம்மைப்பற்றிக் கூறுகையில் தாம் நந்தியினிடம் உபதேசம் பெற்ற எட்டுபேர்களில் ஒருவரென்று குறிப்பிடுகின்றார். திருவள்ளுவர் 'ஞானவெட்டியான் என்ற நூலிலும் ரசவாத ஆராய்ச்சிகளைக் காணலாம். இந்த திருவள்ளுவர் திருக்குறன் எழுதியவரல்ல. திருமூலர் யோக சூத்திரங்கள் எழுதிய பதஞ்சலி காலத்தவர்,"
திருமூலர் போன்ற பெரிய சித்தர்களைப் பின்பற்றியே இதர 'சித்தர்கள் தோன்றி குழப்பத்தை விளைவித்தனர். அவர்கள் தாங்கள் கூறுவதை மறைபொருளாகவே கூறிவந்தனர். இவர்கள் 15- வது நூற்றாண்டிலே வாழ்ந்தனர். உண்மைக் குறிக்கு வழிகாண விரும்பியவர்கள் இவர்களது தத்துவங்களைப் பாராட்டினர். இந்த ரசவாதிகள் எந்த வஸ்துவையும் சுத்தம் பண்ண சிறந்த முறையைக்கண்டு பிடித்தனர். பாதரசம், பொன், செம்பு, இரும்பு, துத்தநாகம், தகரம் இவைகளைப் பஸ்பமாக்கவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் 3 ஜெய நீர்களைக் கண்டுபிடித்திருந்தனர். ரசவாதிகள் தங்கத்தை திரவ பதார்த்தமாக்கவும், சில உலோகங்களை ஒன்றாக்கவும் வல்லவர்கள். இதற்கு வேர்கள், மூலிகைகள் இவைகளின் சாரையும் உபயோகித்தனர். இவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை குரு சிஷ்ய பரம்பரையாக வெளியிட்டு வந்தனர்.
நாம் தமிழில் விஞ்ஞான சாஸ்திரங்கள் எழுதவேண்டும்! விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் ஈடுபடவேண்டும். சென்னை சர்வகலாசாலையின் சார்பில் விஞ்ஞான சாஸ்திரங்களை மொழிபெயர்த்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனுசரிக்கும் முறை விபரீதமானதாகும். ஹைடிரோஜன் என்பதை ஆப்ஜனகம் என்று மொழிபெயர்க்கின்றனர். மொழிபெயர்ப்பு இதற்கு மேலும் மோசமாக விருக்கிறது. இவ்விதமெல்லாம் சர்வ கலாசாலையின் சார்பில் நடக்கிறது.
விஞ்ஞான சாஸ்திரங்களை மொழிபெயர்ப்பதில் சிறந்த விதிகளை அநுசரிக்க வேண்டும். எளிதில் ஜனங்கள் கையாளத்தக்கதும் பழக்கத்தில் சுலபமாகக் கூடியதுமான சொற்களால் மொழிபெயர்க்க வேண்டும். இவ்விஷயத்தில் பிரத்யேக தோரணையில் பலர் முயற்சி செய்து சித்தியடைந்துள்ளனர். தமிழ் மொழியில் விஞ்ஞான சம்பந்தமான சொற்கள் என்னென்ன வென்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது முதலில் செய்யவேண்டிய வேலையாகும். நான் குறிப்பிட்ட வாத நூல்கள் இவ்விஷயத்தில் மிக்க பயனுடையனவாகும். பாதி வேலை இந்த புத்தகங்களின் உதவியால் செய்து விடலாம் பெயர்கள் முதலியனவற்றை அப்படியே உயயோகிக்கலாம். தொழிலைக் குறிக்கும் வார்த்தைகளை தொழிலாகு பெயராக மொழிபெயர்க்க வேண்டும். ஞான நூல்களில் பல வார்த்தைகள் இருக்கின்றன. அவை கணித நூல், தர்க்கநூல் இவைகளின் மொழிபெயர்ப்புக்குப் பேருதவியாகும். இவ்வித வேலைக்கு பிரயாசை வேண்டும். தமிழ் மொழியை பல துறைகளில் உபயோகிக்கக் கூடுமென்பதில் திணையளவும் மிகையாகாது. (பலத்த கரகோஷம்)
தலைவர் தமது முடிவுரையில் சுவாமி விபுலானந்தர் செய்த அருமையான பிரசங்கங்களுக்கு வந்தனங் கூறியதுடன் விஞ்ஞான சாஸ்திர மொழிபெயர்ப்பு சம்பந்தமாக அவர் கூறிய யோசனைகள் மிகவும் பயனுடையன வென்று குறிப்பிட்டார்.
சென்னையில் இருந்து வெளிவந்த பிரசண்ட விகடன் 1936 ஏப்ரல் 1 இதழில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.
வெளி இணைப்புகள்: