Vipulananda Adigal

இசைத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்


- தேசிகன் -

ழத் தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் சேர்த்த வளம் குறித்துத் தனியாக பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழுக்கு, குறிப்பாக இசைத் தமிழுக்கு தனது "யாழ் நூல்' என்ற இணையற்ற படைப்பை அளித்து சேவை செய்த சுவாமி விபுலானந்தர் ஈழம் தந்த அரிய தமிழ் மணிகளில் ஒருவர். யாழ் நூல் தவிர மதங்க சூளாமணி, நடராஜ வடிவம் போன்ற அரிய நூல்களை எழுதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலவர் வரிசையில் தன் சுவடுகளைப் பதித்தவர். ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த உன்னதமான துறவிகளில் ஒருவர். ஆன்மிகத்தையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமகன்.

அவர் இலங்கை மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள காரைத்தீவில் சாமித்தம்பி-கண்ணம்மை தம்பதிக்கு 1892-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிறந்தார். அவருக்கு தமிழ்க் கடவுள் முருகனின் திருநாமங்களில் ஒன்றான மயில்வாகனன் என்ற பெயரிட்டு வளர்த்தனர்.அவர் தொடக்கக் கல்வியை குஞ்சுத்தம்பி என்ற ஆசிரியரிடமும், தமிழையும் வடமொழியையும் புலோலி வைத்தியலிங்கத் தேசிகரிடமும் கற்றார். குறிப்பாக நன்னூல், சூளாமணி நிகண்டு உள்ளிட்டவற்றையும் குறளையும் ஆழ்ந்து கற்றார்.

அவரது ஆழ்ந்த ஆன்மிக உணர்வுக்கான அடித்தளம் அவர் மாமன்களான சிவகுருநாதப் பிள்ளை மற்றும் வரதராசப் பிள்ளை ஆகியோரால் இடப்பட்டது. இவர்களிடம் கந்தபுராணம் மற்றும் பாகவதம் போன்றவற்றை மிக இளம் வயதிலேயே மயில்வாகனன் கற்றார்.

கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் வென்ற அவர், பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று அங்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் கல்வியும் கற்று அதில் பட்டயப்படிப்பு ஒன்றையும் முடித்தார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் படிப்பான இளம் அறிவியல் பட்டப் படிப்பிலும் வென்றார். 28-வது வயதிலேயே கல்லூரி ஒன்றின் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது.

கொழும்புக்கு அவர் படிக்க வந்த காலகட்டத்திலேயே கைலாச பிள்ளை, கந்தையா பிள்ளை உள்ளிட்ட சில முக்கியத் தமிழ் அறிஞர்களிடம் நேரடியாகத் தமிழ் கற்றார். அதனால் அவர் ஆழமான தமிழறிவைப் பெற்றார். மதுரையின் புகழ் பெற்ற தமிழ்ச் சங்கத்தின் வித்துவான் தேர்விலும் வென்றார்.

தமிழோடு ஆன்மிகமும் அவரை ஆட்கொண்டகாலம் இதுதான். அதற்கு மூல காரணம் கொழும்பிலிருந்த ராமகிருஷ்ண மடமும் இவரிடம் இயல்பாகவே இருந்த பாமரர்க்குத் தொண்டு செய்யும் மனப்பான்மையும்தான்.

1922-ம் ஆண்டு அவர் சென்னைக்கு வந்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். மடத்தின் தமிழ் பத்திரிகையான ராமகிருஷ்ண விஜயம் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையான வேதாந்தகேசரி ஆகியவற்றின் ஆசிரியரானார்.

1924-ம் ஆண்டு இவரது வாழ்வில் முக்கியத் திருப்பம் நேர்ந்தது. மயில்வாகனனாக இருந்த இவருக்கு சிவானந்த சுவாமிகள் என்ற துறவி, காவி உடை அளித்து சுவாமி விபுலானந்தராக்கி ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவராக்கினார்.

1925-ம் ஆண்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய விபுலானந்தர் தன் தொண்டு வாழ்வைத் தொடர்ந்தார். 1931-ல் மீண்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் அன்று புகழ் பெற்றுவிளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். பல்கலைக்கழகத்துக்கு வந்த புதிதில் அவரை ஒரு கூட்டத்தில் பேச வைத்தனர். பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகையில் விபுலானந்தஜி பேசுவார் என்று போட்டிருப்பதைப் பார்த்து யாரோ வடநாட்டு சன்யாசி உரை நிகழ்த்துகிறார் என்று நினைத்தவர்கள் கம்பீரமான தீந்தமிழில் விபுலானந்தரின் முழக்கத்தைக் கேட்டு வியந்தனர்.

இமயமலை யாத்திரை, பிரபுத்த பாரதம் என்ற வேதாந்த இதழின் ஆசிரியர் என இவரது ஆன்மிகப் பணிகளும் ஓசையின்றி நடந்தது வந்தன. விவேகானந்த ஞானதீபம் உள்ளிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் இவரது ஆன்மிகப் பணியில் அடங்கும்.

இந்தியாவின் பாரம்பரியத்திலும் சிறப்புகளிலும் மனத்தைப் பறிகொடுத்த விபுலானந்தர், மகாகவி பாரதியிடத்திலும் மனத்தைப் பறி கொடுத்தார். மூத்த தமிழ் அறிஞர்கள் பாரதியைக் கண்டு கொள்ளாமலிருந்த அந்தக் காலத்தில் பாரதியின் படைப்புகளில் ஈடுபட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி ஆய்வு வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அடிகளார்.

தமிழில் அறிவியல் இல்லை என்ற அவச் சொல்லைத் தீர்க்கும் முயற்சியில் 1934-ல் உருவான "சொல்லாக்கக் கழக'த்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர் அடிகள்.

இசைத் தமிழ் குறித்து கிட்டத்தட்ட தனது 14 ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக மிக முக்கிய இசைத் தமிழ் நூலான யாழ்நூலை விபுலானந்தர் படைத்தார்.

சிலப்பதிகாரத்தில் உள்ள ஏராளமான அரிய இசைச் செய்திகள் குறித்து போதிய அளவுக்கு விரிவான ஆழமான விளக்கங்கள் இல்லாதிருந்த காலகட்டத்தில் சிலம்பின் இசை நுட்பங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய பெருமை விபுலானந்தரின் யாழ்நூலுக்கு உண்டு. இதன் மூலம் தமிழ் இசையின் தொன்மையையும் ஆழத்தையும் அவர் நிறுவினார். சிலம்பிலுள்ள இசைத் தகவல்களின் ஆழத்தில் முக்குளிக்கப் போதிய இசைப் புலமை வேண்டும். அதன் பொருட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்று பணிபுரிந்த இசை மேதை பொன்னையாப் பிள்ளை உள்ளிட்ட சிலரிடம் இசை இலக்கண நுட்பங்களையெல்லாம் அறிந்தார் விபுலானந்தர்.

பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என 7 இயல்களால் ஆனது இந்த நூல். நாடக இலக்கணங்களை வகுத்துக் கூறும் மதங்க சூளாமணி, விபுலானந்தரின் மற்றோர் அரியபடைப்பு. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 23-வது ஆண்டு விழாவின் போது "ஷேக்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்' என்ற தலைப்பில் அங்கு விபுலானந்தர் உரை நிகழ்த்தினார். இந்த உரை விழாவுக்கு வந்திருந்த உ.வே.சாமிநாதய்யரால் மிகவும் பாராட்டப்பட்டது. பின்னாளில் இந்த உரையையே மதங்க சூளாமணி என 3 இயல்களால் ஆன நூலாக விபுலானந்தர் படைத்தார்.

இவரது புகழ் பெற்ற "யாழ் நூல்' கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் நாட்டின் திருக்கொள்ளாம்புதூர் கோவிலில் 1947-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அரங்கேறியது. இந்த மகத்தான சாதனையைச் செய்து முடித்தபின் ஜூலை மாதமே விபுலானந்தர் காலமானார். வெறும் 55 ஆண்டுகளே வாழ்ந்து தமிழுக்கு இணையற்ற நூலை உருவாக்கிய அவர் பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

நன்றி: தமிழ்மணி (தினமணி) - 8 பெப்ரவரி 2009
எழுதியவர்: தேசிகன்