Vipulananda Adigal

திருவருள் பெற்ற பெரும்பாணர் மூவர்


- சுவாமி விபுலாநந்தர் -

நிலவுலகத்தினை மூடியிருந்த இருட்படாம் அகலக் குணதிசை யுதித்த இளஞாயிறு போன்று, மாந்தாது அகவிருளிரியச் சீகாழி பதியிற்றோன்றிய கவுணியர் குலதிலகமாகிய ஆளுடைய பிள்ளையார் தமிழ் நாட்டினை அணி செய்த காலத்திலே, இயலிசை நாடக முத்தமிழ்க் கலைகள் மீட்டும் வளர்ச்சி யெய்துவவாயின.

முத்தமிழ் விரகராகிய ஞானசம்பந்தப் பிள்ளையாரது திருவடிகளைத் தொழுதுய்யும் பொருட்டுத் திருவெருக்கத்தம்புலியூரில் வாழ்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவரது மனைவியாராகிய மதங்க சூளாமணியாரோடுடன் வந்தாரென்பது,

“திருநீல கண்டத்துப்
பெரும்பாணர் தெள்ளமுதின்
வருநீர்மை யிசைப்பாட்டு
மதங்கசூளா மணியார்
ஒருநீர்மை யுடனுடைய
பிள்ளையார் கழல்வணங்கத்
தருநீர்மை யாழ்கொண்டு
சண்பையிலே வந்தணைந்தார்"

என்னுஞ் சேக்கிழார் சுவாமிகள் திருவாக்கானறியக் கிடக்கின்றது.

பெரும் பாணரது வரவினை யறிந்த பிள்ளையார் அவரை யெதிர்கொள்ளப் பாணரும் பிள்ளையாரது துணைப்பதந் தொழுதெழுந்து, ஆர்வத்தோடுமேத்தி மெய்ம் மொழிகளாற் றுதித்து, நல்வினை கூட்டத் தாமெய்திய பெருவாழ்வினை யெண்ணியக மகிழ்ந்தார். பிள்ளையார் அவரைக் கோயிற்புற மொன்றிற் கொடுபோந்து கும்பிடுவித்து இறைவற்கு யாழ்த்தொண்டு செய்குதிர் எனப் பணிக்க அவரும்,

"தானநிலைக் கோல் வடித்துப்
படிமுறைமைத் தகுதியினால்
ஆனவிசை யாராய்வுற்
றங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியா
ருடன்பாடி வாசிக்க
ஞானபோனகர் மகிழ்ந்தார்
நான்மறையோ ரதிசயித்தார்"

"காழியார் தவப்பயனாங்
கவுணியர்தந் தோன்றலார்
ஆழிவிட முண்டவர் தமடி
போற்றும் பதிகவிசை
யாழின் முறைமையினிட்டே
யெவ்வுயிரு மகிழ்வித்தார்
ஏழிசையும் பணிகொண்ட
நீலகண்ட யாழ்ப்பாணர்"

அதன் பின்னர் அன்றுபோ லென்றும் அகலா நண்பினராகிய பெரும்பாணர் பிள்ளையாரோடுடன் சென்று திருப்பதிக விசையை யாழிலிட்டுப் பாடிச் சேவித்து வருவாராயினர். பெரும்பாணரது திருத்தாயார் பிறந்தவிடமாகிய தருமபுரத்திற்குப் பிள்ளையாரும் பாணருஞ் சென்றிருந்த காலத்திலே பாணரது சுற்றத்தார் அவரை நோக்கித் திருப்பதிகவிசையை நீர்யாழிலிட்டியற்றுமதனாலே அகிலமெல்லாம் அவ்விசை நிகழ்வதாயிற்று எனக் கூறினார். அது கேட்ட பாணர் உள நடுங்கிப் பிள்ளையாரை நோக்கி யாழின் கணடங்காத திருப்பதிகமொன்றினைத் தேவரீர் கட்டளை யிட்டருளினால், திருப்பதிகவிசை யாழின்கண் அடங்கா அளவின தென்பதை இவரும் உலகத்தாரும் அறிந்துய்வாரென, விண்ணப்பித்துத் திரு முன்னிலையினின்றார். 'மாதர் மடப்பிடி" யென்னும் யாழ் முரித்திருப்பதிகத்தினைப் பிள்ளையார் அருளிச் செய்ய, அது யாழின் கண் அடங்காதாயிற்று.

உண்மையை யுணர்ந்த பெரும்பாணர் மெய்ப் பயமும் பரிவு முற்றுப் பிள்ளையாரது கழலிணையில் வீழ்ந்தெழுந்து; "இக்கருவியினைத் தொடுதலினன்றோ திருப்பதிகவிசையை யாழிலேற்பனென யான் செப்பியது" எனக்கூறி அவ்யாழினை உடைத்து விடுதற்கெண்ணி யோங்கினார். பிள்ளையார் தடுத்தருளி, “ஐயரே! இக்கருவியினைத் தாருமென வாங்கிக்கொண்டு

''சிந்தையாலளவு படாவிசைப் பெருமை
செயலளவி லெய்து மோநீர்
இந்தயாழினைக் கொண்டே இறைவர்
திருப்பதிக விசை யிதனிலெய்த
வந்தவாறே பாடி வாசிப்பீசெனக்
கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயாழினைத் தொழுதுகைக்கொண்டு
பெரும்பாணர் தலைமேற் கொண்டார்."

பிள்ளையார் திருத்சாத்த மங்கையில் வந்திருருந்த காலத்திலே முத்தீவளர்க்கும் இரு பிறப்பாளராகிய திருநீல நக்க நாயனாரை நோக்கி, நீலகண்டப் பெரும் பாணர்க்கு இன்று தங்க வோரிடங் கொடுத்தருளுவீரென்ன, அத்திருமறை யோரும் நடுமனைவேதியின் பாங்கரிடங் கொடுத்தனர் வேதியிலறாத செந்தீவலஞ் சுழித்தெழுந்து ஒளிவீசியது. அது கண்ட நீல நக்கர் மகிழ்வுறச் சகோட யாழ்த்தலைவராகிய பெரும்பாணர் விறலியாருடன் பள்ளி கொண்டார். திருநீலகண்டப் பெரும்பாணர் ஒருநாள் மதுரைப் பதியையடைந்து யாழ் வாசித்தாராக, அவரது யாழிசையைச் செவிமடுத்து திருவுள மகிழ்ந்த ஆலவாயிலவிர் சடைக் கடவுள், யாழ் தரையிற்படில் வீக்கழியுமாதலிற் பாணர்க்குப் பொற் பலகையிடுமினென, அடியாரைப் பணித்தருளினான். அடியார் இறைபணி நிற்கப், பாணரும் பொற்பலகையேறி, உமையம்மையை யொருபாகத்திற் கொண்ட இறைவனது வண்மையை உலகெலாமறியும் படி ஏத்தினார்.

"நக்க மேகுவர் நாடுமோர் ஊருமே
நாதன் மேனியின் மாகண மூருமே
தக்க பூமனைச் சுற்றக் கருளொடே
தார முய்த்தது பாணற் கருளொடே"

என்னும் திருவிய மகத்தினுள்ளே திருநீலகண்டப் பெரும்பாணர்க் கருளிய திறத்தினைப் பிள்ளையார் போற்றித் துதித்தார். (திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் அஎய) திருப்பதிகவிசையை யாழிலிட்டுப் பாடிய பெரும் பேற்றினைப் பெற்ற திருநீலகண்டப் பெரும்பாணர் மனைவியாரோடும் திருநல்லூர்ப் பெரு மணத்திலே இறைவனது திருவடியைச் சார்ந்தார். பிள்ளையார் உலகில் வதிந்த காலம் கிறிஸ்தாப்தம் 650 வரையிலாமென ஆராய்ச்சியாளர் கூறுவர். திருநாவுக்கரசு சுவாமிகளை துன்புறுத்திப் பின்னர்ச் சைவனாகிய மஹேந்திர வர்மன் என்னும் பல்லவ மன்னன் ஏழாம் நூற்றாண்டின் முற்பாகத்திலிருந்தவன். இவன் பலகலை விநோதன். குடுமியா மலைக் கல்வெட்டு இவனாற் பொறிக்கப்பட்டதென எண்ணுதற் கிடமுண்டு. இக்கல்வெட்டு இசைமா புணர்த்துவது. சுத்த ரிஷபம், பிரதி மத்திமம், சுத்த தைவதம், என இக்காலத்து வழங்கும் மூன்று ஸ்வர ஸ்தானங்களையொழித்து எஞ்சிய ஒன்பது ஸ்வரஸ்தானங்களைக் கொண்டு நடப்பது. அந்தரகாந்தாரத்தை அந்தரம் எனவும் காகலி நிஷாதத்தைக் காகலியெனவும் பெயரிட்டு அவற்றினை முறையே அ. க. என்னும் எழுத்துக்களாற் குறியீடு செய்திருக்கும் முறைமை இக்கல்வெட்டின்கண் நோக்கற்பாலது.

ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடையவாசும் இயற்றிய தேவாரத் திருப்பதிகங்களும் குடுமியா மலைக் கல்வெட்டும் ஏழாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டில் வழங்கிய இசை மரபினைத் தெரிவிப்பன.

ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பாகத்திலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்திலே பண்டைத் தமிழிசை மரபு வழக்கிலிருந்தது. அக்காலத்கிலே யிருந்த பத்திரனார் என்னும் பாணர்,

"மதி மலி புரிசை மாடக் கூடற்
பதி மிசை நிலவு பானிற வரிச்சிற
கன்னம் பயில் பொழிலாலவாயின்
மன்னிய சிவன் யான் மொழி தருமாற்றம்
பருவக்கொண் மூப்படிபெனப் பாவலர்க்
குரிமையினுரிமையி னுதவியொழி திகழ்
குருமாமதிபுரை குலவியருடைக் கீழ்ச்
செருமாவுகைக்கும் சேரலன் காண்க
பண் பாலியாழ் பயில் பானபத்திரன்
தன்போலென் பாலன் பன்றன் பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண் பொருள் கொடுத்து வாவிடுப் பதுவே"

என இறைவனருளிய திருமுகப் பாசுரத்தைப் பெற்று, அதனைக் கொண்டு சென்று மலைநாடெய்திக் கொடுங்கோளூரிலே சேரமான் பெருமானாபனாரையடைந்து பெரும் பொருள் பெற்றார்.

'பண்பு பெருகும் பெருமாளும் பாணனார்
பத்திரனார் பின்
கண்கள் பொழிந்த காதனீர் வழியக்
கையாற்றொழு தேத்தி
நண்பு சிறக்குமவர் தம்மை நகரின்
புறத்து விடைகொண்டு
தின்பொற் புரிசைத் திரு மதுரை
புக்கார் திருந்து மிசைப் பாணர்''

சைவப் பெரும்பாணரிருவாது வரலாற்றினைக் கூறினாம். அவர் காலத்தினையணுகிய காலத்தினராகிய வைஷ்ணவப் பெரும்பாணரொருவரது வரலாறு சிந்தையை யுருக்கும் நீர்மையதாதலின் அதனையுஞ் சுருக்கமாகக் கூறுதும்.

சோழவள நாட்டிலே உறையூரிலே தோன்றிய திருப்பாணாழ்வார் திருவரங்கத்தம்மானுக்குப் பாடற்றிருத் தொண்டு செய்ய உத்தேசித்துப் புறப்பட்டுத் தாம் தாழ்ந்த குலத்தவராதலின், அரங்கத் தெல்லையுட் புகாது தென் திருக்காவேரியின் தென் திசையை யடைந்து திருவமர் மார்பனைத் திக்குநோக்கித் தொழுது, கண்டமுங் கருவியுமொக்க இன்னிசைக் கீதம்பாடினார். இவ்வண்ணம் நிகழ்ந்து வருநாழி லொருநாள், வைகறைப் பொழுதிலே, திருவரங்கச் செல்வனுக்கு நீர் கொணர்தற்குப் பொற்குடத்தை யெடுத்துக் கொண்டு பொன்னித்துறையை யடைந்த லோக சாரங்கர் என்னும் அந்தணர் இவரது நீர்மையை யறியாதாராய் "எட்டச்செல்" என்று பல முறை பணித்தார். ஆழ்வார் இவ்வுலகக் தொடர்பை மறந்திருந்ததினால் அம்மொழி செவியுறாமல் வாளா நின்றிட்டார். ஆங்கு நின்ற வேதியர் சிலர் இவர்மேற் பல கற்களை யெறிய அதனாலுஞ் சலியாது பரவசப் பட்டிருந்தார். அந்தணர் அஞ்சியகன்றனர். திருவரங்கேசன் லோகசாபங்க முனிவருக்குக் கனவிலே தோன்றி "நமக்கு நல்லன்பராகிய பாண்பெருமாளை இழிவாக நினையாமல் நீர் சென்று தோள்களில் எழுந்தருளப் பண்ணிவாரும்'' என்று நியமிக்க அவரும் வைகறையில் எழுந்து சென்று பாணரது திருவடிகளைத் தொழுது திருவரங்கச் செல்வரது கட்டளையைத் தெரிவித்தார். பாணர் முதலிலே மறுத்து நின்றாரேனும் ஆண்டவனுடைய கட்டளையை மறுத்தற் கஞ்சி அந்த சயனனுக்குக் தம்மை யர்ப்பணஞ் செய்து நின்றார். பின்னர் லோக சாரங்கர் தோளிற் கொண்டு சென்றுவிடத் திருப்பாணாழ்வார் அழகிய மணவாளனது திருமேனியழகில் ஈடுபட்டு "அமலனாதி பிரான்" என்னும் பிரபந்தத்தை யருளிச் செய்து, அண்டர்கோன் அணியரங்கன் என்ன முதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' எனக் கூறி மறைந்தருளினார். முன்னாளிலேயிருந்த பாணர் முடியுடை வேந்தரையும் குறுநில மன்னரையும் பாடிப் பொருள் பெற்றனர். பின்னாளிலிருந்த திருநீலகண்டப் பெரும்பாணர், பாணபத்திரனார், திருப்பாணாழ்வராகிய மூவரும் ஆண்டவனைப் பாடியருள் பெற்றனர்.

பர்மாவில் இருந்து வெளிவந்த தனவணிகன் 1935 பொங்கல் மலரில் விபுலாநந்த அடிகளார் எழுதிய கட்டுரை.