Vipulananda Adigal

சங்கத் தமிழ் விற்பன்னர் விபுலானந்த அடிகள்

 

யற் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்பன முத்தமிழ் எனப்படும், மக்களுக்கு எண்ணத்தை ஊட்டுவது இயற் தமிழ்; உணர்ச்சியை ஊட்டுவது இசைத் தமிழ்; நல்வழி காட்டுவது நாடகத் தமிழ்.

இவ்வாறு நாட்டின் நலனையும் மக்களின் ஒழுக்கத்தையும் கருதியே தமிழுக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் தமிழை மூவகைப்படுத்தினர். அத்தகைய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால், முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் நம் விபுலானந்த அடிகளார்.

இலங்கையில் தோன்றிய பல தமிழறிஞர்கள், தமிழகத்திற்குச் சென்று, சைவ மடங்களிற் தங்கி, நூலறிவைத் துறைபோகப் பெற்றனர். மேலும் அவர்கள் பல நூல்களை இயற்றியும் அச்சிட்டும் வெளியிட்டனர். அவர்களில் சிவஞான சித்தியார்க்கு உரை எழுதிய ஞானப்பிரகாசர், தமிழ் நூல்களை பிழையறப்பதிப்பித்த ஆறுமுக நாவலர்: தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய முதலில் வழிகாட்டிய சபாபதி நாவலர்; தமிழ் அகராதிக் கலைப்புலவர் கதிரவேற்பிள்ளை முதலியோர் சிறந்து விளங்கினர்.

இவர்கள் அனைவரையும் விட ஒரு படி மேலே செல்கிறார் யாழ். நூல் என்னும் அரிய இசைத் தமிழ் நூலையும், மதங்க சூளாமணி முதலிய நாடகத் தமிழ் நூலையும், மேலும் பல நூற்றுக்கணக்கான சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், கவிதைகளையும் தமிழ் உலகிற்குத் தந்த சுவாமி விபுலானந்தர்.

விபுலானந்த அடிகள் 19-07-1947ல் இவ்வுலகை விட்டு மறைந்தார். 1948ல் வெளிவந்த ஈழ மணிப் பத்திரிகையில் கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு அடிகளாரை நினைவுகூருகிறார்.

 

“சங்கத் தமிழ் கேட்க

வேண்டுமானால் இருவரிடம்

கேட்க வேண்டும். ஒருவர்

பெரும் பேராசிரியர்

சாமிநாதையர். மற்றொருவர்

விபுலானந்தர்’

 

அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்’ சாமிநாதைய மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித்தந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி 1893ல் அமெரிக்காவில் வாழ்ந்த தலை சிறந்த தத்துவஞானி ஜே.எச்.ரைட் என்பவர் தெரிவித்த கருத்தை இங்கு கூற விரும்புகிறேன்,

 

“அமெரிக்க நாட்டின்

நல்லறிஞர்கள் அனைவருமே

ஒன்று திரண்டு நின்றாலும்,

கல்வியில் சுவாமி

விவேகானந்தருக்கு ஒப்பாக

மாட்டார்கள்”

 

என அன்று அவர் புகழாரம் சூட்டினார்.

இராமகிருஷ்ண சங்கம் பல ஆன்மீக ஞானிகளை உலகிற்கு அளித்திருந்தாலும், வீரத் துறவி விவேகானந்தருக்கும் தமிழசைத் துறவி விபுலானந்தருக்கும் ஒப்பாரும் மிக்காரும் இலர் என்றே கூற வேண்டும்.

“சிலப்பதிகாரம் வெளிவந்த அந்த ஆண்டிலே யானும் பிறந்ததினாலே பள்ளியிற் படிக்குங் காலத்திலே, மூத்தோர் கையிலே அந்நூற் பிரதியிருக்கக் காண்பதும், என் கையினாலே அதனைத் திண்டுவதும் எனக்குப் பேருவைகையினைத் தரும் செயல்களாக இருந்தன” என்று அடிகளே கூறுகிறார். (யாழ் நூல் ப.29)

“அஃதன்றியும், ஈழ நாட்டின் குணபாலிலே, என் முன்னோர்க்கு உறைவிடமாகிய காரேறு தீவிலே, கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் வழிவந்த மன்னர்களாலே நிறுவப்பட்ட பபழமையான கண்ணகியார் கோயில் ஒன்று உள்ளது. அதன் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் மீதுள்ள ஆர்வம் பெருகியது”, என்கிறார் அடிகள் (யாழ். நூல் ப.29)

தமிழகத்தில் புகுந்த பிற மொழிகளின் இசை ஆதிக்கத்தால் தமிழ் இசை தேய்பிறையானது; யாழ்க் கருவியும் தமிழகத்தில் இருந்து மறைந்து போயிற்று.

தமிழிசைக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை விபுலானந்த அடிகள் மிகவும் வேதனையோடு, தமக்கே உரிய இனிய தமிழ் நடையில் யாழ். நூலின் பின்வருமாறு விளக்குகிறார்:-

“முன்னாளிலே பாணன் கையிலும் பாடினி கையிலும் இருந்த யாழ்க் கருவியானது, இளங்கோவடிகள் காலத்தில் இசையாசிரியன் கையிலும் நாடக மகள் கையிலும் போய்ச் சேர்ந்து விட்டது.

அதற்கேற்ப அக்கருவியும், ‘சித்திரப் படத்துட் புக்குச் செழுங்கோட்டின், மலர் புனைந்து, மைத்தடங்கண் மணமகளிர் கோலம் போல் வனப்பெய்தி’ விளங்கியது.

ஆளுடைய பிள்ளையார் காலத்தில் தெய்வம் ஈந்த பொற்பலகை மீதேறி அன்பருள்ளத்தை உருக்கிய அருட் கவியாயிற்று,

கொங்குவேளும் திருத்தக்க தேவரும் நூலெழுதிய காலத்தில், அரசிளங் குமரிகள் கையேறி அவர் விரும்பிய காதலரை அவருக்கு அளிக்குங் கருவியாயிற்று பெருமை பொருந்திய யாழிசைக் கருவி மறைந்ததோடு, அதன் வழி எழுந்த பண் மரபும் மறைந்து போயிற்று. யாழ் வாசித்த பாணனுந் தன் தொழிலை இழந்து விட்டான்”, என மனம் மிக வருந்துகிறார் அடிகள். (யாழ் நூல்- ப. 38)

எனவே, தமிழ் இலக்கியத்தைப் பத்து ஆண்டுகளுக்கு மேலாக துறைபோக ஆய்ந்து அதில் பொதிந்திருந்த கருத்துக்களின் அடிப்படையில், பண்டைய யாழ். பற்றிய விபரங்களை அடிகளே அரும்பாடு பட்டுத் தொகுத்தார்.

விபுலானந்த அடிகளின் பெரு முயற்சியால் யாழ். மீண்டும் தமிழரின் நினைவுக்கு வந்தது.

மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று, இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ் சங்கப் பண்டிதர் என்னும் பெருமையையும் பெற்றார், 1919ல் தனது சொந்த முயற்சியில் கற்று, இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி. தேர்விலும் சித்தியடைந்தார்.

1924ல் சென்னை சென்ற மயில்வாகனனார், இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து பிரபோதசைதன்யர் என்னும் பிரமச்சரிய நாமம் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பெளர்ணமியில் துறவறம் மேற்கொண்டு சுவாமி விபுலானந்தர் என்னும் பெயர் பெற்றார்.

1925ல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர், மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பாரிய கல்வித் தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைதீஸ்வர வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண ‘சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார்.

1931ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1943ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார்.

விபுலானந்த அடிகளார் மனிதாபிமானம் மிக்கவர், ஆதித் தமிழ்க் குடியின் அறவழியில் வந்தவர். பாதியில் முளைத்தெழுந்த சாதிக் கொடுமை தனைச் சாடித்தகர்த்தெறிந்த சாதனைத் தமிழன் அவர், அன்னார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில், ஒடுக்கப்பட்ட ஆதி திராவிடர் வாழ்ந்த திருவேட்களம் என்னும் சேரிக்குச் சென்று பாலர் படிக்கப் பள்ளிகள் அமைத்தார். முதியோர் கல்விக் கூடங்களும் ஏற்படுத்தினார். இதை அறிந்த உயர் சாதிப் பார்ப்பன்னர்கள் சுவாமி மீது ஆத்திரம் கொண்டனர். குடிப்பதற்குக் கூட நன்னீர் தர மறுத்தனர். இதனால் அடிகள் பலகாலம் உவர் நீரையே குடித்து வாழ்ந்தார்.

அடிகளாரின் நீண்ட நாளைய இசை ஆராய்ச்சிப் பணி 1947ல் ‘யாழ் நூல்’ என உருப்பெற்றது. கரந்தைத் தமிழச் சங்கத்தின் ஆதரவில் திருக்கொள்ளும் புதூர் ஆலயத்தில் 20-06-1947, 21-06-1947 ஆகிய இரு தினங்களிலும் யாழ் நூல் அரங்கேற்ற விழா நடந்தேறியது.

விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமாகும்.

இறைவனின் திருப்பாதங்களில் சூட்டப்படவேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகிறார் அடிகள்:

 

“வெள்ளை நிற மல்லிகையோ

வெறெந்த மாமலரோ

வள்ளல் அடியினைக்கு வாய்ந்தமலர்

எதுவோ?

வெள்ளை நிறப்பூவம் அல்ல

வெறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார்

வேண்டுவது!”

அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது.

 
 
நன்றி: தினகரன் வாரமஞ்சரி 27 மார்ச் 2010


எழுதியவர்: சுப்பிரமணியம் சிவலிங்கம்