உ
கணபதி துணை
தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்
சைவ வினாவிடை
1. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?
சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும்
ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள்
செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள்
இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம்
விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். [சைலம்=சிலையாலாகியது]
2. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும்
வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?
மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே
தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல
வெளிப்படாது நிற்பர்.
3. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?
பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் இருவகைப்படும்.
4. பரார்த்த லிங்கமாவது யாது?
சிவபெருமான் சங்கார காலம் வரையுஞ் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு
அநுக்கிரக்கப் பெறும் இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும்.
சாந்நித்யம்=அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல், தாவரம் எனினும், திரம் எனினும்,
நிலையியற் பொருள் எனினும் பொருந்தும்.
5. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?
சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என
ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கமாவது தானே தோன்றியது. காண லிங்கமாவது
விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிக லிங்கமாவது
விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கமாவது இருடிகளாற்
றாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினாற் றாபிக்கப்பட்டதும் அது.
மானுடலிங்கமாவது மனிதராற் றாபிக்கப்பட்டது.
6. இவ்வைவகை யிலிங்கங்களும் ஏற்றக்குறைவு உடையனவா?
ஆம்; மானுட லிங்கத்தின் உயர்ந்தது ஆரிட லிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிக லிங்கம்;
அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்பு லிங்கம்.
7. பரார்த்த லிங்கப் பிரதிட்டை, பரார்த்த பூஜை, உற்சவம்
முதலியவை செய்தற்கு அதிகாரிகள் யாவர்?
ஆதிசைவர்களுக்குள்ளே, சமயதீ?க்ஷ, விசேஷதீ?க்ஷ, நிருவாணதீ?க்ஷ, ஆசாரியாபி?க்ஷகம்
என்னும் நான்கும் பெற்றவர்களாய்ச் சைவாகமங்களிலே மகாபாண்டித்திய முடையவர்களாய்
உள்ளவர்கள்.
8. திருக்கோயிலுள் ளிருக்குஞ் சிவலிங்கம் முதலிய திருமேனிகள்
எல்லாரலுமே வழிபடற் பாலானவா?
ஆம்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் மார்க்கத்தாராலும் வழிபடற்
பாலனவேயாம்; ஆயினும், அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும்; படவே,
அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.
9. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள்
எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள்
செய்வர்?
சரியையாளர்கள் பகுத்தறித லில்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு
வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வர்.
10. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்?
அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க
முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவர்கள்;
அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினிபோல, அவ்வம்
மந்திரங்களினாலும் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது
தோன்றி நின்று, அருள் செய்வர்.
11. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்?
அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
யோகிகள், யோகிகளுடைய இருதய மெங்கும் இருக்குஞ் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும்
இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்;
அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம்
மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது
தோன்றி நின்று அருள் செய்வர்.
12. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்/
அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு
மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த
தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக், கருணை மிகுதியினால் அவ்வன்பே தாமாகி,
எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.
13. சிவபெருமானுடைய திருவுருவஞ் சிவசக்தி வடிவம் என்று முன்
செல்லப்பட்ட தன்றோ: இங்கே அவர் திருவுருவம் மந்திர வடிவம் என்றது என்னை?
சிவபெருமானுக்கு வாச்சிய மந்திரமாகிய சிவசத்தியே உண்மை வடிவம்; அச்சிவசத்தி,
கரியினிடத்தே அக்கினி போல வாசக மந்திரத்தினிடத்தே நின்று சாதகருக்குப் பயன்
கொடுக்கும். ஆதலினாலே, சிவபெருமானுக்குச், சிவசத்தியினால், வாசக மந்திரத்தோடு
சம்பந்தம் உண்டு. அச்சம்பந்தம் பற்றி வாசக மந்திரஞ் சிவபெருமானுக்கு உபசார
வடிவமாம்.
14. மந்திரநியாசம் என்றது என்ன?
வாச்சிய மந்திரங்களாகிய சிவசக்தி பேதங்களை உள்ளத்தில் சிந்தித்து, அவைகளை
அறிவிக்கும் வாசக மந்திரங்களை உபசரித்துச், சிவபெருமானுக்கு உபசார வடிவத்தை
அம்மந்திரங்களினாலே சிர முதலாக அமைத்தலாம். [நியசித்தல்=வைத்தல், பதித்தல்]
15. இட்டலிங்கமாவது யாது?
ஆசாரியர் விஷேதீ?க்ஷயைப் பண்ணி, சீடனைப் பார்த்து, "நீ உள்ளளவுங் கைவிடாது இவரை
நாடோறும் பூசி" என்று அநுமதி செய்து, "அடியேன் இச்சரீரம் உள்ளவரையுஞ் சிவபூசை
செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளேன்" என்று பிரதிஞ்ஞை செய்வித்துக்கொண்டு கொடுக்க, அவன்
வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம். இது ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் எனவும்
பெயர் பெறும்.
16. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?
வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், லோகஜ லிங்கம், சைல லிங்கம், க்ஷணிக
லிங்கம், எனப் பலவகைப்படும்.
17. இட்டலிங்கம் பூசைக்கு அதிகாரிகள் யாவர்?
பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் அநுலோமர் அறுவருமாகிய பத்துச் சாதியாருள்ளும்,
அங்ககீன ரல்லாதவர்கள் இட்டலிங்க பூசைக்கு அதிகாரிகள்; இவர்களுள்ளும்,
பிணியில்லாதவராய், இடம் பொருளேவல்கள் உடையவராய்ச், சிவபூசா விதி, பிராயச்சித்த
விதி, மார்கழி மாதத்துக் கிருதாபி?க்ஷகம் முதலாகப் பன்னிரண்டு மாதமுஞ் செய்யப்படும்
மாதபூசாவிதி, சாம்பவற்சரிகப் பிராயச் சித்தமாகச் சாத்தப்படும் பவித்தர விதி
முதலியவைகளை நன்றாக அறிந்தவராய், அறிந்தபடியே அநுட்டிக்க வல்லவராய் உள்ளவர்
மாத்திரமே, வாண முதலிய சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்டு பூசை பண்ணலாம்.
மற்றவரெல்லாரும் க்ஷணிக லிங்க பூசையே பண்ணக் கடவர். அவர் குளிக்கப் புகுந்து சேறு
பூசிக்கொள்வது போலச் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளப் புகுந்து பாவந்
தேடிக்கொள்வது புத்தி யன்று.
18. எவ்வகைப்பட்ட சிவலிங்கம் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல்
வேண்டும்?
சிவாகம விதிவிலக்குகளை ஆராய்ந்து, சிவலிங்கங்களைப் பரீ?க்ஷ செய்து, யாதொரு
குற்றமும் இல்லாததாய் நல்லிலக்கணங்கள் அமையப்பெற்றதாய் உள்ள சிவலிங்கத்தையே
பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.
19. க்ஷணிக லிங்கமாவது யாது?
பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாம்.
20. க்ஷணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?
மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்ஷம், சந்தனம்,
கூர்ச்சம், புஷ்பமாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.
21. மேலே சொல்லப்பட்ட பத்துச் சாதியாருள் அங்ககீனரும்
மற்றைச் சாதியாருஞ் சிவபூசை பண்ண லாகாதா?
தங்கள் தங்கள் அதிகாரத்திற் கேற்ப ஆசாரியர் பண்ணிய தீ?க்ஷயைப் பெற்றுத் தூல
லிங்கமாகிய தூபியையேனுந் திருக்கோபுரத்தையேனும் பத்திர புஷ்பங்களால் அருச்சித்துத்
தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதே அவர்களுக்குச் சிவபூசை; சூரிய விம்பத்தின் நடுவே
சதாசிவமூர்த்தி அநவரதமும் எழுந்தருளி யிருப்பர் என்று நினைந்து அவருக்கு எதிராகப்
புட்பங்களைத் தூவித் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதும் அவர்களுக்குச் சிவபூசை.
22. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது
புசிக்கின் என்னை?
பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம்
புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்குஞ் சமம்; அப்படிப் புசித்தவனைத் தீண்டல்
காண்டல்களும் பாவம். ஆதலால், ஒரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவன், ஆசாரியரை
அடைந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.
23. ஞானநிட்டை யுடைவர் சிவபூசை முதலிய நியமங்களைச் செய்யாது
நீக்கிவிடலாமா?
நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவர் அறியாமற்றானே நீங்குதல் போல,
ஞானநிட்டையுடையவருக்குச் சிவபூசை முதலிய நியமங்கள் தாமே நீங்கிற் குற்றமில்லை;
அப்படி யன்றி அவர் தாமே அவைகளை நீக்குவாராயின், நரகத்து வீழ்தல் தப்பாது.
24. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டவர் சனன மரணா
செளசங்களில் யாது செய்தல் வேண்டும்?
திடபத்தி யுடையவர் ஸ்நானஞ் செய்து, ஈர வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, தாமே சிவபூசை
பண்ணலாம்; ஸ்நானஞ் செய்தமை முதற், பூசை முடிவுவரையுந் தாமரையிலையில் நீர் போல அவரை
ஆசெளசஞ் சாராது. திடபத்தி யில்லாதவர், ஆசெளசம் நீங்கும் வரையும் தம்முடைய
ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச்
செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்துகொண்டு, அப்பூசை முடிவிலே புறமண்டபத்தி
னின்று புட்பாஞ்சலித்திரயஞ் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
(அந்தரியாகம்-உட்பூசை)
25. வியாதினாலே தங் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது
செய்தல் வேண்டும்?
தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய
பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.
26. சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொண்ட பெண்கள் பூப்பு
வந்தபோது யாது செய்தல் வேண்டும்?
மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர ஸ்நானஞ் செய்து கொண்டு, அந்தரியாகஞ் செய்தல்
வேண்டும்; நான்காம் நாள் ஸ்நானஞ் செய்து, பஞ்ச கவ்வியமேனும், பாலேனும் உட்கொண்டு;
மீட்டும் ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்தல் வேண்டும், அம்மூன்று நாளும் அந்தரியாகஞ்
செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.
27. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த
ஆசெளசம், வியாதி இவைகள் வரின், யாது செய்தல் வேண்டும்?
வருணத்தாலுந் தீ?க்ஷயாலுந் தம்மோ டொத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.
28. ஆசெளசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை
செய்வித்தவர் யாவரும், ஆசெளச முதலியவை நீங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறுருச் செபித்துத் தாம் பூசை செய்தல்
வேண்டும்.
29. சிவலிங்க காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?
அந்தரியாக பூசை செய்து, பால் பழம், முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல்
வேண்டும் அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொருலிங்கத்தை ஆசாரியர் பிரதிட்டை செய்துதரக்
கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது
பூசை செய்தல் வேண்டும்.
30. சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷபூசை செய்யத்தக்க காலங்கள்
எவை?
பஞ்சாக்ஷரவியலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களுஞ் சென்மத்திரயங்களுமாம்.
இன்னும் மார்கழி மாச முழுதினும் நாடோறும் நித்திய பூசையே யன்றி அதற்குமுன் உஷக்கால
பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி
இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும் (சென்மத்திரயங்களாவன; பிறந்த
நக்ஷத்திரமும் அதற்குப் பத்தா நக்ஷத்திர்மும், அதற்குப் பத்தா நக்ஷத்திரமுமாம்.)
31. சென்மத்திரய பூசையால் வரும் விசேஷ பலம் என்னை?
சென்மத்திரயந்தோறும் சிவலிங்கப்பெருமானூக்குப் பதமந்திரங்கொண்டு பாலினாலும்
சர்க்கரையினாலும் விசேஷமாக அபிஷேகஞ் செய்து, சுகந்தத் திரவியங்கள் கலந்த சந்தனக்
குழம்பு சாத்திப் பாயச முதலியன நிவேதனஞ் செய்துகொண்டுவரின், உற்பாதங்களும்,
பயங்கரமாகிய கிரக பிடைகளும், சகல வியாதிகளும் நீங்கும்.
திருசிற்றம்பலம்