கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை
 

4. சிவ மூலமந்திர இயல்
 

1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).

2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

4. எந்த திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?

கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேணும் இருந்து செபித்தல் வேண்டும்.

5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

6. எப்படி இருந்து செபித்தல் ஆகாது?

சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.

7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?

சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.

8. நிற்கும் பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே பதித்தல் வேண்டும்?

உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல் வேண்டும்.

9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?

வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்தல் வேண்டும்.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்

Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top