கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை
 

3. விபூதி இயல்-1
 

1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?

சைவசமயம்.

2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?

விபூதி.

3. விபூதி ஆவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.

4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெள்ளை நிற விபூதி.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?

தரிக்கல் ஆகாது.

10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?

நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?

மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.

12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?

முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)

15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.

16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.

17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

(அங்குலம் = 2.5 செ.மீ)

18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.

ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்

Home Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top