உ
கணபதி துணை
தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்
சைவ வினாவிடை
1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள்
எவை?
வேதம், சிவாகமம் இரண்டுமாம்.
2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?
புண்ணியங்கள்.
3. புண்ணியங்கள் ஆவன யாவை?
கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை
வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல்
முதலானவைகள்.
4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.
5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?
பாவங்கள்.
6. பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம்,
சூதாடுதல் முதலானவைகள்.
7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.
திருசிற்றம்பலம்