உ
கணபதி துணை
தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்
சைவ வினாவிடை
1. நாடோறும் நியமமாக எந்த நேரத்தில் நித்திரை விட்டெழுதல்
வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை விட்டெழுதல் வேண்டும்.
2. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
விபூதி தரித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்து கொண்டு பாடங்களைப் படித்தல்
வேண்டும்.
மலசமோசனம்
3. அதற்குப் பின் யாது செய்யத் தக்கது?
மலசல மோசனஞ் செய்யத்தக்கது.
4. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்?
திருக்கோயிலுக்குத் தூரமாய் உள்ள தனி இடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்.
5. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் ஆகாது?
வழியிலும், குழியிலும், நீர்நிலைகளிலும், நீர்க்கரையிலும், கோமயம் உள்ள இடத்திலும்,
சுடுகாட்டிலும், பூந்தோட்டத்திலும், மரநிழலிலும், உழுத நிலத்திலும், அறுகம்
பூமியிலும், பசு மந்தை நிற்கும் இடத்திலும், புற்றிலும், அருவி பாயும் இடத்திலும்,
மலையிலும், மலசலங் கழித்தல் ஆகாது.
6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல்
வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல்
வேண்டும்.
7. எப்படி இருந்து மலசலங் க்ழித்தல் வேண்டும்?
தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு
மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.
சௌசம்
8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ்
செய்தல் வேண்டும்.
9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?
மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு
மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு
கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால்
வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.
10.இப்படி செய்தபின் யாது செய்தல் வேண்டும்?
அவ்விடத்தை விட்டு வேறொரு துறையிலே போய், வாயையும், கண்களையும், நாசியையும்,
காதுகளையும், கை கால்களில் உள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத் தரஞ் சலம்
வாயிற்கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்தல் வேண்டும்.
11.வாய் கொப்ப்ளித்த பின் யாது செய்தல் வேண்டும்?
தலைக்கட்டு இல்லாமல் மூன்று முறை ஆசமனஞ் செய்தல் வேண்டும்.
12.ஆசமனம் எப்படி செய்தல் வேண்டும்?
வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டு, பெருவிரல் அடியில்
சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.
13.சௌசத்துக்குச் சமீபத்தில் சலம் இல்லையானால் யாது செய்தல்
வேண்டும்?
பாத்திரத்திலே சலம் கொண்டு, ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசலங் கழித்து சௌசஞ்
செய்து விட்டு பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலங்கொண்டு, வாய் கொப்ப்ளித்துக் கால்
கழுவுதல் வேண்டும்.
தந்த சுத்தி
14.சௌசத்துக்குப் பின் யாது செய்யத்தக்கது?
தந்தசுத்தி செய்யத் தக்கது.
15.எதனாலே தந்த சுத்தி செய்தல் வேண்டும்?
சலத்தினாலே கழுவப் பெற்ற பற்கொம்பினாலேனும், இலையினாலுலேனுந் தந்த சுத்தி செய்தல்
வேண்டும்.
16.எந்தத் திக்கு முகமாக இருந்து தந்த சுத்தி செய்தல்
வேண்டும்?
கிழக்கு முக்மாகவேனும், வடக்கு முகமாகவேனும், இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்.
17.தந்த சுத்தி எப்படி செய்தல் வேண்டும்?
பல்லின் புறத்தேயும் உள்ளேயும் செவ்வையாகச் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப்
பிளந்து, அவற்றினாலே நாக்கை வழித்து இடப்புறத்திலே போட்டு விட்டு, சலம் வாயிற்
கொண்டு பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங்
கழுவுதல் வேண்டும்.
18.நின்று கொண்டாயினும் இருந்து கொண்டாயினும் தந்த சுத்தி
பண்ணலாமா?
பண்ணல் ஆகாது.
ஸ்நானம்
19.தந்த சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?
ஸ்நானஞ் செய்யத்தக்கது.
20.ஸ்நானஞ் செய்யத்தக்க நீர் நிலைகள் யாவை?
ஆறு, ஓடை, குளம், கேணி, மடம் முதலியவையாம்.
21.ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?
கௌபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்டியைத்
தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி, செவ்வையாகத் தேய்த்துக்
கொள்ளல் வேண்டும்.
22.எவ்வளவினதாக ஆகிய சலத்தில் இறங்கி ஸ்நானஞ் செய்தல்
வேண்டும்?
தொட்பூழ் அளவினதாகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
23.எந்த திக்கு முகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?
நதியிலே ஆனால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவற்றிலே ஆனால் வடக்கு
முகமாகவேனும் நின்றும் ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
24.சலத்திலே எப்படி முழுகல் வேண்டும்?
ஆசமனஞ் செய்து, இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும்
இரண்டு கட்டு விரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக்
கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.
25.இப்படி முழுகின உடனே யாது செய்தல் வேண்டும்?
ஆசமனஞ் செய்து கொண்டு, கரையில் ஏறி, வேட்டியைப் பிழிந்து தலையில் ஈரத்தைத் துவட்டி,
உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பில் உள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை
முடித்து, ஈரக் கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்த கௌபீனத்தைத் தரித்து, இர்ண்டு
கைகளையுங் கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஈர வஸ்திரத்தையும்
கௌபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடவேண்டும்.
26.சிரஸ்நானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
கண்ட ஸ்நானமேனும், கடிஸ்நானமேனுஞ் செய்தல் வேண்டும்.
27.கண்ட ஸ்நானம் ஆவது யாது?
சலத்தினாலே கழுத்தின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம்
படிம்படி துடைப்பது.
28.கடி ஸ்நானமாவது யாது?
சலத்தினாலே அரையின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம்
படும்படி துடைப்பது.
அநுட்டானம்
29.ஸ்நானத்துக்குப்பின் யாது செய்தல் வேண்டும்?
சுத்த சலம் கொண்டு அநுட்டனம் பண்ணி பஞ்சாக்ஷர செபஞ் செய்து தோத்திரம் பண்ணல்
வேண்டும்.
போசனம்
30.அநுட்டானத்திற்குப்பின் யாது செய்யத்தக்கது?
போசனஞ் செய்யத்தக்கது.
31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?
மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும்
உள்ளவர்.
32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர்
இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.
33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?
போசனம் பண்ணல் ஆகாது.
34.எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?
கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.
35.போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?
வாழையிலை, பலாவிலை, புன்னையிலை, பாதிரியிலை, தாமரையிலை என்பனவாகும்.
36. போசன பாத்திரங்களை யாது செய்தபின் போடல் வேண்டும்?
சலத்தினாலே நன்றாகக் கழுவியபின் போடல் வேண்டும்.
37.வாழையிலையை எப்படிப் போடல் வேண்டும்?
தண்டு உரியாமல் அதனுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.
38. இலை போட்ட பின் யாது செய்ய வேண்டும்?
அதிலே சலத்தினாலே பரோஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவற்றைப் படைத்தல்
வேண்டும்.
39. போசனம் பண்ணும் போது எப்படி இருத்தல் வேண்டும்?
வீண்வார்த்தை பேசாமலும், சிரியாமலும், தூங்காமலும், அசையாமலும், கால்களை மடக்கிக்
கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.
40. போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும்?
அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறகப் பிரித்துப்
பருப்பு, நெய்யோடு பிசைந்து சிந்தாமல் புசித்தல் வேண்டும். அதன்பின் சிறிது முன்போல்
பிரித்து, புளிக்கறியோடு ஆயினும் இரசத்தோடு ஆயினும், பிசைந்து, புசித்தல் வேண்டு.
அதன்பின் மோரோடு பிசைந்து, புசித்தல் வேண்டும். கறிகளை இடயிடையே தொட்டுக் கொள்ளல்
வேண்டும். இலையிலும் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனும்,
தண்ணீரேனும் பானம் பருகல் வேண்டும்.
41. போசனம் பண்ணும் போது உமியத்தக்கதை எங்கே உமிழ்தல்
வேண்டும்?
இலையின் முற்பக்கத்தை, மிதத்தி, அதன் கீழ் உமிழ்தல் வேண்டும்.
42. போசனம் பண்ணும் போது மனத்தை எதிலே இருத்துதல் வேண்டும்?
சிவபெருமானுடைய திருவடியிலே இருத்துதல் வேண்டும்.
43. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து வீட்டுக்குப் புறத்தே போய்க் கைகளைக் கழுவி, சலம் வாயிற் கொண்டு, பதினாறு
தரம் இடப்புறத்திலே கொப்புளித்து, வாயையும் கைகளையும் கால்களையும் கழுவுதல் வேண்டும்.
44. உச்சிட்டத்தை எப்படி அகற்றல் வேண்டும்?
இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கழுவிக்கொண்டு, உச்சிட்டத்தானத்தைக் கோமயஞ்
சேர்ந்த சலந்தெளித்து மெழுகிப் புறத்தே போய்க் கழுவிவிட்டுப் பின்னும்
அந்தத்தானத்தில் சலந்தெளித்து விடல் வேண்டும்.
45. உச்சிட்டத்தானத்தை எப்படி மெழுகுதல் வேண்டும்?
இடையிலே கையைஎடாமலும், முன்பு தீண்டிய இடத்தை பின்பு தீண்டாமலும், புள்ளி இல்லாமலும்
மெழுகுதல் வேண்டும்.
படித்தல்
46. போசனத்திற்குப் பின் யாது செய்யத்தக்கது?
உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத்தக்கது.
இரவிற் செய்யுங் கருமம்
47. சூரியன் அஸ்தமிக்கும் போது யாது செய்தல் வேண்டும்?
மலசல விமோசனஞ் செய்து, சௌசமும் ஆசமனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவபெருமானை
வணங்கித் தோத்திரஞ் செய்து கொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித்தல் வேண்டும்.
48. அதன்பின் யாது செய்தல் வேண்டும்?
போசனஞ் செய்து, நூறு தரம் உலாவி, சிறிது நேரஞ் சென்றபின், சயனித்தல் வேண்டும்.
49. எப்படிச் சயனித்தல் வேண்டும்?
கிழக்கே ஆயினும், மேற்கே ஆயினும் தலைவைத்து, சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டு
வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும். வடக்கே தலை வைத்தல் ஆகாது.
50. எப்போது எழுந்து விடல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.
திருசிற்றம்பலம்